விவேகானந்தரைப் போல் உங்கள் குழந்தைகளும் மேதாவியாக முடியுமா?

02.11.24 06:32 PM - By thanjavur

சுவாமி விவேகானந்தர் போல் என் மகனும் ஒரு மேதாவி ஆக வேண்டும் என ஏங்கும் பெற்றோர் பலர்.

    

இந்த எண்ணம் வந்த உடனேயே அப்படி எல்லாம் நாம் நம் குழந்தைகள் ஆக முடியுமா? முதலில் அப்படி மெத்த படித்தவர்களாக, மேதாவிகளாக ஆக வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளதா? அப்படி ஒரு ஆசைகூட இல்லையே என்று பலருக்கும் தோன்றும்.

    

இன்னும் சிலர் சிலருக்கு இப்படியும் ஒரு எண்ணம் வரும். சுவாமி விவேகானந்தரோ பிறவி மேதை, இறைவனது தூதர், தெய்வப்பிறவி. அவரால் அப்படி மேதாவியாக விளங்க முடியும். நம்மாலோ, நம் பிள்ளைகளாலோ அது இயலாது என்று சோடா பாட்டில் ஆர்வம் போல் பொங்கி அடங்கிவிடும்.

    

சுவாமிஜிக்கும் சாதாரண மனிதனுக்கும் மலை - மடு அளவு வித்தியாசம் உள்ளது உண்மையே. சுவாமி விவேகானந்தர் எப்படி படித்தார்? அவரது குறுகிய வாழ்நாளில் அவ்வளவு பெரிய கல்விக் கடலாக எப்படி மாறினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

    

அதற்கு முன்பு பொதுவாக நமது ஒரு சராசரி மாணவன் எப்படி படிக்கிறான் என்பதை பார்க்கலாம். 

    

1. உதாரணமாக, குமார் என்பதை ஒரு மாணவன் முதலில் கு- மா-ர் என ஒவ்வோர் எழுத்தாகப் படிக்கிறார். 

    

2. பிறகு அதை நினைவில் கொள்கிறார். கூட்டிப் படிப்பதும் நினைவில் வைத்துக் கொள்வதும் விரைவான பழக்கமாகிறது. 

    

3. அடுத்து, எவ்வளவு வேகமாக ஒருவர் படிக்கிறாரோ, அதே வேகத்திற்கு அர்த்தத்தையும் புரிந்து கொள்கிறார். அ = அம்மா, ஆ = ஆண்டவன் போன்றவற்றைக் கற்பனையில் அவர் காண்கிறார்.

    

சாதாரணமாக, பல சிறுவர்கள் படிக்க ஆரம்பிக்கும்போது 5 நொடிக்கு 6 எழுத்துகளைப் படிக்கலாம். ஆனால் அதன் பின் அந்த வேகத்தை அவர்கள் கூட்டிக் கொள்வதில்லை. பிற்காலத்தில் ஓரளவிற்கு வேகம் கதைப் புத்தகங்கள் படிப்பதனாலும் படிப்பதை கிரகிக்கும் வேகமோ, படித்துப் புரிந்து கொண்டதை விவேகமாகவோ மாற்றிக் கொள்வதில்லை. 

    

ஆனால் சுவாமி விவேகானந்தர் எப்படிக் கற்றார் தெரியுமா?

    

4. குமார் என்பதை சுவாமிஜி சிறுவனாக இருந்தபோது 2 நொடிகளில் படித்தார் என்றால், அவர் வளர வளர அதே பெயரை ஒரு நொடிக்கும் குறைவான மைக்ரோ நொடி நேரத்தில் படித்து முடித்தார். இதை ஃபாஸ்ட் ரீடிங் என்பார்கள். பலர் வேகமாக படித்தாலும் படித்ததை புரிந்து கொள்ள முடிகிறதா? புரிந்துகொண்டதை உணர முடிந்ததா என்பது சந்தேகமே. 

    

ஆனால் தனது வாசிப்பு அனுபவத்தை பிற்காலத்தில் கூறினார்: 

    

“...நான் எந்த நூலையும் வரிவரியாகப் படிப்பதில்லை. பாராவின் முதல் மற்றும் முடிவு வரியையும் படித்தாலே நூலாசிரியர் கூற வந்த கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும். படிப்படியாக அந்த ஆற்றல் என்னுள் மேலும் வளர்ந்தது. அதன் பின் பாராக்களையும் படிக்க வேண்டியிருக்க வில்லை. ஒரு பக்கத்தின் முதல் வரியையும் கடைசி வரியையும் படித்தாலே அதில் கூறப்பட்டதை அறிந்துகொள்ள முடிந்தது.”

