மண் சாப்பிட்டானா என்று வாயில் பார்த்த யசோதைக்கு மண்ணகம் மட்டுமல்ல, விண்ணகமே என்னுள்தான் என்று காட்டினான் கிருஷ்ணன். சிறிய வாய்க்குள் பிரம்மாண்டம்.
யசோதை மலைத்து நின்றாள். தாய் மலைத்து விட்டால் தனயனிடம் அவளால் அன்பு செய்ய முடியாது அல்லவா! அதனால் கண்ணன் ஒரு விஷமம் செய்தான். திசை திருப்பி விடுவது தெய்வம் செய்யும் விஷமம்.
உடனே யசோதை பார்த்த பிரம்மாண்ட காட்சியை அவள் மறக்கும்படிச் செய்தான் கண்ணன். தாய்க்கு மயக்கம் வரச் செய்தான்.
பரவசத்தைக் காட்டிக் காட்டிப் பக்தர்களிடம் இன்னும் சில காலம் இந்த உலகத்திலேயே இரு என்று கூறுவது கண்ணன் செய்யும் தொடர் விஷமமாயிற்றே!
அந்த விஷமக்கார கண்ணன் அந்த அவதாரத்தோடு அதை நிறுத்தினானா, இல்லையே! அடுத்து தோன்றிய ஸ்ரீராமகிருஷ்ண அவதாரத்திலும் அவ்வப்போது அந்த விஷமத்தைப் பார்க்க முடிகிறது.
விஜயகிருஷ்ண கோசுவாமி ஒரு தேர்ந்த வைணவர். கிருஷ்ண பக்தியில் தோய்ந்தவர். ஜப சித்தர். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்தில் அபார பக்தி கொண்டவர்.
இஷ்டதெய்வம் அவருக்கு கிருஷ்ணர். என்றாலும் எதிரில் தெரிந்த ஸ்ரீராமகிருஷ்ணரைத் தெய்வமாகவே உணர்ந்திருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணருடன் உரையாடும்போது இயல்பாகவே அவருக்கு கண்ணன் மீது தனி ஈர்ப்பு ஏற்படுவதுண்டு.
அப்படிப்பட்டவர் தற்போது பங்களாதேஷ் எனப்படும் டாக்காவில் சில காலம் தங்கி இருந்தார். இடம் மாறினாலும் அவரது மனம் தெய்வத்திடமே திடம். நெக்குறுகி நெஞ்சின் மீது பிரேமை கண்ணீர் வழிய அவர் ஜபித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரருகே திடீரென்று ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார்.... அதுவும் ஸ்தூல ரூபத்தில்!
தக்ஷிணேஸ்வரத்து ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி இங்கு வந்தார் என்று ஆச்சரியப்பட்டார் விஜயர். மெல்ல நடுங்கிய கையுடன் அந்தத் திருமேனி உண்மைதானா என்று தொட்டுப் பார்த்தார். ஆம், ஸ்ரீ ராமகிருஷ்ணர்தான் இங்கு உயிருடன், உடலுடன் தோன்றியுள்ளார்.
விஜயருக்குக் கிடைத்த அந்த அற்புதக் காட்சி விரைவில் மறைந்தது.
விஜயர் கொல்கத்தா திரும்பினார். அது 1885, அக்டோபர் 25 - ஆம் தேதி. நேராக தக்ஷிணேஸ்வரம் சென்றார். ஸ்ரீராமகிருஷ்ணரை நேரில் தரிசித்தார். அப்போது அங்கே டாக்டர் சர்க்கார், நரேந்திரர் எனப்பட்ட சுவாமி விவேகானந்தர், மகேந்திரர் போன்ற பக்தர்கள் பலரும் இருந்தார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னை எவ்வாறு பாதுகாத்து வருகிறார் என்பதை விஜயர் பக்தர்களிடம் கூறினார்.
"யாரோ ஒருவர் எப்போதும் என் உடன் தங்கி இருக்கிறார். நான் தொலைவில் இருந்தாலும் எங்கே என்ன நடக்கிறது என்பதை அவர் எனக்குத் தெரிவித்து வருகிறார்" என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நரேந்திரர், "பாதுகாக்கும் ஒரு தேவதை போல அவர் உங்களைக் கவனித்துக் கொள்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.
விஜயர் உணர்ச்சிவசப்பட்டு குருதேவரைக் காட்டி, "டாக்காவில் நான் இவரை உண்மையாகவே தரிசித்தேன். இவரது உடம்பைக்கூட தொட்டுப் பார்த்தேன்" என்று கூறினார் பக்திக் கண்ணீருடன்.
அதுவரை விஜயரைக் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் மந்தஹாச சிரிப்புடன், "நீ அங்கு பார்த்தது வேறு யாராவது இருக்கலாம்" என்றார் விஷமத்துடன்.
குருதேவர் தான் விஜயருக்குக் கொடுத்த அமானுஷ்யமான காட்சியைப் பற்றிக் கூற விரும்பவில்லை போலும்!
யசோதைக்கு பிரம்மாண்ட தரிசனம் மறைக்கப்பட்டது போல் விஜயருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தரிசனம் கிடைத்தது மறக்கடிக்கப்பட்டது. அவர் அதைப் பற்றிப் பேசுவதும் திசை மாற்றி விடப்பட்டது.
தான் கூறியதை குருதேவர் நம்பவில்லையோ என்று விஜயர் எண்ணினார். ஆனால் நரேந்திரர் சீக்கிரத்தில் எதையும் விட்டு விடுபவர் அல்லவே! அவர் தமக்குக் கிடைத்த ஸ்ரீராமகிருஷ்ண தரிசனத்தை அப்போது வெளிப்படுத்தினார்.
"ஆம், இவரை (குருதேவரை) நானும் பலமுறை (தெய்வீக தரிசனமாக, சூட்சும காட்சியாகக்) கண்டிருக்கிறேன். ஆகவே விஜயர் அவர்களே, உங்கள் வார்த்தைகளை நான் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?" என்று கேட்டார்.
நரேந்திரர் தமக்குக் கிடைத்த ஆன்மீக உயர் காட்சிகளைப் பற்றி அங்கு பதிவிட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ள நரேந்திரரின் இந்தக் கேள்விக்குப் பிறகு சட்டென முடிந்து விடுகிறது.
எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்பவர், குருதேவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான்கைந்து பொருள்களைக் காண்பவர் மகேந்திரநாத் குப்தர். ஆச்சரியம், அவரும் குருதேவரின் தரிசனம் பற்றிய எந்த விவரத்தையும் எழுதாமல் அங்கு அந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மகேந்திரரின் கவனத்தைத் திசை திருப்பி அவரிடமும் விஷமம் செய்தாரோ!
ஆஹா! மகிமையை மறைத்துக் கொள்வதில் இந்த மாமனிதர்களுக்குத்தான் என்ன ஒரு திறமை!
சுவாமி விமூர்த்தானந்தர்
15.06.2023
வியாழக்கிழமை,