
ஆன்மிக வாழ்க்கையை எளிமையாக்கிக் கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். எளிமை
யின் மூலம் இறையருளை எளிதில் பெறலாம் என்பது அவரது முக்கிய உபதேசமாகும்.
இறைவனை உணர்ந்து நாம் சீரும் சிறப்புமாக விளங்கிட வாழ்க்கை பற்றிய மூன்று முக்கிய அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் போதும்.
1. மறதி மனிதனின் இயல்பு. அதிலும் குறிப்பாக, இன்றைய மனிதன் கடவுளை மறப்பதில் தனி சுகமே காண்கிறான். ஆனால் மனிதன் மறந்தாலும் அவனைக் கண்ணெனக் காக்கும் பணியை மறக்காதது கடவுளின் விரதம் ஆகும். கடவுளின் அந்த விரதத்தின் வெளிப்பாடு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலும் உபதேசங்களிலும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.
2. இந்த உலகில் மக்கள் இரண்டு விதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று, மக்கள் தத்தமது ஆசைகளினால், அகங்காரத்தினால், அவசரத்தினால், கர்ம வினைகளினால், விதிவசத்தினால், கவனக்குறைவினால், கூடா ஒழுக்கத்தினால் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்வது நிறைவில்லாத வாழ்க்கை ஆகும்.
இரண்டாவது, நாம் இப்படி வாழ வேண்டும் என்று நம்மைப் படைத்தவன் வடிவமைத்து வைத்திருக்கிறார். கடவுள் நமக்காகத் திட்டமிட்ட வாழ்க்கையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வது நிறைவான ஆன்மிக வாழ்க்கை ஆகும்.
3. கடவுளை நான் நேசிக்கிறேன் என்பது சமய வாழ்க்கை. கடவுள் என்னை நேசிக்கிறார் என்பது ஆன்மிக வாழ்க்கை.
இந்த ஆன்மிகப் புரிதலின்படி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வலியுறுத்தும் ஒன்றாகும்.
இந்த மூன்று புரிதல்களைப் பெறுவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் பெரிதும் முயற்சிக்கிறார்கள் அல்லது முயற்சிக்க வேண்டும்.
நமது அந்த முயற்சி பலித்திட சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் தகுதிகள் நமக்கு வருவதற்கு...,
ஸ்ரீராமகிருஷ்ணரைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கை அமைய வேண்டும். அன்றாட காரியங்களில் ஆண்டவனின் கருணையைக் காண ஆரம்பித்தால் அல்லாடும் வாழ்க்கை ஒருவருக்கு இருக்காது. அப்போது அவர் தெய்வ பாதுகாப்பினை உணர்வார்.
‘மனிதப் பிறவியின் லட்சியம் இறையனுபூதி பெறுவதுதான்’ என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் வலியுறுத்துகிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் எவ்வாறு வாழ்ந்தார்? என்ன செய்தார்? என்று சிந்திப்போம்.
* நான் பிறந்தது எதற்காக?
* வாழ்க்கையில் எதற்கு இவ்வளவு கஷ்டங்கள்?
* கஷ்டங்கள் இல்லாத ஆனந்தப் பெருவாழ்வு எனக்கு எவ்வாறு கிட்டும்?
இவை போன்ற கேள்விகள் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இளமைக் காலத்திலேயே வந்துவிட்டன. அவற்றுக்கான தீர்வுகளையும் அவர் விரைவில் கண்டு கொண்டார்.
* தமது கடும் தவத்தினால் உலக அன்னை ஆதிபராசக்தியை உணர்ந்து அவரது அருள் வட்டத்திற்குள்ளேயே எப்போதும் இருந்தார்.
* மனிதர்கள் பொதுவாக யாரோ ஒருவரையோ, பலரையோ சந்தோஷப்படுத்த வாழ்கிறார்கள். ஆனால் லோகமாதாவின் திருப்திக்காகவே ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்தார்.
வேருக்கு நீர் ஊற்றினால் விருட்சத்தின் எல்லாப் பகுதிக்கும் அந்தச் சத்து சேரும். இறை
வனின் திருப்தி எல்லோருக்கும் திருப்தி தரும்.
* தான் பெற்ற பேரின்பத்தைத் தனக்கு வேண்டியவர்கள் மட்டுமல்ல, அனைவரும் பெறப் பெரிதும் விரும்பினார். தானும் அதன்படியே வாழ்ந்தார்; பிறரையும் அவ்வாறே வாழ வைத்தார்.
