RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உலக அரங்கில் இந்தியர்களை அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்திய தினம் - செப்டம்பர் 11, 1893

11.09.24 06:10 PM By thanjavur

"இந்தியனுக்கு உள்ளே அனுமதியில்லை" என்ற வாசகம் மேலை நாடுகளில் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்த காலம். அங்கு தொங்கியது அட்டையல்ல, நமது மானம்.

இந்தியா அடிமை நாடு. எந்த நாட்டினரும் வந்து நம் மக்களை மிதிக்கலாம்; நிதியைக் கொள்ளை அடிக்கலாம் என்று நாம் உலகப் பிரசித்தி பெற்றிருந்தோம். நம் நாட்டிற்கென தனி அந்தஸ்தோ, அடையாளமோ இல்லாதிருந்த காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் தூங்கும் ஒரு வீரனின் மண்டையில் தட்டினால் அவன் எவ்வாறு சோம்பலிலிருந்து விடுபடுவானோ, அந்தப் பணியை முதன் முதலில் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.

ஆங்கிலேயனுக்கு அருவருப்பான அடிமை, அந்நிய கலாச்சாரத்தின் மீது வெறித்தனமான கவர்ச்சி, வெள்ளைத் தோல் என்றால் அடிமைகளாகி விடும் அன்றைய மக்களின் முன்னேற்றத்திற்காக சுவாமி விவேகானந்தர் என்ற சிங்கம் கர்ஜித்த தினம் - செப்டம்பர் 11.

அந்தக் கர்ஜனை கேட்டு இந்து மதத்தில் இருந்த, இந்திய நாட்டில் எல்லாத் துறைகளிலும் இருந்த சுயநல ஓநாய்கள், மூடநம்பிக்கையையும் தீண்டாமையையும் வளர்த்து வந்த குள்ளநரிகள் அஞ்சி ஓடின.


சுவாமி விவேகானந்தர் உலக சர்வ சமயப் பேரவையில் 1893, செப்டம்பர் 11-ஆம் தேதி ஒற்றை வரியினால் உலக மக்களின் உள்ளங்களை வென்றார்.  தங்களது மதங்களை மட்டுமே பிடித்துக்கொண்டு அலையும் மதவெறியாளர்களுக்கும், பிறரை மதம் மாற்றித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் மத வியாபாரிகளுக்கும் சாவுமணி அடித்த தினம்தான் - செப்டம்பர் 11.

உலகம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு செப்டம்பர் 11 தினத்தில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களில் நடந்ததைக் கண்டு திகிலடைந்தது. அது மதவெறி ஆட்டம்.

அதற்கு 130 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அருமையான, ஆழமான, அன்பான, சமய சான்றாண்மை மிகுந்த, மெய்யான அமைதி மார்க்கம் கொண்ட, உலக சகோதரத்துவத்தை செப்டம்பர் 11- இல் நம் உலகம் தரிசித்தது.

உலகிலேயே மூணரை நிமிட சிற்றுரை, கேட்ட அனைவரையும் ஆனந்தத்தில் மூழ்க வைத்தது என்றால் அது சுவாமிஜியின் சிகாகோ சிற்றுரைதான்.

பொதுவாக, பேச்சாளர்கள் தங்கள் கருத்தை ஆழமாகக் கூறி மக்களைக் கவர்வார்கள். சிலர் பார்வையாளர்கள் விரும்புவதைப் பேசிப் புகழ் வாங்குவார்கள். மற்றும் சிலர் தங்களுடைய மக்கள் மத்தியில் பேசிப் பரவசமூட்டுவார்கள்.

ஆனால் சிகாகோ சிறப்புரை தினத்தன்று அந்த அரங்கில் இருந்த 4000 பேர்களில் நான்கு பேருக்குக்கூட சுவாமிஜியைத் தெரியாது. ஆள் பலமும் பண பலமும் அவருக்கு என்னவென்றே தெரியாது. எந்த கார்ப்பரேட் விளம்பர நிறுவனமும் அவருக்கு இருந்ததில்லை. அவரது பெயரைத் திரும்பத் திரும்ப மக்கள் மனதில் பரப்பும் ட்விட்டர், வாட்ஸ்அப் மற்றும் செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence போன்ற எதுவும் இருந்ததில்லை.

ஆனால் சுவாமி விவேகானந்தர் இறைவன் நல்கிய, ஆழ்ந்த இயற்கையான நுண்ணறிவும் Organic intelligence உலக மக்களின் நன்மையில் பேரன்பும் கொண்டிருந்தார்.


