ஆசிரியர்களைக் கொண்டாடும், மதிப்பது மட்டுமல்ல, கொண்டாடுவதுதான் நம் பாரம்பரியம். ஆசிரியர்கள் தங்களது அருமை பெருமைகளை உணர்ந்தால் அவர்கள் அடையும் மேன்மைக்கு அளவே இல்லை. நமது பல்துறை ஆச்சாரியார்களையும் ஆசிரியர்களையும் பக்தியுடன் அவதானித்தால் ஆசிரிய சமூகம் பெரும் உத்வேகம் பெறும்.
பிறரை ஏற்றிவிட்டுத் தாங்கள் அப்படியே இருக்கும் ஏணிகளே ஆசிரியர்கள் என்று ஆலோசிக்காமல் சாதாரண மக்கள் கூறுவார்கள். இது தனது சக்தியை, தனது பொறுப்பை அறியாத ஆசிரியருக்குச் சொல்லப்பட்டது எனலாம். வெற்றி பெற்ற ஆசிரியருக்கு இந்த உதாரணம் பொருந்தாது.
மாணவனின், மனிதனின், சமுதாயத்தின் வளர்ச்சியில் சிறந்த ஆசிரியர் தாமாகவே பங்காற்றுகிறார். அன்புடன் தனது பங்களிப்பை வழங்குகிறார்.
ஆசிரியரிடத்தில் மனிதர்களை உருவாக்கும் உயர்ந்த நோக்கம், பெருந்தன்மை, பிறரைப் பாராட்டுவது, நல்ல திறமைகளைக் கண்டு கொள்வது, அவற்றைப் பிறருக்குக் காட்டுவது போன்ற பண்புகள் இயல்பாகவே இருக்கும்.
ஆசிரியர்களின் இந்தப் பண்புகள் நீர், மணல், ஜல்லி, சிறிது சிமெண்ட் போன்றவையாக உள்ளன. அவற்றைக் கொண்டு ஓர் ஆசிரியர் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே அன்புப் பாலம் அமைக்கவும் முடியும். பிரிந்து கிடக்கும் மனித மனங்களைச் சேர்க்கவும் முடியும். பிரிவினைவாதம் பேசும் குழுக்களைச் சமுதாய நலம்விரும்பிகளாக மாற்றவும் முடியும். அவ்வளவு ஏன், அறிவைக் கொண்டு நாட்டின் வறுமைக்கே சமாதி கட்டலாம். இதனை சுவாமி விவேகானந்தர் மனிதனை உருவாக்கும் கல்வி மற்றும் நாட்டை நிர்மாணிக்கும் கல்வி என்று வரையறை செய்தார்.
மேற்கூறிய இவ்வளவும் நடைபெறும் இடம், நடைபெற வேண்டிய இடம்தான் வகுப்பறை. இவை நடைபெறவில்லை என்றால் ஆசிரியரின் சிமெண்ட், மணல் போன்றவை தனிமனித மற்றும் சமுதாய வாழ்க்கையின் நடுவே சுயநலச் சுவர்கள் எழும்பி விடும். ஆசிரியர் உழைத்தால் பாலம் கட்ட முடியும்; உழைக்காவிட்டால் உள்ளங்கள் இல்லாத உயர் கட்டடங்கள் ஊரெங்கும் நிற்கும்.
இறைவன் உறையும் கருவறை, தாய் சுமக்கும் கருவறை, அவற்றோடு மனிதர்களை ஆசிரியர் உருவாக்கும் வகுப்பறை ஆகிய மூன்றும் நன்கு பேணப்படும் இடத்தில் ஆண்டவன் உறைவான். இயற்கை வளம் கொழிக்கும். மக்கள் மேலான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது இந்து சமயச் சிந்தனைகளின் ஒரு முக்கிய அம்சம்.
அடுத்து, நமது பாரம்பரிய ஆசிரியர்களின் சிறப்பம்சங்களாக இருந்தவை என்னென்ன தெரியுமா?
அரிச்சுவடி புகட்டுவது மட்டும் ஆசிரியப் பணியன்று. வாழ்க்கையில் நமக்கு யாரெல்லாம் நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறார்களோ அவர்கள் அனைவரும் ஆசிரியர்களே.
அக்ஷரம் முதல் அக்ஷரம் வரை கற்க வேண்டும் என்று சனாதன தர்மத்தில் கற்றுத் தரப்படுகிறது. முதல் அக்ஷரம் என்பது எழுத்துக்களைக் கற்பதாகும். அடுத்த அக்ஷரம் என்பது தெய்வத்தை, பரம்பொருளைப் பற்றிக் கற்பது ஆகும்.
வியாச மகரிஷி மகாபாரதத்தைத் தொகுத்து நமக்கு வழங்கிய ஆச்சாரியார். அவர் மகாபாரதத்தை யாப்பதற்கு முன்பு மூன்று வருடங்கள் தவத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு எழுத சங்கல்பித்தாார்.
விநாயகரை வணங்கித் தனக்கு உதவுமாறு வேண்டினார். ஏனென்றால் சிந்தித்துக்கொண்டே எழுதுவது சிரமம். அதனால் தான் சிந்திப்பதை அதே வேகத்தில் குறித்துக் கொள்வதற்கு விநாயகரை விட்டால் வேறு யாருமில்லை. விநாயகரும் இணங்கினார்.