மேற்கண்ட மூன்று அம்சங்களையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையின் சாரமாகக் கொள்ளலாம். அடுத்து மூன்று கேள்விகள் வருகின்றன:
நாமும் இவ்வாறு சிறப்பாக தெய்வப் பாதுகாப்புடன் வாழ ஆவல் கொள்கிறோமா?
வெறும் ஆவல் மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்திட முயற்சி செய்கிறோமா?
அந்த முயற்சி என்றும் நிலைத்திட நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அந்த உயரிய ஆன்மிக வாழ்க்கையை உணர்த்த முயற்சிக்கிறோமா?
அவ்வாறென்றால் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களாகிய நாம் மூன்று விரதங்களைக் கடைப்பிடிப்பவர்
களாக மாறுவோம்.
விரதம் 1: ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அருள் தொடர்பு எல்லைக்குள் என்றும் நான் இருப்பேன்.’
ஸ்ரீராமகிருஷ்ணரை மறவாமல் இருப்பது, கடவுளுடன் பிரார்த்தனையில் இருப்பது, இறைநம்பிக்கையில் இருப்பது, எனக்கு எது நடந்தாலும் இறைவன் எனக்காகச் செய்கிறார் என்று ஆழ்ந்த உணர்வில் திளைப்பது- இவையெல்லாம் நாம் அவருடைய அருட்தொடர்பு எல்லைக்குள் இருப்பதாகும்.
அன்பர்களே, இந்தக் கருத்துகளை ஒரு கதை மூலம் புரிந்துகொள்ளலாம். அது ஸ்ரீராமகிருஷ்ண
ரின் ‘எல்லாம் ராமர் இச்சை’ கதை. அதை நினைவுகூர்ந்து பாருங்கள். உடனே அவை உங்களுக்கு விளங்கும்.
அடுத்த விரதம் முக்கியமானது.
நம் உலக வாழ்க்கை குருக்ஷேத்திரம் போன்றது. அர்ஜுனன் போன்று மனிதன் செயல்படுகிறான். ஆண்டவனாக ஸ்ரீகிருஷ்ணர் வழிகாட்டுகிறார். கௌரவப் படையின் எல்லா எதிரிகளையும் கிருஷ்ணர் தானே ஒழித்து விடுவதாகக் கூறினார். அதைச் செய்வதற்கு அர்ஜுனனை ‘நிமித்த மாத்திரம் பவ - எனது கருவியாக இரு. எல்லோரையும் நானே வதைக்கிறேன்’ என்றார்.
ஆனால் அர்ஜுனன் தன்முனைப்போடு அடிக்கடி அவனே அவசர முடிவெடுத்துப் பலவித அல்லல்களில் மாட்டிக்கொள்வான். கிருஷ்ணரின் சம்மதம் இல்லாதவற்றில் அர்ஜுனனே சுயமாகச் செயல்பட்டுச் சிரமத்தில் சிக்கிக் கொள்வான்.
இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே மனிதனுக்கு வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது என்பது மிக உயர்ந்த ஓர் ஆன்மிக உண்மை.
சாதாரண மக்களாகிய நாமும் அர்ஜுனனின் அவசரத்தனத்தைப்போல் பல வேளைகளில் செய்துவிட்டுத் திணறுகிறோம். அதுபோன்ற தருணங்களை எண்ணி நாணவும் செய்வதுண்டு.
இந்த மனப்போக்கை, இந்த தன்முனைப்பை மாற்றிக்கொள்ள நாம் இரண்டாவது விரதத்தை மேற்கொள்வோம்.
விரதம் 2: ‘என் செயல்களிலும் சிந்தனைகளிலும் என் திருப்தி அல்ல, ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்தியைத்தான் பார்க்கக் கற்பேன். எதிலும் என்னை, என் விருப்பத்தை, என் கஷ்டத்தை, என் சுகத்தை, தன்முனைப்பை நான் முன்னிறுத்தாமல் இறைவனை முன்னிறுத்துவேன்.’
சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று சர்வ சமயப் பேரவையில் கலந்துகொள்ள வாய்ப்பு பெற்றார். ஆனால் இறைவனது விருப்பப்படிதான் தான் அங்கு செல்ல வேண்டும்; தன் விருப்பப்படி செல்லக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். மீண்டும் மீண்டும் பிரார்த்தனை புரிந்தார்; சிந்தித்தார்.