    

இப்படி சுவாமிஜியின் கற்பதில் கவனமும் ஆர்வமும் அதிகரித்ததால் அவரது வேகமும் அறிவை ஏற்கும் திறனும் அதிகரித்தது. இவ்வாறு கற்பது Diagonal reading எனப்படும். இதனால் சர்.ஜான் லபக் என்ற அறிஞரின், சுமார் 600 பக்கம் கொண்ட ஒவ்வொரு நூலையும் நாளுக்கு ஒன்றாகப் படித்து முடித்தார். 

    

ஆனால் சாதாரண மாணவன் ஒவ்வோர் எழுத்தாக, வார்த்தையாகப் பக்கவாட்டு Horizontal reading முறையில் படிக்கிறான். சுவாமிஜிக்கும் நமக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இது.

    

சுவாமிஜி படித்தவற்றை ஆழமாகப் புரிந்து கொண்டார். அவர் எதைப் படித்தாலும் ஒரு முறையிலேயே அதன் சாரத்தைப் புரிந்து கொள்வார். அதனால் அவர் ஏகசந்த க்ராஹியாக விளங்கினார். இந்தச் சக்தி தமக்கு மட்டுமல்ல; முயற்சியும் பயிற்சியும் உள்ள எல்லோருக்கும் சாத்தியம்தான் என்று அவரே கூறுகிறார். 

    

அதோடு சுவாமிஜி படித்ததை எல்லாம் மூன்று நான்கு தளங்களில் சேமித்து வைத்தார் என்று கூற வேண்டும். நினைவிலும் அறிவிலும் அனுபவத்திலும் உணர்விலும் தான் கற்றதை பதிவு செய்து வைத்துக் கொண்டார்.

    

சிந்தனையைத் திரட்டு!    

கற்கும் முறைகளுக்கான படிகள் மெக்காலே முறையில் பல உள்ளன. அவை யெல்லாம் அறிவு மற்றும் நினைவு எனும் தளங்களிலேயே தங்கி விடுகின்றன. ஆனால் நமது பாரத பண்பாட்டு கற்றல் முறையில் பின்வரும் படிகள் மிக முக்கியமானவை.

1. உதாரணமாக, ராமன் நல்லவன் என்பதை எழுத்துக் கூட்டிப் படிப்பது, 2. ராமனின் குணத்தைப் புரிந்து கொள்வது, 3. ராமனை மனதில் கண்டு மகிழ்வது போன்ற பல நிலைகள் உள்ளன.கொள்வது, 3. ராமனை மனதில் கண்டு மகிழ்வது போன்ற பல நிலைகள் உள்ளன.கொள்வது, 3. ராமனை மனதில் கண்டு மகிழ்வது போன்ற பல நிலைகள் உள்ளன.

    

சாதாரண மனிதர்கள் இந்தச் சில படிகளிலேயே தாங்கள் அறிந்து கொள்வதை நிறுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சேகரிக்கும் செய்திகள் திரட்டப்படுவதில்லை; முறையாக அடுக்கப்படுவதும் இல்லை; மனதின் ஆழத்தில் வைத்துப் பூட்டப்படுவதுமில்லை; அதனால் அவை எந்தவித தாக்கத்தையும் கற்பவரிடத்தில் ஏற்படுத்துவதில்லை. அவர்களது சிந்தனை Straight thinking  ஆக மட்டுமே இருக்கும். அதில் புதுமை இருக்காது. படைப்பாற்றலுக்கு அங்கு பஞ்சம் இருக்கும்.

    

ஆனால் மேதாவிகள் அடுத்த நிலைக்குத் தங்கள் சிந்தனையைச் செலுத்து கிறார்கள். நான்காம் நிலை என்பது சிந்தனைகளைக் கூட்டுவது என்பதாகும்.

    

4. ராமன் முன்னமே செய்த செயல்களுடன் இப்போது அவன் செய்ததை ஒப்பிட்டுப் பார்ப்பது. அதனால் என்ன நன்மை விளையும்? 