"நான் எழுதும் வேகத்திற்கு வியாசரே, நீங்கள் சுலோகங்களைக் கூற வேண்டும்" என்றார் விநாயகர் சவாலாக.
"நல்லது விநாயக மூர்த்தியே! அடியேன் சொல்வதை நீங்கள் பொருள் புரிந்து கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும்" என்றார் வியாசர்.
இவ்வாறு அவர்களிடையே அற்புதமான ஆரோக்கியப் போட்டி நடந்தது. இருவரும் சேர்ந்து கற்றார்கள். கற்றது பதிவு செய்யப்பட்டது. வேத மந்திரம் கூறும்
ॐ सह नाववतु । सह नौ भुनक्तु । सह वीर्यं करवावहै । तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।। ॐ शान्तिः शान्तिः शान्तिः ।।
ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக!
என்ற அருமையான ஆசிரியர் - மாணவர், குரு - சிஷ்யர் ஆகியோருக்கான மந்திரத்தின் முழுப் பொருளை விநாயகரும் வியாசரும் உணர்த்தினர்.
அதில் பாருங்கள், நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று முழு முதற்கடவுளிடமே சவால் விடுகிறார் வியாசர் என்ற ஆசிரியர். தன் வித்தை மீது என்னவோர் தன்னம்பிக்கை அந்த ஆசிரியப் பெருமகனுக்கு.
எப்படிப்பட்ட தெய்வீக ஆசிரியர்களை நம் நாடு பெற்றுள்ளது!
மக்களுக்குப் போதிப்பதற்காக விநாயகப் பெருமானே ஒரு மாணவனாக - உலகின் முதல் ஸ்டெனோக்ராபராக இறங்கி வந்து வேலை செய்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஆசிரியர் பணி படைப்பாற்றல் மிக்கது. அவர் எந்திரத்தனமாக வேலை செய்பவர் அல்ல. தொடர்ச்சியாகக் கற்றுக் கொண்டிருப்பவர்தான் சிறந்த ஆசிரியர் என்பதற்கு இதோ இன்னொரு வரலாறு சான்று.
கைலாயத்தில் ஒரு முறை முருகப்பெருமானை வணங்காது சென்றார் பிரம்மதேவர். முருகன் சிவபெருமானின் மகன் தானே, தன்னைவிட இளையவராயிற்றே என்று பிரம்மதேவர் எண்ணிவிட்டார். அங்கு அவர் செய்த தவறு.... தெய்வீகத்தைப் புறக்கணித்துப் புறத்தோற்றத்தை மட்டும் கண்டு சிலரை மதித்தது; சிலரை மதிக்காதது.
குறையுள்ள இந்த மனநிலையை முருகப்பெருமான் மாற்றினார். பிரம்மாவிடம் ஓங்காரத்திற்கு விளக்கம் கேட்க, முருகன் எதிர்பார்த்த விளக்கம் பிரம்மதேவனால் தர முடியாமல் போக, முருகப்பெருமான் அவரைத் தண்டித்தார்.
இந்த வரலாறு நமக்குக் காட்டுவது ஆசிரியர்கள், மாணவர்களின் புறத்தோற்றத்தில் தெரிவதை மட்டும் காண்பதோடு நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு மாணவனிடத்தில் உள்ள திறமைகளை, சக்திகளை, தெய்வீகத்தைக் கவனிக்கத் தவறும்போது அந்த ஆசிரியர் கண்டிக்கப்படுகிறார் என்பது புரிகிறது அல்லவா!
மாணவனின் உள்ளே மறைந்து கிடப்பதைத் தட்டி எழுப்பும் பணி ஆசிரியருக்கானது. அதைச் செய்யும் ஆசிரியர் சிறந்த ஆச்சாரியார் ஆகிறார் என்பதும் இந்த வரலாறு நமக்குக் கூறுகிறதுதானே!
இவ்வாறு ஒவ்வோர் ஆசிரியரும் உலகிற்கு ஓர் உன்னதத்தைக் கற்பிக்கிறார். ஆகவேதான் தைத்திரீய உபநிடதம் स्वाध्याय प्रवचनाभ्यां न प्रमदितव्यम्।
ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம். அதாவது கற்பதிலிருந்தும் கற்றுக் கொடுப்பதிலிருந்தும் விலகாதீர்கள் என்று கூறுகிறது.
ஜகதாச்சாரியாராக வந்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் "வாழும் வரை நான் கற்றுக் கொண்டே இருப்பேன்" என்று வாழ்க்கையின் சாரக்ராஹியாகக் கூறினார்.
ஆசிரியர்கள் ஆச்சாரியார்களாக உயர வேண்டும் என்பதே பாரதப் பண்பாடு கூறும் ஆசிரியர் தினத்திற்கான உன்னத செய்தி ஆகும். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் வளரவும் அதன் மூலம் நம் மக்கள் அனைவரும் பயன் பெறவும் பிரார்த்திப்போம்.
சுவாமி விமூர்த்தானந்தர்
04.09.2024