ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெருக்கிக் கொள்வது எவ்வாறு?_copy

08.03.25 04:42 PM - By thanjavur

இன்று உலக மகளிர் தினம் மார்ச் எட்டாம் தேதி. இது வெறும் மகளிர் தினமாக, பெண்களை ஒரு சடங்காகப் போற்றும் தினமாகச் சுருங்கி விட்டது. ஆனால் உண்மையிலேயே உலக வரலாற்றில் இந்தத் தினம் சர்வதேச உழைக்கும் பெண்களின் தினமாகக் கொண்டாடும் வகையில் 1917-8

 

உழைக்கும் பெண்களுக்கும் பிற பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால் இந்தத் தினம் ஒவ்வொரு பெண்ணுக்கும் உயர்ந்த செய்தியை வழங்கும்.

 

நம்முடைய பாரம்பரியத்தில் பெண்களுக்கான பெருமை மிகவும் சிலாகித்துப் பேசப்படுகிறது. அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு? என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்த அபத்தங்கள்.

 

ஆனால் சனாதன தர்மத்தின் மேலான நிலையில் பெண்களை மதித்த விதம் அபாரமானது. ரிஷிகள் இருந்தது போல் ரிஷிகாக்கள் (பெண் ரிஷிகள்) பற்றி வேதகாலமும் ராமாயணமும் போற்றிப் பேசுகிறது. அதன் சாரமான கருத்தாக, எங்கு, எந்த வீட்டில் பெண்கள் பூஜிக்கப்படுகிறார்களோ, அங்கு தேவர்கள் மகிழ்கிறார்கள். எங்கு பெண்கள் மதிக்கப்படவில்லையோ, அங்கு அனைத்து செயல்களும் முயற்சிகளும் பலன் அளிக்காது.

 

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः ।

यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः ।। ३.५६

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:I

யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா: II 3.56

 

இது இந்து சமயம் பெண்களை மதிக்கும் விதம். இன்றைய சர்வதேச உழைக்கும் பெண்களின் தினத்தில் மனித சமுதாயம் தனது தெய்வீகத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதிபராசக்தியான அன்னை பல்வேறு காலங்களில் சிறுமிகளாக வந்து எப்படி எல்லாம் உழைத்தார் என்பதை இந்த நன்னாளில் பார்க்கலாமா?

  ------------------------------

ஸ்ரீசாரதை அன்னைக்குப் பக்தர்கள் குங்கும அர்ச்சனை செய்யும்போது இரண்டு போற்றிகள் அவர்களைச் சிறிது சிந்திக்க வைக்கும்.

 

ஓம் இரண்டு வயதினில் கணவனைக் காட்டினாய் போற்றி!

ஓம் ஐந்து வயதினில் திருமணம் கண்டனை போற்றி!

 

உலகிற்கு உன்னதங்களைப் போதிக்க வந்த ஸ்ரீராமகிருஷ்ணர், குழந்தை திருமணத்தை ஆதரிக்கலாமா? அதுவும் திருமணம் அவருக்குத் தேவையில்லாத ஒரு நிலையில்! சாரதைக்கு எதுவும் தெரியாத நிலையில் திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாது என்றெல்லாம் பேசுவதும் உண்டு.

திருமணம் கண்டனை என்பதை சாரதாதேவிக்குப் பால்ய விவாகம் நடந்ததாகத் 'திருமணம் தண்டனை' என்று சிலர் நினைத்து விடுகிறார்கள். அது குழந்தை திருமணமும் அல்ல; குழந்தைத்தனமான திருமணமும் அல்ல. அறியாதவர்களுக்குத்தான் திருமணம் ஒரு தண்டனையாகி விடுவதுண்டு.

 

ஆனால் உற்று நோக்கும்போது சிறுமி சாரதையின் ஆன்மீக ஆழம், அதன் விஸ்தாரம் இரண்டும் விளங்கும். இறைப்பித்தில் இருந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். பைத்தியம் என்று பெயர் எடுத்திருந்த அவருக்குப் பெண் தர யார் முன் வருவார்கள்?

 

அப்போது ஸ்ரீராமகிருஷ்ணரே ஜெயராம்பாடியில் எனக்காகவே ஒரு பெண் தயாராக உள்ளார் என்பதைக் கூறினார். இது தெய்வாதீனமாக நிகழ்ந்தது.