    

கூகுள் இணையதளத்தில் இமயமலை என்று டைப் நீங்கள் செய்கிறீர்கள். உடனே அது சம்பந்தமான எல்லா வலைதளங்களும் வரும் அல்லவா? 

    

அதுபோல சுவாமி விவேகானந்தர் ஒன்றைப் பற்றிப் படித்தாலோ, சிந்தித்தாலோ அது தொடர்பான ஏற்கனவே அவரிடத்தில் உள்ள எல்லா விஷயங்களும் அவரது மனக்கண் முன் வந்து நிற்கும் (Association of ideas).

    

அவற்றோடு இப்போது அறிந்து கொண்ட செய்தியையும் அவர் இணைத்து விடுவார். அவரது தகவல் களஞ்சியம் இப்படி பெருகியது. அவர் அடிக்கடி அச்சிந்தனைகளை நினைவு கூர்வதாலோ, அதைப் பற்றிப் பிறருக்கு எடுத்துக் கூறுவதாலோ அவை நினைவு சக்தியாக மாறின. ஒரே செய்தியை பல இடங்களில் சொன்னாலும் உணர்வுகளிலும் உணர்ச்சி வேகத்திலும் அனுபவம் முதிர்ச்சியிலும் அவை புதுப்புது பொருளை அவருக்குத் தந்தன.

    

“நல்ல நினைவாற்றல் ஓர் ஆன்மிகப் பண்பு” என்பார் சுவாமிஜி. அது சிதைவுபடாத மனதைக் காட்டும். அப்படிப்பட்ட மனதிற்கு அபரிமிதமான சக்தி வந்தமைகிறது. 

    

இதனை அடுத்து ஐந்தாம் நிலை கற்றல் வருகிறது. 

    

5. ராமன் செய்த செயலுடன் வேறு யாராவது இதேபோல் செய்திருந்தால் அதை ஒப்பிட்டுப் பார்ப்பதும், அதற்கு நேர்மாறாகச் சிந்திப்பதும், வெவ்வேறு கோணங்களில் ஆய்ந்து தெளிவதும் (Lateral thinking) என்று பல நிலைகள் உள்ளன. ஓர் உதாரணம். 

    

போரில் உப தளபதி ஓடோடி வந்து தளபதியிடம், எதிரிகள் நம்மை நாற்புறமும் சூழ்ந்துவிட்டார்கள் என்றான். சிறு படையை வைத்திருந்த தளபதியோ, பெரிய படையுடன் எப்படிப் போராடுவது என்று அஞ்சவில்லை. தேவையில்லாத வழிகளில் சிந்திப்பதற்குப் பதிலாக, வீரத்துடன் போரிடுவதே விவேகம் என தீர்மானமாக முடிவுக்கு வந்தார். உடனே அந்த அரசர் “தளபதி, அப்படியெனில் நாம் எதிரிகளை எந்தத் திசையில் வேண்டுமானாலும் தாக்கலாம்” என வீரத்துடன் புறப்பட்டார்; வென்றார்.

    

தெரிந்த முறையிலேயே எல்லோரும் சிந்திக்கும்போது, ஒருவர் ஒரு புது சிந்தனையைக் காண்பிக்கிறார்- out of box thinking; அதன் மூலம் மூடிக் கிடந்த இருட்டறையில் பொக்கிஷத்தைக் கண்டவர்போல் பலரும் மகிழ்வர். 

    

இதற்கடுத்து சிந்தனையை பூட்டு என்ற கற்றலில் ஆறாம் நிலை வருகிறது.

    

6. செய்திகளைத் திரட்டி, சிந்தித்து அவற்றை முறையாக வேண்டியது - வேண்டாதது போன்ற வகைகளில் அடுக்கி வைப்பது. பின் அவற்றை மனதில் - மூளையில் - நினைவில்- சிந்தையில் - உணர்வில் பூட்டி வைத்துக் கொள்வது.

    

தபால் அலுவலகத்தில் பல ஊர்களிலிருந்து வரும் கடிதங்களைப் பிரித்து முறையாக அடுக்கி வைப்பது Pigeon hole box முறை. இது போன்ற முறையை சுவாமிஜி தம் மனதில் கொண்டிருந்தார். ஏற்கெனவே தெரிந்திருந்த ஒன்றுடன், புதிதாக ஓர் அறிவு சேர்ந்தால் அங்கு ஆனந்தம் -வித்யானந்தம் ஏற்படும். 

