ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே
காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே
தைவீஸ்வஸ்திரஸ்துந: ஸ்வஸ்திர் மானுஷேப்ய:
ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்
சன்னோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
‘யார் மங்கலத்தை நல்குபவரோ அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறோம், வேள்வி (யக்ஞம்) சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம்.
நமக்குத் தேவதைகள் நன்மை புரியட்டும்.
மக்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடிகொடிகள் நன்கு வளரட்டும்.
நம்மிடமுள்ள இரண்டு கால் உயிர்களுக்கு மங்கலம் ஏற்படட்டும். நான்கு கால் பிராணிகளுக்கு நன்மை உண்டாகட்டும்.’
இந்த வேத மந்திரம் கூறும் பிரார்த்தனையின் விளக்கம் பொங்கல் பண்டிகைக்கு நன்கு பொருந்துகிறது.
பொங்கல் நான்கு நாள் பண்டிகை. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல். இந்த விழா அமைப்பைக் கவனித்தால், மேற்கூறிய மந்திரம் கூறுவது போல தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய அனைவருடனும் நாம் இணங்கியிருப்பது என்றென்றும் அவசியம் என்பது புரியும்.
போகிப்பண்டிகை - அகங்காரத்துறவு:
தேவர் தலைவனான இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர். அவனை வழிபட்டால் திருப்தி, மகிழ்வு, போகங்கள் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மழைக்கடவுளான வருணன் இந்திரனுக்கு அடங்கியவன். சரியான அளவு மழை பெய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். விவசாயம் செழிக்கும். இதனால் மழை, செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை வேண்டி இந்திரனைக் கொண்டாடுதல் பழமையான வழக்கம்.
ஆயர்ப்பாடி மக்கள் ஆண்டுதோறும் மழைக்காக இந்திரனை வழிபட்டு வந்தனர். அதனால் இந்திரன் அகங்காரம் கொண்டான். கண்ணன் அதைப் போக்க எண்ணி ஆயர்களிடம் ‘நமக்கு எல்லா வளங்களையும் நல்கும் கோவர்த்தன மலையே பூஜைக்குரியது; இந்த ஆண்டு அம்மலைக்கு நன்றி கூறிப் பூஜிப்போம்’ என்றார்.
ஆயர்குல மக்களும் அவ்வாறே கோவர்த்தன கிரியைப் பூஜித்தனர். தனக்கு வழக்கமாகச் செய்யப்படும் பூஜை நிறுத்தப்பட்டு மலைக்குப் பூஜை நடப்பது கண்டு கோபமுற்ற இந்திரன் வருணனுக்கு ஆணையிட்டுப் பெரும் மழையைத் தோற்றுவித்தான்.
இதனால் பயந்த இடைக்குலத்தினர் கிருஷ்ணரைச் சரண்புகுந்தனர்.அவரும் அனாயாசமாக கோவர்த்தன மலையைத் தம் இடக்கைச் சுண்டு விரலால் தூக்கிக் குடையாய்ப் பிடித்து அனைவரையும் காத்தார்.
தொடர்ந்து ஏழு நாட்கள் இப்படிச் செய்து வந்தார். தன் உதவியின்றி அனைவரையும் காக்கவல்ல பரமனிடம் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான் இந்திரன். அவன் மனம் திருந்தியது கண்டு மகிழ்ந்த கண்ணனோ, ‘‘இனி இந்தப் பண்டிகை உன் பெயராலேயே வழங்கப்படும்’’ என்று வரமளித்தார்.
ஆதலால் இந்திரனின் பெயரான போகி என்று அழைக்கப்படும் இந்த விழா ‘அகந்தை அழிக்கப்பட வேண்டும், தீய குணங்கள் எரிக்கப்பட வேண்டும்’ என்பதைக் குறிக்கிறது.
அன்பு, அறிவு, ஆன்ம பலம் ஆகியவை பொங்க வேண்டுமாயின் முதலில் அகந்தை ஒழிய வேண்டும். போகிப் பண்டிகையன்று வெறும் குப்பையைக் கொளுத்துவதைவிட நமது அகங்காரக் குப்பையைக் கொளுத்துவது சிறந்தது.
பீடாவையும் வெற்றிலை பாக்கு போடுவதையும் துறப்பதைவிட அகங்காரத்தை மனிதன் துறக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். ஏனெனில் அகங்காரத் துறவு ஆண்டவன் உறவு என்பது அவர் காட்டிய தெளிவு.
