RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பலஹாரிணி காளி பூஜை சிறப்பம்சம்

05.06.24 07:35 PM By thanjavur

நமது நாடு பின்தங்கி இருந்ததற்கு இரண்டு காரணங்களை தமது அனுபவ அறிவோடு சுவாமி விவேகானந்தர் கூறினார்:

 

1. பாமர மக்களைப் புறக்கணித்தது, 2. பெண்களுக்கு மதிப்பும் கல்வியும் தராமல் வைத்திருந்தது.

 

பெண்களை தேவியாக பாவிப்பது நம் மரபு. ஆனால் கோவிலில் பெண் தெய்வங்களை  வழிபட்ட நாம் வீட்டிலும் வெளியிலும் பெண்களை போகப் பொருளாகவோ அல்லது புறக்கணித்தோ அவர்களை நடத்தினோம். அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு என்பது சிந்தனைச் சோம்பேறிகளின் கேள்வியானது.

 

காலப்போக்கில் மெல்ல மெல்ல நாம் வளர்ந்தோம். பெண் விடுதலை ஒரு பெரிய இயக்கமானது. பெண்கள் படித்தார்கள். இன்று அவர்கள் பெரிய பதவிகளில் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக, பேராசிரியர்களாக விளங்குகிறார்கள். இதற்குப் பின்னே ஒரு பெரும் பூஜையால் விளைந்த சக்தி உண்டு. பலன் உண்டு என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 

சுவாமி விவேகானந்தர் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய உரைகளில் வந்த சீரிய சிந்தனைகளில் ஒன்று - பெண் விடுதலை என்பதாகும். பெண்ணைச் சக்தியாக கண்ட சுவாமிஜி அந்தச் சக்தியை வளர்க்கப் பெரிதும் பாடுபட்டார். அவரது சிஷ்யையான சகோதரி நிவேதிதை இந்தியப் பெண்களின் கல்விக்காகக் கடுமையாகப் பாடுபட்டார். அதே கருத்துகளைப் பாடிப் பெண்களின் வளர்ச்சிக்கு மகுடம் சூட்டினார் மகாகவி பாரதியார்.

 

பாரதப் பெண்களுக்கு இப்படி ஓர் உத்வேகம் உதித்தது எவ்வாறு? பெண்களின் முன்னேற்றம் என்ற அந்த விருட்சத்தின் வேர் எங்கு இருக்கிறது என்று பார்த்தோம் என்றால், அது நம்மை அன்னை ஸ்ரீசாரதாதேவியின் வரலாற்றை வாசிக்க வைக்கும்.

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சனாதன தர்மத்திற்குப் புது உத்வேகத்தைக் கொடுத்தார். அதன் சாஸ்திரங்களுக்குப் புது விளக்கம் கொடுத்தார். சடங்குகளுக்குப் புது அர்த்தம் கொடுத்தார். சந்நியாச தர்மத்திற்குப் புது வழிகாட்டினார். சனாதன தர்மம் போற்றும் தெய்வங்களை ஆராதித்து தெய்வீக சக்திகளை ஜகம் முழுவதும் நிரப்பினார்.

 

அப்படிப்பட்ட ஓர் அரிய பூஜைதான் பலஹாரிணி காளி பூஜை. இந்த தேவிதான் கொடிய கர்மவினைகளிலிருந்து நம்மை மீட்பவள். தலையெழுத்து எனப்படும் கர்மபந்தங்களை வேரறுப்பவள். தீராத தீய வினைகளைக் கணத்தில் போக்குபவள் அந்த தேவிதான். அதோடு, வினைப் பயன்களைப் பக்தர்களுக்கு வழங்குபவள் என்று அம்பிகையின் அருட்திறனுக்குப் பல பொருள் உண்டு.

 

1873, மே மாதம் 25-ஆம் நாள். அன்று அமாவாசை. வங்காளத்தில் பலஹாரிணி காளி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த தினம். அன்று இரவு தேவியை ஆராதித்து அவளை உகப்பித்து நல்வினைப் பயன்களை அவளிடமிருந்து பெறுவது பூஜையின் நோக்கம்.

 

அந்த ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் பலஹாரணி பூஜையைச் செய்ய விரும்பினார். அவர் அன்று பூஜையை தக்ஷிணேஸ்வரத்தில் இருக்கும் அவரது அறையிலேயே ஏற்பாடு செய்தார். தேவியின் ஆசனத்தில் அன்னை ஸ்ரீசாரதாதேவியை அமர்த்தினார்.

 

நாணமே வடிவான ஸ்ரீசாரதா தேவி அந்தப் பூஜையை ஏற்றுக் கொண்டது ஆச்சரியமானது. ஸ்ரீராமகிருஷ்ணர் தன் மனைவியையா வழிபட்டார்?