 

இதே தெய்வீக ஆணையுடன் இன்னொன்றும் நடந்தது. சிறுமி சாரதையை வங்காளத்தில் சிஹோர் என்ற ஊரில் ஒரு திருவிழாவிற்குக் கொண்டு சென்றிருந்தனர். சாரதையை இடுப்பில் வைத்திருந்த ஒரு பாட்டி 'சாருகுட்டி சொல்லு, நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?' என்று வேடிக்கையாகக் கேட்டார். அறியாச் சிறுமி என்று பலர் நினைத்திருக்க சாரதையோ, கதாதரர் என்ற ஸ்ரீராமகிருஷ்ணரைக் கைகாட்டினார்.

 

ஏதோ சிறுமி செய்த ஒரு சிறு செயல் அல்ல இது. சாரதை சிறுவயதிலிருந்தே உன்னதமான எண்ணங்களுக்கும் விசாலமான மனதிற்கும் ஆழமான உணர்வுகளுக்கும் சொந்தக்காரர். இதை அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் ஆரம்பத்திலும் நடுவிலும் அந்திமத்திலும் பறைசாற்றுகின்றன.

 

ஊரில் பஞ்சம் வந்தபோது பலர் பிச்சை ஏற்றனர். சிலர் தங்களிடம் இருந்த உணவைப் பதுக்கி வைத்துக் கொண்டனர். ஆனால் சாரதையின் குடும்பமோ எல்லோருக்கும் சுடச்சுட அன்னம் பாலித்தது. அந்த உணவினை அவசர அவசரமாக உண்டு சூடு கண்டவர்களுக்கு, சிறுமி சாரதை அன்னபூரணியாக இருந்து விசிறியால் அவர்களையும் அந்த அன்னத்தையும் ஆற்றுப்படுத்தினார்.

 

சிறுமி சாரதை தொழிலில் தந்தைக்கு உதவினார். சமையலில் தாய்க்கு உதவினார். தம்பி தங்கைகளைத் தாயாக வளர்த்தார். பலப் பல வேலைகளையும் சிறுமி சாரதை செய்தபோது அவளை ஒத்த அதே வயது இன்னொரு சிறுமி அவரோடு இருந்து பணிபுரிவார். தெய்வீக தேவிக்குச் சேடிப் பெண் கிடைத்தது போல், சிறுமி சாரதையோடு அவள் உடனிருந்து உழைத்தாள், ஒத்துழைத்தாள்.

 

கொஞ்சம் வளர்ந்த பிறகு ஸ்ரீசாரதை அதிகாலை குளத்தில் நீராடச் செல்வார். அவருக்கு முன்னே நான்கு தெய்வீகப் பெண்களும் பின்னே நான்கு தெய்வீகப் பெண்களும் செல்வார்கள். சாரதைக்கு மட்டும் தெரிந்த அவர்கள் மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாத தெய்வப் பிறவிகள்.

 

இவ்வாறு சிறுமி சாரதை, தேவி சாரதையே என்று அமைதியாக உணர்த்திய சம்பவங்கள் பல. இப்படிப்பட்ட சிறுமி தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக,  தனக்கு தெய்வீக வாழ்க்கையை உணர்த்தும் குருவை இரண்டு வயதிலேயே கண்டு உரைத்தார் என்றால் அதில் ஆச்சரியமில்லையே?

 

ஹிந்து பாரம்பரியத்தில் கணவனைக் குருவாகவே கொண்டு வாழ்ந்தவர்கள் பலர். இரண்டு வயதிலேயே சாரதைக்கு குரு தேவைப்பட்டது, அந்தக் குரு எப்படிப்பட்டவர், அவர் யார் என்பதை உணர்ந்த பக்குவமும் சாரதைக்கு இருந்ததைத்தான் அந்தச் சம்பவம் செப்புகிறது.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் தனது குருமார்களைத் தேடி அவர் எங்கும் சென்றதில்லை. சீடரைத் தேடி அவரது குருமார்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அன்னை பராசக்தி அனுப்பி வந்த குருமார்கள் அவர்கள் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 20 - 22 இருக்கும். அவரது அருளைப் பெற்ற ஸ்ரீசாரதையோ இரண்டு வயதிலேயே தன் குருவான ஸ்ரீராமகிருஷ்ணரைக் கண்டு கொண்டார்.

 

அடுத்து, ஐந்து வயதில் திருமணம் கண்டனை போற்றி என்பதிலும் ஆழ்ந்த ஆன்மீகப் புரிதல் உள்ளது. 

பார்வதி தேவி பர்வதராஜகுமாரியாக அவதரித்தார். சிவத்திடமிருந்து வந்த தேவி சிவனிடமே மீண்டும் சேர்வதற்காகத் தவமியற்றினார். அந்தத் தேவி தவத்தைத் தொடங்கியது ஐந்து வயது பிராயத்தில்தான். அதனால்தான் லலிதா சகஸ்ரநாமம் 'ஓம் பாலாயை நம: - சீர் மல்கும், சீர் நல்கும் சிறுமியே என்று போற்றுகிறது.