    

ஆர்வத்துடன் கற்கும் எதையும் நாம் மறப்பதில்லை என்பதால் இந்த வித்யானந்தம் ஒருவனிடம் கிரகிக்கும் சக்தியைக் கூட்டுகிறது. நுணுக்கமான சிந்தனைகள் அங்கு தோன்றும். 

    

அறிவின் ஊற்றுக்கண் எப்படித் திறக்கிறது? எங்கே திறக்கிறது?  சுவாமிஜி விளக்குகிறார்: “நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்கிறோம். அது எங்காவது ஒரு மூலையில் இருந்து அவர் வருவார் என்று காத்துக் கொண்டிருந்ததா? இல்லையே. அது அவர் உள்ளத்திலேயே இருந்தது. சரியான நேரம் வரவே அதை அவர் கண்டுபிடித்தார். 

    

“உலகம் இது வரையிலும் பெற்று வந்திருக்கிற அறிவு முழுவதும் மனதிலிருந்துதான் வந்திருக்கிறது. பிரபஞ்சத்திலுள்ள அறிவு முழுவதும் நிரம்பிய மிகப் பெரிய நூல்நிலையம் உனது உள்ளத்திலேயே அடங்கியிருக்கிறது. புற உலகம் வெறும் தூண்டுதல் மட்டுமே. அவ்வாறு அமைந்து உன் உள்ளத்தை நீ ஆராயத் தேவையான அது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிறது.”

    

சிந்தனைகளை உள் வாங்குவதில் மூன்று முக்கிய நிலைகள் என்று

சாஸ்திரங்கள் கூறும்.  அவை சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.

    

ஒரு குரு சீடனுக்கு உபதேசிக்கிறார். இதுவரை குருவின் உரிமைப் பொருளாய் இருந்ததைச் சீடன் கேட்டுத் தனதாக்கிக் கொள்கிறான். தனதாக்கிக் கொள்வதே அதி அயனம் - அத்யயனம்.

    

உள்ளத்தில் நுழைந்த சொல்லறிவைத் தான் ஜீரணித்துத் தனதாக்கி - தானாக ஆக்கிக் கொள்ளும் உபாயம் சிரவணத்தை ஒட்டி வரும் மனனம் என்பது.

    

தானே தனித்தோ, சக மாணவனுடன் பரிமாறிக் கொண்டோ ஆராய்ந்து அதன் முழு அறிவாக - என்றும் தன்னை விட்டு அகலாதபடி உரிமைப் பொருளாக., இயல்பாக ஆக்கிக் கொள்கிறான். அறிந்து அதைக் கொண்டு தன் குறிக்கோளை அடைகிற சித்திதான் அறிவாலான பயன். அது நிதித்யாஸனம். 

    

குருவின் சொல், சீடனின் கேட்டல், மனனம், நிதித்யாஸனம் என்ற முறையில் இல்லாத கல்வி பயனற்றது. 

    

(ஆனால் இன்று... வானொலி, தொலைக்காட்சி போன்றன எல்லாம் கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க. பாருங்க பாருங்க பார்த்துக் கிட்டே இருங்க.. ஆனா யோசிக்காதீங்க… என்ற சத்தம்தானே மக்களை அலைக்கழிக்கிறது? இன்று நாம் மனனமும் நிதித்யாஸனமும் இல்லாதவர்கள் உபந்நியாசம் செய்வதும், உயர் வாழ்க்கைக்கான வேட்கை இல்லாதவர்கள் அதைக் கேட்பதையும் காண்கிறோம். இதனால்தான் மேதாவிகளை நாம் செயற்கைக்கோள் மூலம் இன்று தேட வேண்டியிருக்கிறது!)

    

தன்னை அறிந்தவன் பிறரையும் வருகிறான்! Each part of the scripture is to be read with the same spirit wherewith it was written என்பர். சுவாமிஜி ஒரு நூலை எடுத்ததும் நூலாசிரியரின் சிந்தனையின் ஊற்றுக்கண்ணையே தொட்டுவிடுவார். அதனால் அவருக்கு அந்த நூல் தொடர்பான எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடிந்தது.