மேலை நாடுகளுக்குச் சென்று சனாதன தர்மத்தைப் பரப்பும் பணி தனக்கு இறைவனால் வழங்கப்பட்டது என்பதைத் தெளிவாக அனுபவத்தில் உணர்ந்த பிறகே புறப்பட்டார்.
வனின் திருப்தி எல்லோருக்கும் திருப்தி தரும்.
அதுபோல் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் தங்களது செயல்களை நிறைவேற்ற தங்களது சொந்த விருப்பம் அல்லாமல் தெய்வத்தின் விருப்பத்திற்காக, வழிகாட்டுதலுக்காகக் காத்திருப்பார்கள்.
அன்றாடம் ஜபம் செய்வதுகூட தன்னுடைய திருப்திக்காக இல்லாமல், தான் ஜபம் செய்தால் இறைவன் திருப்தி அடைகிறாரா என்றுதான் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் சிந்திப்பார்கள்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை ஒருவர் தியானித்து வாழ்க்கையில் மேம்படும்போது என்ன ஆகிறார்? இந்தக் கேள்விக்கு சுவாமி விவேகானந்தர் நேர்த்தியான பதில் தருகிறார்:
‘ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்குபவர்கள் அதே கணம் தங்கமாக மாறிவிடுவார்கள். இந்தச் செய்தியுடன் வீடுவீடாகச் செல்லுங்கள், அமைதியின்மை எல்லாம் போய்விடும். பயத்தை விட்டுவிடுங்கள்.’
தங்கம் போன்று நல்ல மதிப்பு உடையவர்களாக ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் மாறுவதற்கு மூன்றாவது விரதத்தை மேற்கொள்வோம்.
கௌரி மா என்பவர் ஓர் அருமையான தபஸ்வினி. சிறு வயது முதலே தெய்வத்தை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ்ந்தவர். சுமார் 12 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று தவ வாழ்க்கை வாழ்ந்தார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றிக் கேள்விப்பட்டார். அவரே கௌரி மாவைத் தனது அருள் வட்டத்துக்குள் ஈர்த்துக் கொண்டார். கடினமாக தவம் செய்து கொண்டிருந்த கௌரி மாவின் ஆன்மிக வாழ்க்கையை எளிதாக்கிக் கொடுத்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஆன்மிக அனுபவங்களில் திளைத்த கௌரி மாவிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், ‘நீ பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் உனது வாழ்க்கை பூரணமடையும்’ என்று அருள் கட்டளையிட்டார்.
பிற்காலத்தில் கௌரி மா தான் பெற்ற ஆன்மிகப் பேற்றினைப் பெண்களின் முன்னேற்
றத்திற்காகவும் சமுதாயத்தின் நலத்திற்காகவும் அர்ப்பணித்தார். அதன் மூலம் தங்கக்கட்டியாக இருந்த அவரது ஆன்மிகம் தங்க ஆபரணங்களாக மாறி மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டது.
அந்த அற்புதமான வரலாற்றின் அடிப்படையில் நாமும் பரிணமிக்க மூன்றாவது விரதத்தை மேற்கொள்வோம்.
களாக மாறுவோம்.
விரதம் 3: ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தனாக மட்டும் நிற்காமல், அவரது பிரதிநிதியாகச் சமுதாயத்தில் நான் நடந்து கொள்வேன்.’
மேற்கூறிய மூன்று புரிதல்களையும் மூன்று கேள்விகளையும் மூன்று விரதங்களையும் கடைப்பிடிப்பவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் தொடர்பு எல்லைக்குள் நிலைத்து நிற்பார்கள். அதுவே அவர்களின் பிறவியை உன்னதமாக்கிவிடும்.
முத்தாய்ப்பாக, சுவாமி விவேகானந்தர் கூறிய ஆசீர்வாதத்தை நினைவில் கொள்வோம்:
‘‘.....கடவுளைப் பற்றி வெறுமனே கொள்கைகளை அளந்து கொண்டிருப்பதில் பயனில்லை. அவரிடம் பக்தி கொண்டு ஆன்மிகச் சாதனைகள் செய்ய வேண்டும்...... அன்றாடத் தேவைகளுக்கு உரிய எண்ணங்களை இறைவனின் மூலமாகவே எண்ணலாம். அவனை நினைத்து உண், அவனை நினைத்துப் பருகு, அவனை நினைத்து உறங்கு, அவனையே அனைத்திலும் காண். பிறரிடம் அவனைப் பற்றிப் பேசு. இது மிகவும் நன்மை பயக்கும்.’’
- சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகள், பக்கம் 54.
சுவாமி விமூர்த்தானந்தர்
24.02.2024