சூரிய பகவானைப் போற்றும் பொங்கல்திருநாள்:
உயிர் போன்ற நெல்லையும், நீரையும் சேர்த்து நமக்கு உயிரளித்த கடவுளுக்குப் படைப்பது பொங்கல்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தேவர்களின் பகல் பொழுது தை மாதம் முதல் ஆறு மாதங்கள். தை மாதத்தில் செய்யத் துவங்கும் அனைத்துச் செயல்களும் மங்களமாகவே நிறைவு பெறுவது பொங்கல் விழாவின் தாத்பர்யம். தேவர்களைத் துதிப்பது பொங்கலன்று செய்யப்படும் முக்கிய வழிபாடு.
உலகுக்கே கண்கண்ட தெய்வமாகவும் விளங்குபவன் கதிரவன். ரிக் வேதம் மூன்று அக்னிகளில் ஒன்றாகக் கதிரவனைக் குறிப்பிடும். சூரியன் எல்லா வடிவமாகவும், பிராணனாகவும், அக்னியாகவும், ஒளியாகவும், சக்தியாகவும் உள்ளான். பிரபஞ்சத்திற்கு ஒளி, உஷ்ணம், சக்தி ஆகியவற்றைப் பல கோடி ஆண்டுகளாக அளித்து வருகிறான்.
இதய நோய், காமாலை நோய் ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் உள்ளவன் சூரியன் என்கிறது அதர்வண வேதம். மக்களைச் செயல் புரியுமாறு தூண்டி, சோம்பல், அறியாமை ஆகியவற்றை நீக்குபவன் சூரியன். சூரியனைத் தினமும் காயத்ரி மந்திரத்தின் மூலம் வழிபடுகின்றோம்.
‘யார் நமது மேலான அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச் சுடர் கடவுளின் ஒளியை தியானிப்போம்’ என்பது காயத்ரி மந்திரம்.
சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது மரபு. இப்படி நாம் உலகியல் ரீதியில் செய்யும் பொங்கலை, சான்றோர் எவ்வாறு கூறுவர் தெரியுமா?
மதுரச்சோறு
சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நிதி முறையைச் சேர்ந்த ஒரு சைவ மகான். அவர் நாம் தை முதல் தேதி மட்டுமல்லாமல் தினமும் பொங்கல் படைக்க வேண்டும் என்கிறார். அதுவும் எப்படி?
பொங்கல் செய்பவர் மூன்று கற்களை அடுக்கி அடுப்பாக்குவர். அன்பு, பொறுமை, ஆசையின்மை ஆகிய மூன்று நற்பண்புகளைக் கொண்டு அடுப்பு செய்ய வேண்டும் என்கிறார் சுவாமிகள். அடியவரது நற்பண்புகள் அடுப்பாகிவிட்டன.
அடுப்பு மட்டும் போதுமா? விறகு, அக்னி, பானை வேண்டுமே. விறகு நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள். விறகைப் பற்ற வைக்க நெருப்புக்கு என்ன செய்வது? ஞானமே அக்னி. ஞானாக்னி தோன்றியதும் மாயை, கன்மம், ஆணவம் ஆகியவை எரிந்துவிடும்.
ஆன்மா - உயிர் என்ற பானையை அடுப்பில் வைத்து அதனுள் நமது நல்லது, கெட்டது அனைத்தையும் இடச் சொல்கிறார்.
இப்படிச் சமைக்கும்போது நம் மனம் பக்குவப்பட்டுவிடும். சமைத்தல் என்றாலே பக்குவப்படுத்துதல் என்று பொருள். பொங்கல் ருசியுடனிருக்க வெல்லம், சர்க்கரை ஆகியவை இடாது கருப்பஞ்சாறு இடுவது வழக்கம். இறையருள்தான் கருப்பஞ்சாறு. இது சேர்ந்ததும் கிடைப்பது மதுரச்சோறு.
பக்குவப்பட்ட நம் குணங்களில் நிலைத்து நின்று இறையருள் கூடும்போது கிடைப்பது பிரம்மானந்தம். அதுவே மதுரச்சோறு என்கிறார் சுவாமிகள். ஆக இப்படி நம்மை நாம் நன்கு சமைத்துக் கொண்டு பிரம்மானந்தம் பெற வேண்டுமென்பதே தைப் பொங்கலின் ஆன்மிகத் தாத்பர்யம்.
விலங்குகளுக்கு நன்றி கூறும் மாட்டுப்பொங்கல்:
விலங்குகளில் முக்கியமான பசுவிற்குப் பூஜை செய்வதன் மூலம் அனைத்து விலங்குகளுக்கும் நன்றி கூறும் தினம். விலங்குகள் கீழானவை என்று நினைக்கிறோம். ஆயினும் அவை நம்மைவிட வாய்ப்புகள் குறைந்தவையே, கீழானவை அல்ல.
