“எந்த மகன் முதலில் தாயால் கற்பிக்கப்படுகிறானோ, அவனே கடவுளை அறிவான்' - சுவாமி விவேகானந்தர்
இதனை நிரூபிக்கும் ஓர் இதிகாச சம்பவத்தைக் கேளுங்கள்.
சிறுவயதில் விநாயகர் பார்வதி தேவியிடம் ஒரு நாள் பரபரப்பாக, ‘அம்மா, யாரம்மா உங்கள் கன்னத்தைக் காயப்படுத்தியது?’ என்று கேட்டார்.
பார்வதி தேவி அமைதியாக, "மகனே, நீதான் என்னைக் காயப்படுத்தினாய்" என்றார்.
அதிர்ந்துபோன விநாயகர், “நானா? நானா என் தாயைக் காயப்படுத்தினேன்?” என்று வினவினார். ''இன்று காலை நீ ஒரு பூனையுடன் விளையாடினாய் அல்லவா? அப்போது விளையாட்டு ஆர்வத்தில் நீ அதன் கன்னத்தைக் கீறிவிட்டாய். அந்தக் கீறல்தான் என் கன்னங்களில்..." என்பதற்குள்,
‘அந்தக் கீறல் எப்படி உங்கள் கன்னத்தில் வந்தது?" என்று வேகமாகக் கேட்டார் விநாயகர்.
“குழந்தாய்! இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். நானே உலகமாக ஆகியிருக்கிறேன். எல்லா உயிர்களாகவும் பொருள்களாகவும் சகல சிருஷ்டியாகவும் நானே விளங்குகிறேன். ஆகவே நீ யாரைத் துன்புறுத்தினாலும் உண்மையில் அது என்னைத் துன்புறுத்துவதாகவே ஆகும்" என்றார் பார்வதி தேவி.
நீக்கமற தேவி நிறைந்திருக்கிறாள் என்பதைக் காட்டும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய அருட்கதைகளுள் ஒன்று இது.
அன்னை பராசக்தியே அகிலமாகி இருக்கிறாள் என்பது பேருண்மை. அவளே அவனியில் அனைத்துப் பெண்களாகவும் திகழ்கிறாள் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய சிறப்பு உபதேசம்.
அந்த உபதேசத்தை அவர் அணுவளவும் பிசகாது ஏற்றுக் கொண்டார். அகிலாண்டேஸ்வரியே அனைத்துமாகி இருக்கிறாள் என்பதை ஆன்மிக சாதனை மூலம் அவர் அறிந்து கொண்டார். அதற்கு முன்னால் அவரை ஈன்றெடுத்த அன்னையும் அந்த உண்மையை அவருக்கு உணர்த்தினார்.
அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
சிறுவன் கதாதரன் (ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறுவயதுப் பெயர்) துடுக்கானவன். உடம்பெல்லாம் சுறுசுறுப்பு. நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு. உள்ளமெல்லாம் ரசிக்கத் தக்கக் குறும்பு. ஒன்றைச் செய் என்றால் மட்டும் அவன் செய்துவிட மாட்டான். ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்தால்தான் அவன் சமாதானம் ஆவான்.
மிரட்டலுக்கும் கெஞ்சலுக்கும் மயங்க மாட்டான். அதற்காக அவன் முரடன் என்று எண்ணிவிடக் கூடாது. ‘செவ்வனே செய்' என்பது சிறுவயது முதலே அவனது சித்தாந்தமாக இருந்தது.
கதாதரனின் வீட்டிற்கு அருகில் ஹல்தார்புகூர் என்ற குளம் இருந்தது. காமார்ப்புகூர் கிராம மக்கள் அந்தக் குளத்து நீரைத்தான் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தினார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் படித்துறைகள் இருந்தன. ஆனால் சிறுவன் கதாதரனும் அவனது நண்பர்களும் பெண்கள் படித்துறையிலேயே குளித்து வந்தார்கள்.
அன்று கதாதரனின் ஆட்டத்திற்கு அளவில்லாமல் போனது. குளிக்கும்போது கும்மாளம் செய்தால் பொறுக்கலாம். கும்மாளம் செய்து கொண்டே குளிக்கவும் செய்தால்...?
குளக்கரையில் அமர்ந்து ஜபம் செய்து வந்த வயதான பெண்களுக்கு அவனது சேஷ்டைகள் பெரும் தொல்லைகளைத் தந்தன. குளித்து முடித்து, புது உடை அணிந்து கொண்ட பெண்கள் மீது நீரை வாரியிறைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது?