    

படிப்பதில் வேகமும் படித்ததைப் புரிந்து கொள்வதில் விவேகமும், புரிந்ததைத் தக்க வைத்துக் கொள்வதும் (Retentive) சுவாமிஜியின் சிறப்பம்சங்கள்.

    

சுவாமி விவேகானந்தரே தமது சிந்தனையாற்றலைப் பற்றி கூறுகிறார்: “...குறிப்பிட்ட ஒரு கருத்தைத் தர்க்கரீதியாக ஒரு நூலாசிரியர் விளக்க முற்படும்போதும், சரியான மேற்கோள்களைக் காட்டும்போதும், அது நாலைந்து பக்கங்கள் இருந்தால்கூட தர்க்கத்தின் ஆரம்பத்தைப் படித்ததும் ஆசிரியரின் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்வேன்.” -குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்-3

    

கல்வியும் சமயமும் ஒன்றுதான்!

    

மனதின் முழுத்திறமையையும், முழு வளர்ச்சியையும் அறிவதற்குக் கல்வி உதவ வேண்டும். இந்த வளர்ச்சியோடு மேலைநாட்டுக் கல்வி தன் கவனத்தை நிறுத்திக் கொள்கிறது எனலாம்.

    

இதன் அடுத்த நிலை, பாரதப் பாரம்பரியத்தின் சிறப்பம்சமாக மிளிர்கிறது. சுவாமிஜியின் கருத்துப்படி, கல்வியில் தொடங்கி, சமயத்தில் நிறைவுறுவதுதான் மனிதனின் பூரண வளர்ச்சி ஆகும். மனித முயற்சியும் இறையருளும் சேர்ந்து அமைவதே பூரணக் கல்வி. 

    

“மனிதனிடத்தில் ஏற்கனவே புதைந்துள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி ஆகும்” என்று சுவாமிஜி வரையறுத்தார்.

    

ஒவ்வொருவரும் பூரணக் கல்வியைப் பெற சுவாமிஜி மூன்று முக்கிய விஷயங்களைக் கூறுவார்.

    

1. மனதிற்குப் பயிற்சி: 

    

படிக்கும் வேகத்தையும் கவனத்தையும் எப்போதும் கூட்டிக் கொண்டே போகும்போது, நம் கவனம் சிதறாமல் ஓர் இடத்திலேயே குவிகிறது. அப்போது படிப்பதன் பொருள் சுலபமாகப் புரியும்; புரிந்ததை மனதில் முறையாக அடுக்கி வைக்கலாம். அடுத்து,  Ready to attach; ready to detach மனதைப் படிப்பில் இணைத்துக் கொள்வதும், அப்போது மற்றவற்றிலிருந்து மனதை விலக்கி வைத்திருப்பதும் தான் ஒருவர் செய்ய வேண்டியது என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

    

“நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துகளைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை உன் வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் - ஒரு பெரிய நூலகம் முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்” என்றும் சுவாமிஜி கூறுகிறார்.

    

2. மனஒருமைப்பாடு: 

    

“...என்னைப் பொறுத்தவரை, கல்வியின் சாரம் மனஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒரு போதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப் பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன் - (விவேகானந்தரின் ஞானதீபம் 2.359). இப்படிப்பட்ட அறிவைத்தான் காரைக்கால் அம்மையார் “இதயத்து அறிவு” என்கிறாரோ!

    

குழந்தைகளை மேதாவிகளாக்க நினைக்கும்  பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும்போது இந்த இரண்டு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும் என்பார் சுவாமிஜி. 

    

3. பிரம்மசரியம்: வேகமும் விவேகமும் சேர்ந்து செயல்பட உடலுக்கும் மனதிற்கும் சக்தி வேண்டும் அல்லவா? உடல் மனம் புத்தி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் சக்திதான் பிரம்மசரியம் எனப்படும். சுவாமிஜி இதை மிக வலியுறுத்திக் கூறுகிறார்: 

    

“உடலின் சக்திகளைக் கட்டுப்படுத்துவதால் மன ஆற்றல் வளர்கிறது. எனவே உடலில் செயல்படும் பௌதிக சக்திகளைக் கட்டுப்படுத்தி, சேமித்து அவற்றை மன மற்றும் ஆன்மிக ஆற்றலாக மாற்ற வேண்டும். எதையும் சிந்திக்காமல் அர்த்தமற்ற இன்ப நாட்டங்களில் உடலின் சக்திகளைச் செலவிடுவது அபாயகரமானது; இது மனதின் கிரகிக்கும் ஆற்றல்களை (Receptivity) இழக்கச் செய்கிறது.

