கொரோனா காலத்தில்
தனிமையை இனிமையாக்குங்கள்!
- ஓர் ஆன்மிக வழி
கோவிட்- 19 நோய் தொற்றினால் பலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் தனிமையில் வாடுகிறார்கள்.
வயிற்றைக் கலக்கும் வாட்ஸ்அப் செய்திகள், அரைகுறை வைத்தியர்களின் அவசர அறிவுரைகள், பீதியையும் பரபரப்பையும் கிளரும் மீடியாக்கள், பணமின்மையால் குடும்பம் படும் அவஸ்தை, தனக்கு வந்த தொற்று தன் குடும்பத்தைத் தொற்றிவிடக் கூடாது என்ற பயம்.
பயம் கூடுவதால் உடல் மற்றும் மனதின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. வாழ்க்கையே வீணாகிவிட்டது போல் ஒரு கலக்கம். தலைக்கு மேலே நம்மை விழுங்கக் காத்திருக்கும் மலைப்பாம்பும், காலைச் சுற்றிக் கருநாகமும் இருப்பதுபோல் ஒரு பீதி பலரையும் கலக்கி வருகிறது.
இப்படிப்பட்ட நேரத்தில் பக்தர்கள் தனிமையை இனிமையாக்குவது எப்படி?
தனிமை என்பது மயான அமைதி;
தனிமையில் சுகம் பெறுபவர் யாருமில்லை. மாறாக, சஞ்சலமற்ற, அமைதியான, பரபரப்பற்ற, ஒரே சிந்தனையுடன் இருக்கும் நிலையான ஏகாந்தத்தில் இருப்பவர்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் ஆற்றலையும் உணர்கிறார்கள்.
தனிமை சிறை போன்றது; ஏகாந்தமோ நிறைவானது. நிறைப்பது. எதனால் நமது மனதையும் நேரத்தையும் வாழ்க்கையையும் நிறைப்பது? என்பதில்தான் நாம் இந்தத் தொற்று நோயிலிருந்து துணிவாக வெளிவர முடியும்.
மனது புறமுகமாகப் போவதில் மனிதன் சக்தியை இழக்கிறான். அகமுகமாக அவனது மனம் திரும்பினால் அனைத்து சக்திகளுக்கும் அவன் அதிபதி ஆகிறான். இந்த உண்மை கொரோனா தேவி சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டுமா என்ன?
பக்தர்களே, உங்களது தனிமை அயர்ச்சியும் போரடிப்பதும் விலகிட, நீங்கள் புது உற்சாகம் பெற..... இந்த ஒரு சிறு முயற்சி செய்து உங்களை ஏகாந்தத்தில் வாழ வாருங்கள் என அழைக்கிறோம்.
பக்தர்கள் மற்றும் துறவிகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலோ, வீட்டிலோ சிரமப்படும்போது அவர்களின் அறையில் அவர்கள் வணங்கும் தெய்வத்தின் திருவுருவத்தை வைப்பது இந்து மரபு. 'உடலும் அதன் நிழலும் ஒன்று- காயா சாயா ஏக்' என்று அன்னை ஸ்ரீ சாரதா தேவி கூறுகிறார்.
தெய்வத்திரு உருவையோ அல்லது உங்களது குருவின் படத்தையோ நோயாளியின் அறையில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பல.
1. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் தனது இஷ்டதெய்வத்தைக் காண்பார்!
கொரோனா வைரஸ் எங்கும் இருக்கிறது என்பதை மனிதன் நம்புகிறான். ஆனால் தெய்வம் எங்கும் இருக்கிறார் என்பதை நம்புகிறானா?
தொற்றுள்ள நபர் வீணான பீதியில் அவதிப்பட்டு யார் யாரையோ வேண்டி நிற்கிறார்; உதவி செய்ய இயலாத நிலையில் பல மருத்துவர்கள் உட்பட பலரையும் நம்பி அவர் ஏங்குகிறார். ஏமாறுகிறார். இவ்வாறு சஞ்சலமும் பயமும் வந்து அவரைத் துன்புறுத்தும் நேரத்தில் தெய்வத்தின் அல்லது அவரது குருவைப் பார்க்கும்போது அவரிடத்தில் புது நம்பிக்கை பிறக்கும்.