 

இல்லை. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக, லலிதா திரிபுரசுந்தரியாக 18 வயதான ஸ்ரீசாரதையை 16 வகையான உபச்சாரங்களால் ஷோடசி பூஜை செய்து அவர் வழிபட்டார்.

 

ஸ்ரீசாரதா தேவியின் திருப்பாதங்களில் தமது திருக்கரங்களாலேயே நீரிட்டு வணங்கினார். சுகந்த புஷ்பங்களால் அர்ச்சித்தார். நேர்த்தியான மாலை அணிவித்தார். சந்தனம் பூசினார். குங்குமம் இட்டார். கலசத்திலிருந்து மந்திர புனித நீரை சாரதையின் மீது தெளித்தார். தூப தீபங்கள் காட்டினார். நைவேத்தியம் படைத்தார். பிறகு

 

மந்திரங்களை ஓதிப் பின்வருமாறு பிரார்த்தித்தார்:

 

'ஓ அன்னையே, எல்லா ஆற்றல்களுக்கும் தலைவியான திரிபுரசுந்தரியே! முழு நிறைவாம் கதவினைத் திறப்பாய்! இவளது (சாரதையின்) உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்துவாய்! இவளிடத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பாய்!"

 

அதன்பின் குருதேவர் சாரதையின் உடலில் மந்திரங்களை உருவேற்றி, அவளை சாட்சாத் தேவியாக எண்ணி வணங்கினார்.

 

பூஜையின் பூரண நிலை. அங்கு பூஜாரி இல்லை, பூஜிக்கப் பெற்ற பெண் இல்லை. அந்த இருவரும் ஒரே பாவத்தில், தெய்வீக நிலையில் சூழ்நிலையை மறந்து தியானத்தில் லயித்திருந்தனர்.

சாரதைக்குள் ஸ்ரீலலிதாதேவி ஆவிர்பாவித்து விட்டதைக் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் சந்தனம் தோய்ந்த மலர்களை சாரதையின் மலரடியில் சமர்ப்பித்தார். பிறகு கை கூப்பி அந்த தேவியை வணங்கினார் :

 

"மங்கலமாம் அனைத்திற்கும் மங்கலமானவளே, அனைத்துச் செயல்களுக்கும் மூலகாரணியே, அடைக்கலம் தருபவளே, முக்கண் உடையவளே, சிவபெருமானின் நாயகியே, கௌரீ, நாராயணீ, உன்னை வணங்குகிறேன், உன்னை வணங்குகிறேன்."

 

பூஜை நிறைவுற்றது. வித்யா ரூபிணியான அகிலாண்டேசுவரியை சாரதையிடம் எழுந்தருளச் செய்து வழிபட்டதன் நிறைவாக ஸ்ரீராமகிருஷ்ணரே சாஷ்டாங்கமாக தேவியை விழுந்து வணங்கினார்.

 

ஓர் அவதாரபுருஷரே பக்தனாக மாறித் தமது தவத்தினால் பெற்ற சக்திகளையும் சித்திகளையும் பலன்களையும் தேவியின் திருவடியில் சமர்ப்பித்தார். அதோடு தமது ஜபமாலையையும் சமர்ப்பித்தார்.

 

தேவலோகத்தில் இருந்து கங்கை பூலோகத்திற்கு வந்தபோது அதன் வேகத்தைத் தமது சிரசில் சிவபெருமான் ஏந்திக் கொண்டார். அதன் மூலம் கங்கையை நிதானப்படுத்தி உக்ரநதியாக இருந்த அவளை அனுக்ரக நதியாக மக்களுக்குப் பயன்படும்படி பூலோகத்தில் பாய விட்டார்.

 

அது போன்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தேவரும் வியந்த தமது 12 வருட காலக் கடும் தவத்தினால் பெற்ற சித்திகளையும் சக்திகளையும் சாதனா பலன்களையும் ஏற்றுக் கொள்ளும் ‘தெய்வத்திரு கொள்கலமாக' அன்னை ஸ்ரீசாரதாதேவியைக் கண்டார். அதனால் தமது அனைத்தையும் ஸ்ரீசாரதையிடமே சமர்ப்பித்தார்.

 

ஏன்? தந்தை சம்பாதிப்பார். ஆனால் குழந்தைகளுக்காகச் சமைத்து எவ்வாறு, எப்போது, எவ்வளவு, எப்படி, யாருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று தாய்க்குத்தான் தெரியும்.

