நவீன நரகாசுரரர்களை மாய்ப்பதே தீபாவளி!
நவீன நரகாசுரரர்களை மாய்ப்பதே தீபாவளி!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சில யுகங்களுக்கு முன்பு தோன்றி அக்கிரமங்கள் பல செய்து மக்களையும் நாட்டையும் கெடுத்தவன் நரகாசுரன் என்ற அசுரன். அவனது அக்கிரமங்களுக்கு ஆண்டவன் அப்போதே அவனைத் தண்டித்து விட்டார். அவன் ஒழிந்த அந்தத் தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
நமது உள்ளத்தில் தோன்றும் அரக்கத்தனமான எண்ணங்களின் திரட்சியை நரகாசுரன் என்று கூறுகின்றனர் சில பக்திமான்கள். அந்த நரகாசுரனை நிர்மூலம் ஆக்குவது, அவன் ஆட்சி செய்யும் இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொண்டு அவரது பாதுகாப்பில் நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதுதை நாம் நித்திய தீபாவளி என்று புரிந்து கொண்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். இதுதான் தீபாவளி கூறும் சமய தத்துவமோ!
நல்லதுதான். ஆனால் நரகாசுரன் ஒரேடியாக மாய்ந்துவிட்டானா, இல்லையே? இன்றும் நரகாசுரனின் வழித்தோன்றல்கள் நம் வீடுகளிலும் நாட்டிலும் ஒவ்வொரு துறையிலும் வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்?
நரகாசுரன் வரலாறு என்பது கதை அல்ல. அது நமக்கு உள்ளும் புறமும், நமது மனங்களிலும், சமுதாயத்திலும், நாட்டிலும் தொடர்ந்து வரும் தீய சக்திகளின் திரட்சிதான் நரகாசுரன் என்ற வடிவு. அந்தத் தீய சக்திகளை நல்ல சக்திகளின், தெய்வீக ஆற்றலுடன், சமாஜ சக்தியின் துணையோடு வதைத்து ஒடுக்குவதுதான் நாம் உண்மையில் கொண்டாட வேண்டிய தீபாவளி.
ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியபோது மகாகவி பாரதியார் நமது அடிமைத்தனத்தை நரகாசுரனுக்கு ஒப்பிட்டு எழுதினார். அவர் 1906- இல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
'.....எத்தனை தரம் கொன்ற போதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராட்சர்களுடைய சுபாவம். அவர்களது மர்மஸ்தானத்தை அழித்த பிறகுதான் அவர்கள் மடிவார்கள். அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்த உடனேயே நாம் அவனுடைய மர்மஸ்தானத்தை அழித்து விடாமையால் அவன் மறுபடியும் தளிர்க்கத் தொடங்குகிறான்....'
மகாகவி இவ்வாறு கூறியதுபோல் இன்று நம்மிடையே அலையும் தீய சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டோமா? அவற்றை வதைப்பதற்குக் கச்சை கட்டிக்கொண்டோமா? குறைந்தபட்சம் தீய சக்திகளை பற்றிய விழிப்புணர்வு இருந்தால் நாம் தீபாவளி கொண்டாடத் தயாராகி விட்டோம் என்று அர்த்தம். அகத்திலும் புறத்திலும் தோன்றி நம்மை அல்லாட வைக்கும் அசுரர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைப் போல் வெடி வெடித்தும் விருந்து உண்டும் தொலைக் காட்சியில் நம்மை தொலைத்து தீபாவளியை ஒரு நாள் கூத்தாகக் கழிப்பதில் என்ன பயன் இருக்கிறது?
தொடர்ந்து வரும் நரகாசுரன்களை ஒவ்வொரு முறையும் பகவானே தோன்றி வதைக்க வேண்டியதில்லை.
மாறாக, தேசபக்தியும் தெய்வபக்தியும் மிக்க ஒவ்வொருவரும் பகவானின் அருள் பெற்று அவரது பிரதிநிதிகளாக நின்று முதலில் தங்களால் முடிந்த அளவிற்கு நவீன நரகாசுர அரக்கர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களை அப்புறப்படுத்த முயல்வதுதான் நம் உண்மையான தீபாவளியாக இருக்கும், அல்லவா?
மேலும் நமது புறத்திலும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடமும் ஒவ்வொரு வருடத்திலும் புதுப்புது நரகாசுரன்கள் நாட்டிலும் சமுதாயத்திலும், ஏன் சமயத்திலும் ஆங்காங்கே தோன்றுகிறார்கள்.
நமது நாட்டிற்கு இந்த வருடம் வந்து வதைப்பட்ட நரகாசுரன் யார் தெரியுமா?