அவர்களது சிரமங்களை அவர்கள் வணங்கும் இஷ்டதெய்வம் கட்டாயம் தீர்க்கும் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் உதிக்கும்.
பிறரிடம் புலம்புவதைவிட தெய்வத்திடம் பிரார்த்திப்பது பெரும் பலனைத் தரும். பிரார்த்தனைகளால் பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டவர்கள் பலர்.
2. கஷ்ட நிலையிலிருந்து நீங்கள் விடுபட உங்களது இஷ்டதெய்வம் அருள்வார்.
நீங்கள் உங்கள் தெய்வத்தையோ, குருவையோ நம்பிக்கையுடன் பார்ப்பது போல் தெய்வமும் உங்களை ஆர்வத்துடன் கவனிப்பார். தீர்க்க முடியாத விதியின் வலிமையைக்கூட தெய்வ அருள் மற்றும் குருவருள் தீர்த்து வைத்த வரலாற்றை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவற்றைப் பற்றிப் படியுங்கள்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை கபால மோட்சனர் அதாவது தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லமை வாய்ந்தவர் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். தலையெழுத்தையே மாற்ற முடித்தவர் கொரோனா தொற்றைக் கிள்ளுக்கீரையாகத் தூக்கி எறிய மாட்டாரா?
வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று சென்ற மகேந்திரநாத் குப்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் தரிசனத்தால் புது வாழ்க்கையைப் பெற்றார். இவ்வாறு எத்தனையோ மகான்கள் பக்தர்களுக்கு ஆறுதலாகக் கூறியதெல்லாம் உங்கள் நினைவிற்கு வரட்டும்.
'என்னை நம்புவர்களை நான் என்றும் கைவிட்டதில்லை' என்று எந்தக் கடவுள்தான் பக்தனுக்கு உத்தரவாதம் கூறவில்லை? இதை நம்பும் பக்தனாக நாமிருந்தால் கொரோனா மறைந்து கடவுளின் கருணா நமக்குள் பூரிக்குமன்றோ!
3. செவிலியர்களும் மருத்துவர்களும் உங்களது இஷ்டதெய்வத்தைக் காண்பார்கள்.
வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த கொரோனா காலத்தில் செவிலியர்களும் மருத்துவர்களும் மிகுந்த சிரமத்துடன் கடுமையாக உழைக்கிறார்கள். கொரோனா தொற்று பற்றிய அவர்களது நேரடி அனுபவங்களும் அவர்களது வழங்கப்படும் தொடர்ச்சியான பலவிதமான வழிகாட்டுதல்களும் அவர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன.
எப்படியாவது தங்களது நோயாளிகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று சிரத்தையுடன் அவர்கள் கடமை புரிகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உங்களைக் கவனிக்க வரும்போது அவர்கள் உங்களது தெய்வத்தையும் குருவையும் காண்பார்கள். அவர்களே அறியாமல் உங்களது தெய்வத்திடம் அவர்கள் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு வரும்.
அல்லது இவர் சிவ பக்தரா? ஓ, இவர் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் அருள் பெற்றவரா என்று புரிந்துகொண்டு அவர்கள் உங்களை அதிக சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் கூடும்.
சுவாமி உத்தவானந்தர், சென்னை ராமகிருஷ்ண மிஷனின் தலைவராச் சேவையாற்றிவர். கடைசி காலத்தில் அவருக்குப் புற்றுநோய் வந்தது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றானது. ஆபரேஷனுக்கு முன்பு லோக்கல் மயக்க மருந்து தரப்பட்டது.
உடனே சுவாமிகள் முணுமுணுக்க ஆரம்பித்தார். அவருக்கு வலி இருக்கிறது என்று நினைத்த மருத்துவர்கள் மருந்தைக் கூட்ட நினைத்தார்கள்.
ஆனால் அந்த மருத்துவர்களுள் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துப் பக்தர். சுவாமி உத்தவானந்தரும் அவரும் ஒரே குருவின் சீடர்கள். அந்த மருத்துவர் சுவாமிகளின் முணுமுணுப்பை அவதானித்தார். ஆஹா, அது முணுமுணுப்பல்ல, அவரது இஷ்ட மந்திரத்தின் ஒலி என்பதை உணர்ந்தார்.
