சித்திரையில் சில
திரைகள் விலகட்டும்!
சித்திரை ஒன்றில் தமிழன்னையிடம்
ஒரு வாக்கு தருவோமா?
இன்று நம்மைப் பீடித்திருப்பது
திரைச் சிந்தனைகளும்,
சின்னத்திரையின் சல்லாபங்களுமே.
வெளிமாநிலத்தவர்
தமிழர் பற்றிக் கூறும் குறை இது.
இந்தக் குறை நீங்க சித்திரை நன்னாளில்
தமிழன்னைக்கு வாக்கு தருவோம், வாருங்கள்!
சுயநலம் ஓர் இரும்புத்திரை,
பிறர் நலம் பார்க்க அது விடாது.
இன்று கைப்பேசியின் தொடுதிரையோ
சொந்தங்களைப் புறக்கணித்து சுயநலமி ஆக்குகிறது.
நல்லுறவின் லட்சணம்
கண் பார்த்துப் பேசுவது.
இன்றைய அவலட்சணமோ,
கைபேசித் திரையைக் கண்டபடி,
உண்டபடியே உரையாடுவது.
தமிழ் வளர வடமொழியை வெறுத்திடு என்பான்
தமிழ் பேசிப் பிழைப்பவன்.
தமிழை வணங்கி வாழ்ந்தவனே
தமிழை வளர்த்தான்; இனியும் வளர்ப்பான்.
தமிழ் கற்க
தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் தேவையா ?
என்கிறது ஒரு குதர்க்கத் திரை.
தமிழின் வளர்ச்சியை உறிஞ்சும்,
அறிவைப் பகுக்கும் மொழிவெறித் திரை இது.
தமிழா, அம்மாவை நீ மம்மியாக்கும்போது
தமிழை நீ டம்மியாக்குகிறாய்.
ஆங்கிலம் மொழி என்று எண்ணாமல்
அதுவே அறிவு என நம்புவதும் ஓர் அடிமைத் திரை.
ஆங்கிலேயர் மீதான பயம் அவர்கள் சென்ற பின்
ஆங்கிலத்தின் மீது வந்துவிட்டது.
ஆங்கிலப் பண்பாட்டு மோகமே
ஓர் அந்நிய கலாச்சாரத் திரையாகிவிட்டது.
கணினியில் ஆங்கிலம் புழங்கு.
உன் இனம் சிறக்க உற்றாரிடம் உரையாடும்போது
உன் உறவுத் திரையில் தமிழே ஒளிரட்டும்!
இந்தத் திரைகளை எல்லாம் இந்தச் சித்திரையில்
விலக்கிடத் துணிந்திடு தமிழா!
பசித்தோர் முகம் பார் என்றார் பட்டினத்தார்.
அலைபேசியின் திரையையே
அடிக்கடி பார்க்கும் மனிதனா
பிறர் பசியைப் போக்குவான்?
பிறர் முகம் பாராத அவலம்
அலைபேசித் திரையை மட்டும் பார்ப்பவருக்கு அதிகம்.
சித்திரையில் பிறந்த சித்ரகுப்தனின் கணக்கால்,
திரைமறைவுத் தீமைகள் மனிதனை
எமனிடம் இட்டுச் செல்லும்.
திரைகடலாகப் பொங்கும் மகிழ்ச்சியால்
சிவனிடமே நாம் செல்வோம்.
திரைகடலாக மனம் பொங்கவும்,
திரைமறைவில் ஏதும் இனி நிகழாதிருக்கவும்
இந்தச் சித்திரையிலிருந்து தெய்வம் நமக்கு அருளட்டும்.
தெய்வீகமான நம் உண்மை இயல்பை
மறைகள் முழங்கும்.
ஒளிரும் தெய்வீகத்தை
மாயத் திரைகள் மறைக்கும்.
உடல் ஒரு திரை.
அதன் மீது அக்கறை வை.
ஆனால் உடலே நான் என்று நம்பும்
தேகத்திரை தொலையட்டும் இந்தச் சித்திரையில்.
நம் புனிதத்தை மறைக்கும்
மனமோ அடுத்த திரை.
தூசுகள் படிவதாலன்றோ,
தெய்வம் அதில் தெரிவதில்லை.
மனதை மின்ன வை, கண்ணாடியாக்கி - அங்கு
மாயக்கண்ணன் நகைப்பான் உன்னை நோக்கி!
வறட்டு ஞானமும் முரட்டு அகங்காரமே
நம் இயல்பை மூடும் திரைகள்.
மனத் திரைகளைக் அறுத்தெறிய
மந்திரத்தை- காயத்ரி மந்திரத்தை
உனக்குள் உச்சரி!
விழிப்படையும் உன் சித் சொரூபம்!
தெய்வத்தை அலங்கரிக்கத் திரையிடுவர்.
திரை விலகியதும் தீபாராதனை.
நமது அகத் திரைகள் அகல,
தெய்வத்தின் குழந்தைகள் நாமென மலர்ந்து ஆராதிக்க
இந்தச் சித்திரை நன்னாளில் தமிழன்னை நமக்கு அருளட்டும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
14 ஏப்ரல், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்