 

ஸ்ரீராமரை சீதாதேவி மணந்தபோது அவரது வயது ஆறு என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

 

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் பண்டாசுரன் என்ற அரக்கனை வதைத்தார். அப்போது அம்மனுக்கு வயது 9 மட்டுமே.

 

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்று வேதங்களால் போற்றப்படுபவர் அன்னை மீனாட்சி. அந்தத் தேவியைத் தனது பக்தியால்

‘புவனம் கடந்து நின்ற ஒருவன் திருஉள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே' என்று பாடி பரம்பொருள் நாயகியை பாலிகாவாக ஆக்கியது குமரகுருபரரின் தமிழும் பக்தியும்.

 

அந்தப் பக்த கவி இயற்றிய பாடலை மெச்சி தமது முத்து மாலையை மீனாட்சி தேவி சிறுமியாகவே வந்து அவருக்கு அருள் புரிந்தார்.

 

சுப்ரமண்யனான முருகப்பெருமானை, சு + ப்ரமண்யம் அதாவது பிரம்மமே புருஷராக வந்துள்ளதை வள்ளி அடையாளம் கண்டு கொண்டாள். முருகப்பெருமானை அடைவதற்காக வள்ளிநாயகி தவத்தை மேற்கொண்டது ஐந்து வயதில்தான்.

 

"அஞ்சு வயசிலே அறியாப் பருவத்திலே பிஞ்சிலே கூடினேண்டீ - கிளியே பிரிய மனம் இல்லையே!" என்ற ஒரு நாட்டுப்பாடல் நளினமாக அந்தத் தெய்வீகச் சிறுமிகளின் தவத்தைச் சிலாகித்துப் பேசும்.

 

ஸ்ரீகிருஷ்ணரது சக்தியான ராதை பிறந்து பல வருடங்கள் அவள் கண்ணே திறக்கவில்லை. அவள் எல்லா காரியங்களைச் செய்தாலும் ஏனோ கண் திறக்க அவள் விரும்பவில்லை. காரணம் என்ன?

 

பெருமாளை தரிசனம் செய்துவிட்டு 'என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றைக் காணாவே' என்று திருப்பாணாழ்வார் பாடினார்.

 

ராதையோ ‘அமுதம் போன்ற என் கண்ணனைக் காணும் வரை மற்றொன்றையும் காணேன்' என்று தவம் இயற்றினாள். கண்ணன் அவளைக் காண வந்தபோதுதான் கண் திறந்தாள். முதலில் கண் காண வேண்டியது கடவுளைத்தான் என்பதைக் காட்டித் தந்தாள் சிறுமி ராதை.

 

சிறுமியாகவே கண்ணனை மனதால் கண்ணாலம் கட்டிக்கொண்ட ஆண்டாள் காத்திருப்பு தவத்தைக் கைக்கொண்டாள். தன் தவத்திற்குத் தடையாக வந்த எதையும் அவள் தைரியமாகத் தவிர்த்தாள்.

 

ஆசையைத் தூண்டிவிடும் காமனிடம் தெளிவாக, “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே” என்றல்லவா தன் தவ மகிமையைக் காட்டினாள் சிறுமி ஆண்டாள். 

 

சேரிடம் அறிந்து சேர் என்பதில் இந்தத் தெய்வீகச் சிறுமிகளுக்குத் தான் என்ன ஒரு தெளிவு, என்னவோர் திடம்! அதனால்தானே 'பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போல....' என்று திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தில் ஒரு பெண் அங்கலாய்த்துக் கொண்டாள்.

 

இவ்வாறு தேவிகளாக வலம் வந்து, சிறுமிகளாகத் தவம் புரிந்து, உலகிற்கு நலம் புரிந்து தெய்வத்தை அடைந்தவர்கள் வரிசையில் சாரதையும் விளங்குகிறார் என்பது நம்மைச் சிலிர்க்க வைக்கிறது அல்லவா!

 

அப்படிப்பட்ட ஸ்ரீசாரதா தேவி சித்தசுத்தியை உங்களுக்கு நல்கட்டும் -  वितरतु परिशुद्धिं चेतसः शारदा वः என்று பிரபஞ்ச சாரம் நூலில் சங்கர பகவத்பாதர் ஆசீர்வதிப்பது போல் நமக்கும் அந்த நிலை அந்த அன்னை தந்தருளட்டும்.


சுவாமி விமூர்த்தானந்தர்

08.03.2025

இதனைக் கேட்க

thanjavur