சமூக வலைதளங்கள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை எவ்வாறு நாடெங்கும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது? அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானவற்றை நாம் இங்கு அவதானிப்போம்.

சுவாமி விவேகானந்தரிடம் இருந்த நான்கு முக்கிய அம்சங்கள் உலக தரத்தில் அவரைத் தூக்கி நிறுத்தியது.

1.
சுவாமிவிவேகானந்தரின்தன்னம்பிக்கை பேச வைத்தது!

சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் தனிமனிதர்களுக்கு மட்டுமல்லாமல், நம் தாய்த் திருநாட்டிற்கே தன்னம்பிக்கை ஊட்டின.

சர்வ சமயப் பேரவையில் உரையாற்றுமாறு எந்த நிறுவனமும் அவரை அழைத்திருக்கவில்லை. சுவாமிஜி சிறப்பான சொற்பொழிவாளர் என்று யாருக்கும் தெரியாது. அவர் உண்பதற்கும் தங்குவதற்கும்கூட இடமின்றி அமெரிக்கத் தெருக்களில் அலைந்ததுண்டு. அவரது உடையைக் கண்டு அவரைக் கல்லால் அடித்தவர்களும் உண்டு.

பணமில்லை, ஆதரிப்பார் யாருமில்லை, உணவு, மனிதர்கள், சூழ்நிலை என எல்லாமே சிரமாகவும் சிக்கலாகவும் இருந்தன. என்றாலும் அவர் எல்லா இன்னல்களையும் இடர்பாடுகளையும் சிகாகோ சிறப்புரை நிகழ்த்துவதற்கு முன்பு தன்னம்பிக்கையுடன் கடந்து கொண்டிருந்தார்.

‘சர்வ சமயப் பேரவை நடப்பதே எனக்காகத்தான்’ என்று சுவாமி துரியானந்தரிடம் சுவாமிஜி கூறினாரென்றால் அவரது தன்னம்பிக்கையைப் பற்றி வியக்காமல் இருக்க முடியுமா?

2.
‘மனிதன்தெய்வீகமானவன்’என்றஉண்மையைஅவர்களுக்குத்கூறும்தொண்டினைச் செய்யவேண்டும்என்றதணியாததாகம்அவரைஉரையாற்றவைத்தது.

உலக மக்கள் அனைவருக்கும் தெய்வீகத்தைப் போதிக்க வேண்டும் என்பது சுவாமிஜிக்கு வழங்கப்பட்ட இறைகட்டளை. அதைச் செம்மையாகச் சீக்கிரம் நிறைவேற்று என்பது அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்ணரின் கட்டளை.

அதற்காக சுமார் 12 ஆண்டுகள் பாரதமெங்கும் காலாற நடந்து சென்று அதன் வளமைகளைக் கண்டு வியந்தார். வறுமைகளைக் கண்டு வியர்த்தார். கண்ணீர் சொரிந்தார். மேன்மக்களைச் சந்தித்தார். தரித்திர நாராயணர்களிடத்தில் "நீங்கள் தெய்வங்களே" என்று அறிவித்தார்.

பூமிக்கடியில் உள்ள புதையலின் மீது நின்று பிச்சை கேட்கும் மனிதர்களாக இந்து மக்களையும் இந்தியர்களையும் அவர் கண்டார். புதையலையும் தோண்டி எடுத்தாக வேண்டும். மக்களின் மனங்களில் உள்ள பிச்சைக்காரத்தனத்தையும் விரட்டியாக வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் சுவாமிஜி மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தார். ஆனால் பெரும் பலனில்லை.

அம்மா சோறு ஊட்டினால் அது வெறும் சாதமாகப் பிள்ளைக்குத் தெரியும். அதையே ஒரு பாக்கெட்டில் அடைத்து அமெரிக்க முத்திரை கொடுத்து விட்டால் குழந்தைகள் குதூகலிக்கும் அல்லவா!

அது போன்று சுவாமிஜி பாரதத்தின் ஆன்மீகப் பெருமையை அமெரிக்காவில் முழங்கினார். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நம் மக்கள் விழித்துக் கொண்டார்கள். அது நடந்த தினம் தான் செப்டம்பர் 11.

3.
சுவாமிவிவேகானந்தரின்ஆன்மீகத்தகுதி அவரை உரையாற்ற வைத்தது!