கொரோனா தொற்றுதான்.
நமது அரசு நிர்வாகத் திறமையாலும் உழைப்பாலும் அந்தக் கொடிய கொரோனா நரகாசுரனை நாம் பணிய வைத்துவிட்டோம். பிற நாடுகளிலும் அச்சுறுத்தும் அந்த நரகாசுரனை வைப்பதற்கு நாம் மருத்துவ உதவியைச் செய்ய தயாராக உள்ளோம்.
அதைவிட மோசமான நரகாசுரர்களும் உண்டு. அன்னிய நாட்டு அச்சுறுத்தல்கள், அந்நிய நாட்டினரின் ஊடுருவல்கள், போர் பயம் காட்டி நம் நாட்டின் ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிப்பவர்கள், பொருளாதாரத்தை முடக்குபவர்கள் போன்ற பல நரகாசுரர்கள் நம் நாட்டை முற்றுகையிடுகிறார்கள்.
அந்த நவீன நரகாசுரர்களை நம்முள் எத்தனை பேர் அடையாளம் கண்டுகொண்டோம்!
நம் சமுதாயத்திலும் நரகாசுர ஆதிக்கம் உள்ளது. அவற்றுள் மிகவும் மோசமானவை இரண்டு. நம் மக்களிடையே இருக்கும் அசிரத்தை மற்றும் கண்ணை மூடிக்கொள்ளும் பூனையின் பொறுப்பின்மைதான் அந்த இரண்டு நரகர்கள். எதையுமே எள்ளி நகையாடும் அல்லது உயர்ந்த குறிக்கோள் இல்லாமல், தாயுமானவர் கூறுவதுபோல் 'உண்டு உடுத்தித் திரியும் இரண்டு கால் மாடு போல...' பிழைக்கும் ஒரு துர்க்குணம் மக்களிடையே தாண்டவமாடுவதைப் பார்க்கிறோம்.
நம் நாட்டின் பாரம்பரிய பெருமையைப் புரிந்து கொள்ளாது கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு வெளியில் கல்வீசுபவனின் நிலை பலரிடம் காணப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் மிகவும் நேசித்த நம் பாரத பூமியில் தாய்நாட்டு பற்றின்மை என்ற அரக்கனை நாம் புதைப்பதற்கு ஆண்டவனின் சக்தியைத் திரட்டிக் கொள்வோம். பாரத மாதாவை எள்ளி நகையாடுபவர்களைச் சரவெடிகளாகக் கொளுத்த வேண்டிய காலம் இது.
சனாதன தர்மமான இந்து தர்மத்தின் மீதும் எத்தனையோ நரகாசுரர்கள் விமர்சனப் போரையும், சமயக் காழ்ப்புணர்ச்சியையும் தூண்டி வருகிறார்கள். அதனால் நம் மக்கள் கோழைகள் போல் பகவானை நாடாமல் பணம் சம்பாதிப்பதிலேயே திரிகிறார்கள். அதனால் சமுதாய நல்லிணக்கமும் மதநல்லிணக்கமும் கேள்விக்குறியாகிறது; கேலிக்குரியதாகிறது.
இன்று நம் நாட்டைச் சுற்றியுள்ள இது போன்ற நரகாசுரன்களைக் கண்டு கொள்வோம். இந்த தீபாவளி நன்னாளில் இவர்களது முயற்சிக்கு வேட்டு வைப்போம்.
சமுதாயத்தில் மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மத வியாபாரிகள் செய்யும் அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அவர் கூறிய பேடித்தனம் இல்லாத வலிமையை நாம் பின்பற்றுவோம். ஸ்ரீகிருஷ்ணர் நமக்குள் வந்துவிட்டால் நரகாசுரன்கள் ஓய்ந்தும் ஒளிந்தும் விடுவார்கள்.
இந்து மதத்தின் மீது குறிவைத்துத் தாக்கும் விமர்சனங்களால் எள்ளி நகையாடும் நவீன நரகாசுரன்களை வதைத்திட, தெய்வ சாந்நித்தியத்தை நமக்குள் பெருக்கிக் கொள்வதற்கு இந்த தீபாவளித் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். நம் முயற்சியாலும் பிரார்த்தனையாலும் நவீன நரகாசுரர்களை நாசம் செய்வார் நமது பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணர்.
இந்த தீபாவளி திருநாளில் அதுவே நமது பிரார்த்தனை ஆகவும் பிரயத்தனமாகவும் மாறட்டும்.
ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா.
சுவாமி விமூர்த்தானந்தர்
03, நவம்பர் 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்