    

சற்று யோசித்துப் பாருங்கள். நம் மாணவ-மாணவியரின் கவனத்தைக் குழிதோண்டிப் புதைக்க இரவு பகலாக செல்போன்கள், கிரிக்கெட் கோமாளித்தனம், சினிமாக்கள், சின்னத்திரைகள் போன்ற பல ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இவற்றிலெல்லாம் பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருந்தால்தான் பிள்ளைகள் மேதாவி ஆவார்கள்.

    

ஆழ்ந்த பொருளுள்ள சிந்தனைகள், கருத்துகள் ஒருவரது அகத்திலிருந்து வர வேண்டுமென்றால் அங்கு தியான அமைதி வேண்டியிருக்கிறது. மனதும் மூளையும் நினைவும் அமைதியாக இருந்தால்தான் அது சாத்தியம்.

    

ஒரு சர்வே கூறும் திடுக்கிடும் செய்தி இது: சராசரியாக ஒவ்வொருவரும் நொடிக்கு 2.3 வார்த்தைகளைக் கேட்கவோ, பார்க்கவோ செய்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வார்த்தைகளைக் கேட்கிறோம்; பேசுகிறோம்; பார்க்கிறோம். மேலும் மொபைல் போன், கணினி, வலைதளம், டி.வி. பிற ஊடகங்களால் ஒருவர் ஒரு நாளைக்கு 34 ஜிகாபைட்ஸ் (!?) அளவிற்குச் செய்திகளை ஏற்கிறாராம். - (Swami Narayan Bliss- Feb 10)(Swami Narayan Bliss- Feb 10)(Swami Narayan Bliss- Feb 10)

    

வெளியிலிருந்து இவ்வளவு விஷயங்களை மனதிலும் மூளையிலும் ஏற்றால், அவற்றை முறையாகப் பிரித்து அடுக்க முடியுமா? உள்ளே வைத்துப் பூட்டத்தான் முடியுமா? அப்படிப்பட்ட மனதிலிருந்தும் மூளையிலிருந்தும் பிரமாதமாக என்ன புதுச் சிந்தனைகள் வெளி வந்துவிடும்?

    

எப்படிச் சிந்திப்பது? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே மனமானது செய்திகளால் திணிக்கப்பட்டுவிடுகிறது என்பதும் சுவாமிஜி கூறும் ஒரு முக்கிய செய்தி. 

    

கற்றலில் ஒரு நிறைவான நிலை உண்டென்றால் அது இயற்கையி டமிருந்தோ அல்லது இறைவனிடமிருந்தோ அறிவைப் பெறும் மெய்யறிவு ஆகும். சுவாமி விவேகானந்தர் மேலை நாடுகளில் இரவு பகலாக மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். சில நாட்களில் அவர் சோர்ந்து விடுவார். அந்தச் சமயத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் அடுத்து அவர் என்ன பேச வேண்டும் என்பதைக் கூறிச் சென்ற வரலாற்று பதிவுகள் உள்ளன.

    

ஆசிகளாக வரும் மேலறிவு சிவபெருமானை ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ என சிவபுராணம் வர்ணிக்கும். சிவாம்சம் மிக்க சுவாமிஜிக்கும் அது சாலப் பொருந்தும்.

    

மாணவனின் நிலைக்கு இறங்கி வந்து போதிக்கும் ஆசிரியரே உண்மையான ஆசிரியர் என்றார் சுவாமிஜி. இறங்கி வருவதற்கு இரக்கம் வேண்டும். தான் பெற்ற ஒன்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் முதல்வராக இருந்தவர் சுவாமிஜி. அவரது மனம் சுயநலமில்லாமல் விரிந்து கிடந்தது.

    

சுவாமிஜியின் அறிவும் மனதும் விரிந்ததால் பிறரது அறிவிலிருந்தும் மனங்களிலிருந்தும் புதுப்புதுச் சிந்தனைகளும் செயல் ஊக்கங்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. அதனால் சுவாமிஜியின் ஆன்மாவும் எல்லை

யற்றதாக மாறியது. 