சுவாமி விவேகானந்தர் "அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே" என்று முழங்கியதும் அந்த அரங்கில் சோர்ந்து அமர்ந்திருந்த மக்கள் நிமிர்ந்து எழுந்தார்கள்.

கிறிஸ்தவத்தைத் தவிர, தங்களது சொந்த மதத்தைத் தவிர மற்ற நாடுகளிலும் மேன்மையான மதங்கள், மேன்மக்கள் இருப்பதை அவர்களது 4000 இதயங்களும் ஏற்றன. அவர்களது 8000 கைகளும் பாராட்டின. தாங்கள் வெறும் கிணற்றுத் தவளைகளாக வாழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தார்கள். உள்ளத்தினால் உயர்ந்தார்கள்.

ஒற்றை வரியில் விவேகானந்த சுவாமிகள் உலகை வெல்வதற்குப் பல காரணங்களுள் ஒரு முக்கிய காரணம், அவரது துறவறம்தான் - பிரமச்சரிய விரதம்தான் என்று அவரே கூறினார். உடலாலும் மனதாலும் சாதாரண மனிதன் தனது ஆற்றலையெல்லாம் வீணடிக்கும்போது அதனை விவேகானந்தர் தாய் மதத்தின் எழுச்சிக்காக மடைமாற்றம் செய்தார். அதற்காகவே தன்னுயிரை வழங்கினார்.

4.
இறைவனின்பிரதிநிதியாகஇருந்துஉரையாற்றினார்!

சுவாமிஜி சிகாகோவில் சீரிய உரையாற்றி உலகத்திற்கு வீரியத்தைக் கொடுத்தார். அதற்கான மேற்கூறிய மூன்று முக்கிய காரணங்களோடு அதி முக்கிய காரணமாக அமைந்தது அவரது குருபக்தியும் இறைபக்தியும்தான்.

"
நரேன் (சுவாமி விவேகானந்தர்) உலகிற்குப் போதிப்பான்" என்று அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்ணர் ஆண்டவனின் கட்டளையைப் பிரகடனப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் அந்தக் கட்டளையை நிறைவேற்றும் ஒரு பக்தனாக, ஒரு புனிதராக, உலக தரத்தில் ஓர் ஒப்பற்ற மனிதராகத் தன்னை முற்றிலும் மேம்படுத்திக் கொண்டார். உலக அரங்கில் அவரது அந்த ஒப்பற்ற நாடகம் அரங்கேறும் முன்பு எத்தனை இன்னல்கள் வந்தாலும் அத்தனையும் அவரது பக்தி, ஞான, வைராக்கியத் தீயின் முன்பு தூசிகளாயின.

இன்று உலகை மிரட்டி வரும் மதவெறி, பிரித்தாளும் சூழ்ச்சிகள் போன்றவற்றிற்கு விவேகானந்தர் தமது உரையில் பின்வருமாறு அன்றே சாவுமணி அடித்தார்:

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப் பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன; உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலை குலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி,மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

                                                                

சுவாமிஜியின் சிகாகோ உரையை ஒவ்வொரு மனிதனும், ஏன், உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு முறை வாசித்தால்கூட உலகம் பெருமையால் நிமிர்ந்து நிற்கும்.

அவ்வளவு உன்னதமான உரை நிகழ்த்திய பிறகும் "அம்பிகை என் மூலமாக அந்த உரையை நிகழ்த்திக் கொண்டாள். குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்தான் என் மூலமாக உரையாற்றினார்" என்றார் சுவாமி விவேகானந்தர். அது அவரது குருபக்தி மற்றும் தேசபக்தியின் வெளிப்பாடு.

இவ்வாறு மனிதனின் தெய்வீகத் தன்மையை மக்களுக்கு உணர்த்த துடித்த உள்ளம், அதைச் செய்வதற்கான தன்னம்பிக்கை, அதற்கான ஆண்டவனிடமிருந்து பெற்ற கட்டளை மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான ஆன்மிக தகுதி ஆகியவற்றின் மூலம் உலகிற்கு நன்மை புரிந்தார்.

முத்தாய்ப்பாக, சுவாமி விவேகானந்தர் ஓர் இந்து சமயத் துறவி மட்டுமல்ல, புத்தரைப் போன்று, இயேசுவைப் போன்று, ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று அவரும் உலகத்தைச் சீர்செய்ய வந்த ஒப்பற்றவர் என்பது உலகம் விரைவில் அறிந்து கொள்ளும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

11.09.2024

இதனைக் கேட்க

thanjavur