கதாதரனை குழந்தை கிருஷ்ணனாகவே எல்லோரும் நேசித்தார்கள். ஆனால் இது போன்ற குறும்புகளை எல்லோராலும் எப்போதும் ரசிக்க முடியாதல்லவா? பொறுமை இழந்த ஒரு பெண், ‘டேய் தம்பிகளா, நீங்கள் ஏன் இங்கு கும்மாளம் அடிக்கிறீர்கள்? ஆண்கள் படித்துறைக்குப் போகக் கூடாதா? பெண்கள் குளிப்பதைப் பார்க்கக் கூடாது என்பது
உங்களுக்குத் தெரியாதா?" என்று படபடத்தாள். அந்தப் படப்படப்பை மேலும் கூட்டும் வகையில், 'ஏன் பார்த்தால் என்ன?" என்று கதாதரன் கேட்டவுடன், அந்தப் பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்!
உடனே அவள் ஏசத் தொடங்கினாள். மற்ற சிறுவர்கள் எல்லாம் பயந்து ஓடிவிட்டார்கள். ஆனால், எதையும் ஆராய்ந்த பிறகே ஏற்கும் கதாதரன் மட்டும் அந்தப் பெண்ணின் கூற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.
அதன்படி, தொடர்ந்து மூன்று நாட்கள் பெண்கள் குளத்திற்குச் சென்று பார்த்து வந்தான். சிறுவன் கதாதரனுக்கு ஒன்றும் வித்தியாசம் புரியவில்லை. தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. பின் ஏன் அவள் அப்படிச் சொன்னாள்? என்று அவன் யோசித்தான்.
அடுத்த நாள் கள்ளங்கபடமற்ற சிறுவன் கதாதரன் தன்னைத் திட்டிய பெண்ணிடம், ''அக்கா, நீ ஏதேதோ சொன்னாயே, முந்தா நாள் நான்கு பெண்கள், நேற்று ஆறு, இன்று எட்டு பேர் குளிக்கும்போது நான் பார்த்தேன். எனக்கு ஒன்றுமே நடக்கவில்லையே?" என்று கூறிக் களங்கமின்றிச் சிரித்தான்.
அந்தப் பெண் கதாதரனின் தூய உள்ளத்தை மெச்சினாள். அதனை அவனது அன்னையான சந்திரமணி தேவியிடம் சென்று சொல்லி ரசித்தாள்.
அறிவுப்பூர்வமாக விளக்கினாலன்றி எதையும் ஏற்காத தன் மகனை சந்திரமணி நன்கு அறிந்திருந்தாள். அவனுக்குப் புரிய வைப்பதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி இருந்தாள். அந்தப் பெண்ணிடம் கேட்ட அதே கேள்வியை கதாதரன் ஒரு நாள் தன் அன்னையிடமே கேட்டுவிட்டான்:
"குழந்தாய், குளிக்கும்போது பார்த்தால் உனக்கு ஒன்றும் நேரவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவமானம் அந்தப் பெண்களுக்கு அல்லவா! அவர்களோ எனக்குச் சமமானவர்கள். நீ அவர்களை அவமானப்படுத்துவது என்னை அவமதிப்பதற்குச் சமம். என்னை அவமதிப்பது உனக்குச் சம்மதமா?”
“இல்லை அம்மா” என்றான் கதாதரன்.
“சரி, இனி ஒருபோதும் பெண்கள் மனம் புண்படும் வகையில் நடந்து கொண்டு அவர்களையும் என்னையும் அவமதிக்காதே" என்று அவனது பிஞ்சு மனதில் பதியும்படி சந்திரமணி தேவி கூறினாள். அதன் பின்னர் கதாதரன் ஒருபோதும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
(குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பாகம் 1, பக்கம் 70) இந்த வகையில் விநாயகரும் கதாதரனும் தத்தமது தாய்மார்களால் மெருகேற்றப்பட் டார்கள் என்றால் அது மிகையாகாது.
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும்போது, “எனது குருநாதர் சிறுமிகளை நாற்காலியில் அமர்த்தி, அவர்களை மலரிட்டு வழிபட்டு, அவர்கள் முன் வீழ்ந்து வணங்குவதை நான் கண்டிருக்கிறேன். பெண்கள் தெய்வத்தாயின் அம்சங்கள். ஆதலால் அவர்களை உண்மையாகவே அவர் வழிபட்டார்" என்று குறிப்பிடுகிறார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
07.09.2024