இந்தோனேஷியாவில் புத்த பிக்ஷுக்களால் வளர்க்கப்படும் புலிகள் அவர்களைத் தங்கள் மீது ஏற அனுமதிக்கின்றன. அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றன. நாம் அதிகமான அன்பை வெளிப்படுத்தும்போது, விலங்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. கொடிய விலங்குகளே இப்படியென்றால் சாதுவான மிருகங்கள் எப்படிப் பழகும்!
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக ஐதீகம். முற்காலத்தில் அதிதி பூஜை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தினமும் வீட்டில் பூஜை முடிந்து சாப்பிடுமுன் வெளியே சென்று அன்றைய அதிதிக்காகக் காத்திருக்கக் கூறுகிறது சாஸ்திரம். எவ்வளவு நேரம் அப்படிக் காத்திருக்க வேண்டும்?
மடி நிறைந்த பசுவினைக் கறக்க ஆகும் நேரம் வரை, விருந்தாளிக்காகக் காத்திருக்க வேண்டும். இதன்மூலம் நம் முன்னோரின் ஒவ்வொரு வீட்டிலும் பசு இருந்தது, அவற்றை அவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தினர் என்பது புரிகிறது.
இப்படிப் புராணங்கள் பசு மாடுகளைப் போற்றுவதைத் தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. பசு இயற்கையாக இறந்த பின் அதன் கொம்பைச் சேகரித்து, அதன் உள்ளிருக்கும் துளையில் பசுஞ்சாணம் இட்டுப் பூமியில் புதைக்க வேண்டும். ஆறு மாதத்திற்குப் பிறகு அந்த மட்கிய பசுஞ்சாணத்தை வெளியில் எடுத்து வயலுக்குப் பயன்படுத்தினால் அது மிகச் சிறந்த இயற்கை உரமாகிறது.
மாட்டின் கொம்பு வான்வெளியில் உள்ள பல சக்திகளைக் கொம்பின் மூலம் ஆகர்ஷிக்கிறது. அப்படிச் சேகரித்ததைத் தன் காலடி வழியாகப் பூமியில் செலுத்துகிறதாம்.
பசுமாட்டின் கொம்புக்குச் சக்தியைச் சேகரித்து வைக்கும் தன்மை உள்ளது. பசுஞ்சாணத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம். இது இயற்கையில் உருவாகும் நுண்ணுயிர்களுக்கும் பயிர்களுக்கும் உதவும். இவ்வாறு அதிசய சக்தியுள்ள பசுவின் கொம்புச் சாண உரம் மிகக் குறைந்த அளவே நீரில் கரைத்து ஊற்றினாலும் நிலத்தின் உயிர்ச்சத்து அதிகரிக்கும்.
இப்படிப் பல சிறப்புகளை உடைய பிராணிக்கு நன்றி பாராட்டும் தினமே மாட்டுப் பொங்கல். பல இல்லங்களில் ‘கனு’ என்ற பெயரில் பறவைகளுக்கு சித்திரான்னம் வைப்பர். பெண்கள் தங்கள் பிறந்த வீட்டிற்காகப் பிரார்த்திப்பர். மாடு வைத்திருப்போர் பூஜை செய்வர். மாட்டின் கொம்புகளில் புது வஸ்திரம் சுற்றுவர். மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளும் அன்று நடைபெறும்.
அனைவரிடமும் ஆசி பெற வைக்கும் காணும்பொங்கல்:
பொங்கல் திருவிழாவின் கடைசி நாள் காணும் பொங்கல். பெரியவர்களிடம் நேரில் சென்று ஆசி பெறும் நாள். அன்று சுற்றத்தாரிடமும் நண்பரிடமும் சென்று பழகி மகிழும் தினம். பிறரிடம் இணைந்து இருந்து அவர்களது நற்பண்புகளைக் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாள்.
இப்படி அகந்தை அகன்று தூய மனத்தினராகி தேவர்களையும், மிருகங்களையும், சகமனிதர்களையும் மதித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் வேதம் கூறும் வாழ்க்கை முறை.
பொங்கல் விழா அந்த வாழ்க்கை முறையை உணர்த்துகிறது. வளம் பெருகி, ஆரோக்கியம் நிறைந்து எல்லா நல்ல உறவுகளுடன் இணங்கி வாழ்ந்து ஆனந்தம் பொங்க இறைவன் நம் எல்லோருக்கும் அருளட்டும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
13.01.2024
சனிக்கிழமை