    

அத்தூய ஆன்மா பிற மேலான ஆன்மாக்களோடு இணைந்து நின்றது. அதனால் அந்த ஆன்மாக்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் சுவாமிஜி யிடத்திலும் வந்தன. அப்படிப்பட்ட அறிவை அருளறிவு என்பார் தாயுமானவர். 

    

"आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतः" ஆ நோ பத்ரா க்ருதவோ யந்து விஸ்வத: - எல்லா திசைகளிலிருந்தும் நற்சிந்தனைகள் வரட்டும் (ரிக் வேதம்) போன்ற பிரார்த்தனைகள் சுவாமிஜியின் மனதில் இயல்பாகவே உதித்தன.  ஆ நோ பத்ரா க்ருதவோ யந்து விஸ்வத: - எல்லா திசைகளிலிருந்தும் நற்சிந்தனைகள் வரட்டும் (ரிக் வேதம்) போன்ற பிரார்த்தனைகள் சுவாமிஜியின் மனதில் இயல்பாகவே உதித்தன.  ஆ நோ பத்ரா க்ருதவோ யந்து விஸ்வத: - எல்லா திசைகளிலிருந்தும் நற்சிந்தனைகள் வரட்டும் (ரிக் வேதம்) போன்ற பிரார்த்தனைகள் சுவாமிஜியின் மனதில் இயல்பாகவே உதித்தன. 

    

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், எதைத் தெரிந்து கொண்டால், எல்லாம் தெரிந்து கொண்டதாகுமோ, அதைத் தெரிந்து கொண்டார் - கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வமிதம் விஜ்ஞாதம் பவதி இதி (முண்டக உபநிஷதம் 1.1.3).

    

இது தெய்வ கருணை அல்லது ரிஷிகளின் அருள் எனலாம். அருளறிவுடன் ஏட்டறிவும் இணைந்ததால் சுவாமிஜி சிறந்த தத்துவவாதியாகவும் அனுபூதிமானாகவும் விளங்கினார்.

    

அருளில் நிற்பதுதான் கல்வியின் சாரம் என்கிறார் தாயுமானவர். அவர் தனது நெஞ்சத்திடம் பேசுகிறார்.

    

நெஞ்சமே, இப்பிரபஞ்சத்தைக் கவனமாகப் பார்த்தால் அவற்றுள் சீராக இருந்து அனைத்தையும் செயல்படுத்தும் ஒரு திறனைக் காண்பாய்! அதுவே திருவருள். அந்தத் திருவருளுக்குத் தக்கபடி நிற்பதைவிட்டு இந்தப் பிரபஞ்சத்தில் கற்பதற்கென்று வேறு என்ன உள்ளது?

    

பார்ஆதி பூதம்எல்லாம் பார்க்குங்கால், அப்பரத்தின் சீர்ஆக நிற்கும் திறம் கண்டாய் - நேர் ஆக நிற்கும் திருவருளில் நெஞ்சே! யாம் நிற்பது அல்லால் கற்கும் நெறி யாது இனிமேல்? காண்.

    

அந்தத் திருவருளில் நிற்பதற்கு மனப்பயிற்சி, மன ஒருமைப்பாடு, பிரம்மசரியம் ஆகிய சக்திகளும் தேவை என்கிறார் சுவாமி விவேகானந்தர். 

    

அவை தமக்கு மட்டும் வரும்; பிறருக்கு வராது என்று சுவாமிஜி கூறவில்லை. என் பிள்ளைகள் என்னைவிட 100 மடங்கு அதிகம் சாதிக்க வேண்டும் என்றவர் அல்லவா அவர்!

    

நாம் எல்லோருமே வாழ்க்கையில் மாணவர்கள் தான். சுவாமிஜி கூறியபடி மனதை ஒருமுகப்படுத்தி அறிவைப் பெற்றால் இந்தப் பிறவியிலோ, அடுத்த பிறவியிலோ அனைவரும் மேதாவி ஆகலாம். 

    

ஊதுவதற்குத் தக்கபடி உப்பும் பலூன்தானே வாழ்க்கை என்பது! முயற்சி செய்வோம் வாருங்கள்.

    

சுவாமி விமூர்த்தானந்தர்

02.11.2024

இதனைக் கேட்க

thanjavur