 

தேவர்களும் போற்றும் அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக சக்தியை அகிலம் தாங்குமா? புரிந்து கொள்ளுமா? போற்றத்தான் தெரியுமா?  ஆதலால் அதற்கேற்ற சத்பாத்திரமாக அன்னை ஸ்ரீசாரதையை ஷோடசி பூஜையின் மூலமாக ஸ்ரீராமகிருஷ்ணர் மாற்றினார். தேவியை உபாசித்து உபாசித்து, மந்திரத்தை உருவேற்றி உருவேற்றி, மனைவியை மங்களம் மிக்க மாதாவாக, மாநிலத்திற்கே மாதாவாக மாற்றினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

அதன் பிறகு ஆன்மீகச் சாதகர்கள் பக்தர்கள் பெண்களை தேவியாக பாவிப்பது ஓர் ஆன்மீகச் சாதனை என்பதைக் கண்டு கொண்டனர். பெண்களை இழிவுபடுத்துவது அன்னை பராசக்தியையே அவ்வாறு செய்வதற்குச் சமம் என்ற உண்மை ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிக் கொடுத்தார். பெண்ணை மதிப்பது ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் ஒருவனை உயர்த்தும் என்ற உண்மையை உலகம் மீண்டும் உணர்ந்தது.

 

பலஹாரிணி காளி பூஜையின் மூலம் குருவான ஸ்ரீராமகிருஷ்ணரும் சிஷ்யையான ஸ்ரீசாரதையும் ஆன்மீக உயர் உணர்வுகளில் ஒன்றாகச் சங்கமித்தனர்.

 

‘சிவனையும் சக்தியையும் ஒன்றாக வழிபடாவிட்டால் ஸ்ரீவித்யை பலனளிக்காது' என்று தந்திர சாஸ்திரங்கள் கூறும். சாரதா தேவியை ஷோடசியாகப் பூஜித்ததன் மூலம் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் பகவதி ஸ்ரீசாரதையும் ஒன்று என்பது காட்டப்பட்டது.

 

அதோடு தமது காலத்திற்குப் பிறகு தமது ஆன்மீக வாரிசாக அன்னை ஸ்ரீசாரதாதேவி விளங்குவார் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் தெளிவாக இந்தப் பூஜையின் மூலம் நிரூபித்தார்.

 

ஸ்ரீசாரதாதேவி, ஸ்ரீராமகிருஷ்ணரின் தபோபலத்தை ஏற்றதை எண்ணி வியர்க்கிறார் சுவாமி பிரம்மானந்தர்: ‘நம் அன்னை சாரதையை யாரால் அறிந்துகொள்ள முடியும்! பெரிய யோகிகள்கூட அவளை அறிந்து கொள்வது கடினம். சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? அவதார புருஷரான ஸ்ரீராமகிருஷ்ணர் செய்த பூஜையை ஏற்றுக் கொள்கின்ற ஆற்றல் ஒரு சாதாரணப் பெண்ணிடம் இருக்க முடியுமா?' என்ற கேள்வியை எழுப்புகிறார் சுவாமி பிரம்மானந்தர்.

 

பெண்களைப் ‘புலால் கண்'களுடன் காணும் மனிதர்கள் நிறைந்த உலகில் சொந்த, அழகான மனைவியை, பிரியமுள்ள மகளாக, சீலமிக்க சிஷ்யையாக, அன்பான தாயாக நடத்தி வந்த ஸ்ரீராமகிருஷ்ணர் பெண்களை தேவியாக மதிக்க வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுத்த தினம்தான் பலஹாரிணி காளி பூஜை தினம்.

 

இந்தப் பூஜை மூலம் சனாதன தர்மத்தைக் கடைபிடிக்கும் பெண்களுக்கு ஒரு புது மரியாதையையும் கௌரவத்தையும் ஸ்ரீராமகிருஷ்ணர் பெற்றுத் தந்தார் என்றால் அது மிகையல்ல.

 

சுவாமி விவேகானந்தர் இன்றைய பெண்கள் லட்சியமாகக் கொள்வதற்கு அன்னையையே அவர்கள் முன் வைத்துள்ளார்: ‘...சக்தியின்றி உலகிற்கு விடிவு இல்லை. எல்லா நாடுகளை விடவும் நம் நாடு ஏன் பின்தங்கி இருக்கிறது? ஏன் பலவீனமாக உள்ளது? ஏனெனில் சக்தியை நாம் மதிக்காததால்தான். அந்த அற்புத சக்தியை மீண்டும் மலரச் செய்வதற்கே அன்னை பிறந்துள்ளார். அவரை மையமாகக் கொண்டு கார்கிகளும் மைத்ரேயிகளும் மீண்டும் உலகில் தோன்றுவார்கள்’.

 

சுவாமி விவேகானந்தருக்குத் தான் அன்னை ஸ்ரீசாரதையின் மீது என்ன ஒரு நம்பிக்கை. அப்படிப்பட்ட சாரதை அன்னையை வணங்குவோம், அவர் நமக்கு வாழ்வின் சாரத்தை வழங்குவார் ஸ்ரீபலஹாரிணி தேவியாக!

சுவாமி விமூர்த்தானந்தர்

05.06.2024

செவ்வாய்க்கிழமை

இதனைக் கேட்க

thanjavur