தங்களிடம் சிகிச்சைக்கு வந்துள்ளவர் ஓர் உத்தமத் துறவி என்பதை அறிந்துகொண்ட அந்த டாக்டர்கள் அதிக சிரத்தையுடன் செயல்பட்டு சிகிச்சை செய்தார்கள்.
4. நீங்கள் தனிமையில் இருக்கும்போது வாட்ஸ்அப் வீடியோ மூலம் உங்களைக் காணும் உங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு உங்களது கடவுள் நம்பிக்கையைக்காட்டுங்கள்.
இலவசமாக அறிவுரை தருபவர்கள், அனுதாபம் என்ற பெயரில் உங்களுக்கு உபத்திரவம் தருபவர்களிடம் கவனமாக இருங்கள்.கொரோனா காலத்தில் அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புபவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.
இப்படிப்பட்டவர்களைச் சமாளிப்பதற்கு நீங்கள் கண்ட, கேட்ட நல்ல செய்திகளையும் சம்பவங்களையும் அவர்களுக்குக் கூறுங்கள். எதிர்மறையாகப் பேசுபவர்களிடம் விஷ ஊசி இருக்கிறதென்றால், உங்களிடம் உயிர் தரும் நம்பிக்கை ஊசி உள்ளதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.
மோசமான இந்தக் காலகட்டத்தில் யாரெல்லாம், எந்த தொண்டு நிறுவனங்கள் எல்லாம் மக்களுக்குத் திறம்பட சேவை செய்கிறார்கள், செய்கின்றன என்பதைப் பாராட்டி அவர்களிடம் பேசுங்கள்.
Oxytocin என்ற ஒரு வேதியியல் சுரப்பி மனித உடலில் உள்ளது. அன்பு, சேவை, பரந்த உள்ளம், பிறர் துன்பம் கண்டு வருந்துவது போன்ற பண்புகள் உள்ளவர்களிடம் இந்தச் சுரப்பி அதிகமாக வேலை செய்கிறது.
குறிப்பாக, யார் மக்களுக்குத் தொண்டு செய்கிறார்களோ, பிறர் படும் துன்பம் கண்டு ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறார்களோ, அவர்களுக்கு ஆக்சிடோசின் அதிகமாகச் சுரக்கிறது. அதனால் ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு அதிகமாக வெளிப்படுகிறது. அது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது அறிவியல் தரும் ஆரோக்கிய அறிவு. ஆகையால் நல்லதைப் பற்றியே பேசுங்கள்; நம்பிக்கை தருபவை பற்றியே சிந்தியுங்கள்.
அடுத்து, உங்களது நலம்விரும்பிகள் யாராக இருந்தாலும் அவர்கள் உங்களை வெற்று உணர்ச்சிப் பிண்டங்களாக மாற்றுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டாம்.
"எவைவெல்லாம் உன்னைப் பலவீனப்படுத்துகிறதோ அவற்றை உனது கால் கட்டைவிரலால்கூட தீண்டாதே" என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளைச் செவிமடுங்கள்.
ஒரு முறை சுவாமி ஆத்மபிரியானந்தரது கண்ணில் ஒரு துல்லியமான அறுவை சிகிச்சை நடந்தது. கடுமையான வலியைப் பொறுக்க முடியாத அவர் கலவரப்படவில்லை. மாறாக, சுவாமி அசோகானந்தரின் ஆன்மிக உரையினை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டார். அந்த உரையின் தலைப்பு: I am not this Body. தேகத்தின் வலியைப் பொறுத்துக் கொள்வதற்கு தேகாத்ம புத்தியைக் கடக்க வேண்டும்.
நமது சூழ்நிலையோ, உடல்நிலையோ எப்படி இருந்தாலும் நமது மனநிலை மேம்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு மேம்படுவதற்கு பகவானின் திருநாமத்தை ஜெபிப்பது மிகச் சிறந்த வழி. வலியை மறக்கடிக்கச் செய்யும் வழி.
5. உங்களை யார் கண்டாலும் காணாவிட்டாலும் இந்த ஒருவர் உங்களை இந்தக் காலத்தில் காண விடாதீர்கள். அவர் யார்?
