RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 17

29.03.21 03:30 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 17

நாட்டின் இன்றைய நிலைக்காக 

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சில வேண்டுதல்கள்!

1.        பகவானே ஸ்ரீராமகிருஷ்ணா!

நோயுற்ற பாரதத்தைச் சீராக்கி

அமர பாரதத்தை மீண்டும் படைத்திடச்

செப்புகிறேன் சில பிரார்த்தனைகளை,

செவிமடுத்திடு தெய்வமே!

 

2.       ‘பாரதம் முன்னேறினால் பாரே முன்னேறும்’

என்றார் விவேகானந்தர்.

அவர்   ஆராதித்த பாரதத்தில் இன்று

ஆயிரமாயிரம் மலினங்கள்!

காளி பக்தரே குருதேவா! பாரதமாதாவைக் கூறு போடும்

அரக்கரிடம் நீ காளியின் சக்தியை உடனே காட்டிடு.

 

3.        கல்பதருவே கதாதரா,

ஆங்கிலக் கலாச்சாரத்தில் சிக்கி நாங்கள்

அல்லல்படுவோம் என அறிந்துதானோ

ஆங்கிலப் புத்தாண்டன்றே

‘ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படட்டும்’

என்று எங்களுக்கு ஆசி அளித்தீர்களோ!

அந்த ஆசியால் எல்லா அல்லல்களும் அகலட்டும்!

 

4.       மெக்காலேக் கல்வி நாட்டில் புகுந்தது கிருமி போலே!

உயிர் ரத்தம் போல் நீயும் சுரந்தாய் அதே ஆண்டிலே! 

வாழும் வரை கற்பது உன் வாழ்க்கை முறை.

அதைக் கல்லாத எங்கள் படிப்பாளிகளோ,

எல்லாம் கற்றுவிட்டோம் என்று இறுமாந்து

மனம் கல்லாகிப் போகிறார்களே!

5.       படிக்கும்போது ஆசைகளில் அலைந்து

பட்டம் வாங்கிய பின் வெறுமைகளில் தவிப்பதே

இன்றைய நிலை என்றாகிவிட்டது!

அது மாற விஞ்ஞான, மெய்ஞ்ஞானங்களில் புடமிடவும்

சகமனிதனை நேசிக்கச் சொல்லும் சாஸ்திரங்களை

எங்கள் கல்வித்துறை முதலில் கற்க அருளுங்கள்!

 

6.       மனிதனின் நிறைநிலையைக் காட்டுவதே கல்வி

என்பதைப் பெற்றோர்களுக்கும் காட்டுங்கள்!

மருத்துவராகவும் பொறியாளராகவும்

பிள்ளைகளை மாற்றுவதிலுள்ள பெற்றோரின் அவசரம்

அவர்களை மனிதராக்குவதில் இல்லையே...?

 

 7.       ‘விளைநிலங்களை வீணாக்கி

வீடு கட்டி விற்கும் மனிதா!

வருங்காலத்தில் மண் இருக்கப்போவது

உன் மண்டையில் மட்டுமே’ என் மக்களுக்குப்

புரிய வையுங்கள் பரமஹம்சரே.

 

8.       குருதேவா ஸ்ரீராமகிருஷ்ணா!

          நாங்கள் ஏழைகளைப் புறக்கணிக்கும்

குற்றம் தொடர்வதால் கோடியிலுள்ள

குப்பனும் சுப்பனும் ஜானும் சையத்துமாக மாறுகிறான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நுழைந்து இந்து சமயத்தைச்

சாய்ப்போரின் முயற்சியை வேரறுங்கள்!

 

9.       பிறரிடம் கை நீட்டி, உன் தலையை

அடகு வைத்துவிடாதே என்று

அன்று சாரதைக்குக் கூறினீர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரே!

இலவசங்களுக்காக இன்று அலைபவர்களிடத்தில்

‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற தமிழர் பண்பாட்டைத் 

தமிழர்களுக்கே நினைவூட்டுங்கள்.

 

10.      சினிமா ஆபாசங்கள், அரசியல் பரபரப்புக்கள்,

அந்நியக் கலாச்சாரங்கள், கெட்டது மட்டுமே செய்தி-

இவையே இன்றைய மீடியாக்களின் மலின நிலை!

நல்லது நடந்தால் மனமாரப் பாராட்டவும்,

அநீதி நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியமும்

எங்கள் எல்லா மீடியாக்களுக்கும் வரட்டும்.

 

11.      மாதம் மும்மாரி மழை வேண்ட முடியுமா நம்மால்?

பெய்த நீர் தங்குவதற்கான ஏரிகளை எல்லாம்

இன்று ஏரியாக்களாக ஆக்கிவிட்டோமே!

ஸ்ரீராமகிருஷ்ணா, இதிலிருந்து ஒன்று கற்றேன்.

உன் அருளெனும் மழை பொழிந்தாலும்

அதைத் தக்க வைத்துக்கொள்ளும்

திறனை எங்களுக்கு நீ தந்தருள்.

 

12.      ‘விவசாயி, சக்கிலியர் வீடுகளிலிருந்து

புதிய பாரதம் புறப்படட்டும்’ என்றார் விவேகானந்தர்.

ஆனால் ஐயோ....

செயலில் இறங்க வேண்டிய குடிமகன்கள் இன்று

போதையில் கிரங்குகிறார்களே மதியீனர்களாக!

போதைப் பணத்தை மட்டும் நம்பும் அரசு எந்திரம் சீர்பட

அதில் தன்னம்பிக்கைத் தைலத்தைச் 

சிறிது ஊற்றுங்கள் தயாபரனே!

 

13.     குருதேவா, நீங்கள் உதித்த பாரதத்தின்

உயிர் இன்று ஊழல்வாதிகளால் உறிஞ்சப்படுகிறது.

பணப்பெருக்கம் மட்டுமே வளர்ச்சியல்ல,

மக்களின் தரமே வளர்ச்சி என்று நம்பும்

திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் தேர்தல் நேரத்தில்

எங்களுக்குத் தனித்திறமையைத் தந்திடுங்கள்!

         அல்ப பணத்தை ஓட்டுக்காக விட்டெறிந்து

மக்களை ஐந்து வருடம் அற்பர்களாகவே இருந்திடச்

செய்பவர்களை விரட்டியடி வீர குருவே!

 

14.      உலகிற்கே உயிர் போன்ற ஸ்ரீராமகிருஷ்ணா!

ஊழலற்ற இந்தியாவைப் படைத்திட எங்களுக்கு

நல்லது செய்வதில் ஊக்கமும்

தீமையைப் பொசுக்குவதில் திறனும் தாருங்கள்.

நாங்கள் நலம் பெற சிலவற்றை வேண்டினேன்.

நாட்டைச் சரிபடுத்தித் தர வேண்டும் சாமி!

சுவாமி விமூர்த்தானந்தர்

29 மார்ச், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur