கொரோனா காலத்தில்
கடவுளுக்கு ஓர் அவசர மெயில்!
-சுவாமி விமூர்த்தானந்தர்
* இறைவா!
கொரோனா வந்த பின்
இயற்கை எழில் கூடியது.
வானம் தெளிவானது.
நதிகள் தூய்மையாயின.
தெருக்களில் குப்பை இல்லை.
வீடுகள் கோவிலாகின்றன.
* உண்மை. கடவுளே, உன் கருணை கொரோனாவாக வந்ததோ!
புரிகிறது பகவானே!
கொரோனாவும் உனது லீலை என்று.
ஆனால், எங்களைச் சீர்செய்ய இந்தச் சோதனை
பெரும் வேதனைக்கல்லவா கொண்டு செல்கிறது?
* உன்னிடம் புலம்பாமல் வேறு எவரிடம் புலம்பினாலும்
மருத்துவச் சோதனை நிச்சயம்;
சில தினங்கள் தனிமை சத்தியம்!
* மனித மனங்கள் அடங்க மறுத்தால் இறைவா,
நீ கருணையுடன் கற்றுத் தர வேண்டாமா?
மனிதனை அடக்க ஊரடங்கே உத்தமம் என நினைத்தாயோ?
* பணி இல்லை, பணம் இல்லை,
பயம் மட்டுமே உன்னைப் போல் வியாபித்துள்ளது!
ஊரடங்கினால் எங்கள் உள்ளங்கள் அடங்கிவிடுமோ?
வீடுகளில் இருந்து ஆனந்தம் பெற வீடுபேறா தந்துவிட்டாய்?
* பிற்காலத்தில் பிழைப்பு நடத்தத்தானே
நம் இன்றைய படிப்பும் பட்டமும்.
ஆசிரியர்களின் ஆன்லைன் திணறல், அதனால்
மாணவர்களின் முனகல்.
* கொரோனா ஆட்டம் போடும்போது
இதுவரை கற்றதில் எது எங்களுக்குப் பயன்பட்டது?
விதவிதமாய் பயப்படுவதைக் கற்றுத் தருவதுதானா நம் கல்வி?
இனியாவது நம் பிள்ளைகள் வாழ்வது பற்றிக் கற்கச் சொல் கந்தா!
* புற நிவாரணங்கள் எல்லாம் எங்களைப் புறக்கணித்தாலும்
தளராத எங்களை நீயும் மறக்கலாமோ?
* கொத்துக் கொத்தாய் நாங்கள்
செத்து வீழ்வது உனக்குச் சம்மதமோ?
அநியாயம் செய்பவர்கள் ஆயிரத்தில் இருக்க,
குறிபார்த்து நல்லவர்களை எமனுக்கு இரையாக்குவது நியாயமா?
* எங்களுக்கு வேண்டியவர்களை உன்னோடு அழைத்துக்கொண்டால்,
எங்களுக்கு வேண்டியவர் நீ என்று உன்னைக் கூற முடியுமா?
* அல்பமாகச் சொந்தங்கள் ஆல்பமாகும்போது
'தெய்வமே நீ இருக்கிறாயா' என்று மனிதன் கேட்க மாட்டான்.
நீ இல்லை என்று நம்ப ஆரம்பிப்பான்.
பக்தர்களை இழப்பதில் உனக்கு மகிழ்ச்சியா, பகவானே?
* நோயால் செத்தவனைவிட
பயத்தால் சாகிறவனே அதிகம்.
பயந்த பூச்சியாக எங்களை வைத்திருப்பது
உன் இச்சையோ, ஆண்டவா?
* மானமுள்ள பலரும் உணவுக்காக் கூசிக் கையேந்தும் நிலை இன்று!
உன்னை நோக்கிக் கூப்ப வேண்டிய கை
அன்னம் நோக்கித் தெருவில் நீளலாமோ?
* பிராணநாதா, எங்குமுள்ள நீ
சிலரது சுவாசப்பையில் சுத்தமாக இல்லையே, ஏன்?
சுவாசப்பை சுத்தமில்லை என்றா?
சுவாசிப்பவன் திடமில்லை என்றா?
* பகவானே, ஒரு தொற்று நோயைத் தடுக்க உன் சாமிக்குச் சக்தியில்லை என
நாத்திகன் பேசினால்
அந்த அவமானத்தை நாங்கள் சுமக்கணுமா?
* கொரோனா மூன்றாம் அலையும் வருமாம்.
பயமுறுத்துவதே மெத்தப் படித்தவர்களின் வேலை.
பயப்படுவதே நம் பணியாயிடுமோ?
* கடவுளே, எத்தனை அலை வந்தாலும்
உன் கருணையலைகளில் ஒன்றையாவது எங்கள் மீது பொழி.
கொரோனா உன்னை மீறிய சக்தியா என்ன?
மக்கள் மகிழ, மன்னுயிர் சிறக்க
கொரோராணாவைக் கட்டி வை,
எங்கள் மீது கருணை வை!
சுவாமி விமூர்த்தானந்தர்
26 மே, 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்