வயதான ஒரு பக்தர் தமது அந்திம காலத்தில் நோயுற்று அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அமைதியாக உயிர் பிரிய வேண்டும் என்பதற்காக அங்கிருந்தவர்கள் திருப்புகழ் பாடச் சொன்னார்கள்.
ஒரு சிறுவன் அருமையாக திருப்புகழை ஓதினான். முதியவரின் முகத்தில் ஒளி தென்பட்டாலும் அவரது வேதனை குறையவில்லை. இதனை அங்கிருந்த ஒரு சிறந்த துறவி கவனித்து, "தம்பி, திருப்புகழ் ஓதுவதை நிறுத்து" என்றார். ஓதுவது நின்றது, உயிரும் அடங்கியது.
இந்த அற்புதத்தைப் பற்றி அந்தத் துறவி பின்னர் கூறினார்:
'திருப்புகழை ஓத ஆரம்பித்ததும் பெரியவரின் உயிரைக் கவர்ந்து செல்ல அங்கு வந்திருந்த எமதூதர்கள் தயங்கி நின்றதை நான் பார்க்க முடிந்தது. பெரியவரின் காலம் முடிந்துவிட்டது. ஆதலால் திருப்புகழை நிறுத்தச் சொன்னேன். அது நிறுத்தப்பட்டதும் எமதூதர்கள் பெரியவரின் உயிரைக் கவர்ந்து சென்றனர்.'
திருப்புகழை ஓதி எமதூதர்களையே நிறுத்திய அந்த சிறுவன் வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன்.
சிவன் இருக்கும் இடத்தில் எமன் இருக்க மாட்டான். அந்த எமனையோ அல்லது பீதி என்ற உருவில் உலவும் எமதூதர்களையோ உங்களைக் காண விடாதீர்கள். தெய்வ கவசத்தோடு நீங்கள் விளங்கினால் உங்களை எதுவும் அணுகாது.
நிறைவாக ஒரு சம்பவம். சுவாமி வாசுதேவானந்தர் ஒருமுறை வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பலவிதமான சிக்கல்கள், பிரச்னைகள், தொல்லைகள், பயம் போன்றவை அவரைத் திணற அடித்தன. தமது கஷ்டத்தை அவர் அன்னை ஸ்ரீ சாரதாதேவியிடம் கூறினார்.
அதற்கு அன்னை, "குருதேவரின் படம் ஒன்றை எப்போதும் உன் அருகில் வைத்துக்கொள். குருதேவர் எப்போதும் உன் அருகில் உள்ளார்; உன்னை அன்புடன் கவனித்து வருகிறார் என்று நம்பு. எந்தப் பிரச்னை வந்தாலும் அவரிடமே பிரார்த்தனை செய். அதற்கான விடையை அவர் உன் மனதில் தருவதை நீ காண்பாய். அவர் அகத்தில் அல்லவா உள்ளார்.
'ஆனால் மனம் எப்போதும் புறமுகமாக இருப்பதால் அது அகத்தை நாடுவதில்லை. புறத்திலேயே நாடி திரிகிறது. உடல், மனம், சொல் ஆகிய மூன்றும் சேர்ந்து பிரார்த்தித்தால் குருதேவர் அதைக் கேட்கிறார்; உனக்கு வேண்டியதைச் செய்வார். நல்லவர்களிடம் ஒரு விஷயத்தை நூறு முறை சொல்ல வேண்டுமா என்ன?" என்று அன்னை ஸ்ரீ சாரதா தேவி கூறினார்.
அன்பர்களே, எத்தனையோ பிரச்னைகள் நமக்கு வந்தாலும் ஸ்ரீ சாரதாதேவி கூறும் இந்த எளிய வழியைக் கடைபிடித்தால் நீங்கள் எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும்.
நாம் யார் யாரையோ நம்புகிறோம். பலனின்றி அலைகிறோம். இந்த முறை கடவுளைத் திடமாக நம்பிப் பாருங்கள். நிச்சயமாக அவர் உங்களை எல்லாப் பிரச்னைகளிலிலிருந்தும் காப்பாற்றுவார்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
சுவாமி விமூர்த்தானந்தர்
13 மே, 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்