RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 14

16.03.23 06:40 PM By thanjavur

இறைவனோடு எப்போதும் ஏதாவது ஓர் உறவு முறையில் - இறைவனுக்கு தாசனாகவோ, தோழனாகவோ, தாய் தந்தையாகவோ, குழந்தையாகவோ- கருதி பக்தி செய்ய வேண்டும் என்பது குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்குக் கூறும் ஓர் உபதேசம். இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தக்ஞானம் தெரிந்தால் பக்தனுக்கு தான் ஓர் அனாதை இல்லை, நாதன் உடையவன் என்பது புரியும். அது எவ்வளவு பெரிய பலத்தைத் தரும் தெரியுமா?

                                

1883, அக்டோபர் 10-ஆம் தேதி பலராம் போஸுவின் தந்தையிடம் குருதேவர் கூறினார்:

                                

"இனிமேல் நீங்கள் எதையும் படிக்காதீர்கள். ஆனால் சைதன்ய சரிதாமிர்தம் முதலான பக்தி நூல்களைப் படியுங்கள். விஷயம் என்னவென்றால் இறைவனை நாம் நேசிக்க வேண்டும். அவருடைய இனிமையை அனுபவிக்க வேண்டும். இறைவன் இனிப்பு பானம் போன்றவன். பக்தனோ அதைச் சுவைப்பவன். அந்தப் பானத்தை அவன் பருகி மகிழ்கிறான். அடுத்து இறைவன் தாமரை போன்றவன். இறைவன் தாமரை என்றால் பக்தன் வண்டு ஆகிறான். பக்தன் அந்தத் தாமரை மலரில் உள்ள தேனைக் குடிக்கிறான். எப்படி?

                                

“இறைவன் இல்லாமல் பக்தனால் வாழ முடியாது. அதுபோலவே பக்தன் இல்லாமல் இறைவனாலும் இருக்க முடியாது. அப்போது பக்தன் இனிப்பு பானம் ஆகி விடுகிறார். பகவான் அதைச் சுவைப்பவனாக ஆகிவிடுகிறார். பக்தன் தாமரை ஆகிறான். பகவான் வண்டாகிறார். தாமே தமது இனிமையைச் சுவைக்க இரண்டாக ஆனார் பகவான். அதுதான் ராதா கிருஷ்ண லீலை.”

                                

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்திக்கு வழங்கிய மிக உயர்ந்த அங்கீகாரம் இது.

இறைவன் இல்லாமல் பக்தன் இருக்க முடியாது என்பது பலருக்கும் அனுபவமான உண்மை. ஆனால் பக்தன் இல்லாவிட்டால் பகவானும் இருக்க முடியாது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார். தக்ஷிணேஸ்வரம் கோவில் மதில் மீது ஏறி சீடர்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் கூவிக் கூவி அழைத்தவர் அல்லவா அவர்!

                

காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தால்தான் பூமி விளையும். தாகம் உடையவனுக்கு நீர் வழங்கினால்தான் அவன் தாகசாந்தி பெறுவான்! அதுபோல, பக்தன் இருந்தால்தானே பகவானின் அருள் வெளிப்பட முடியும்!

                

இந்த உண்மையை ஆழமாகப் பதிவிடுகிறார் திருமழிசை ஆழ்வார்:

‘......நான் உன்னையன்றி இலேன்‌ கண்டாய், நாரணனே,

நீ என்னையன்றியிலை’ என்று அருளினார் ஆழ்வார்.

                

இறைவனின் திருவிளையாடல்களை பக்தன் எண்ணி எண்ணி எப்படி அனுபவிக்கிறானோ, அது போல் பக்தனின் வைராக்கியத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும், மனம் மாறாத நிஷ்டையையும் பகவான் பார்த்துப் பார்த்து ஆனந்திக்கிறார்; அனுபவிக்கிறார். அந்த அனுபவத்திற்காகத்தான் பக்தனை வாட்டியும் எடுக்கிறார். உருக்கினால்தானே தங்கக்கட்டி ஆபரணம் ஆகும்!

                

பக்த துகாராம் பொருள் வசதி இல்லாமல் இருந்தார். அதை அறிந்த சிவாஜி மகாராஜா நிறைய பொன்னும் பொருளும் துகாராமின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். துகாராமின் மனைவி குதூகலமுற்றாள். ஆனால் வீடு திரும்பிய துகாராம் பொன்னையும் பொருளையும் கொடுத்து, பகவான் தன்னை நம்மிடமிருந்து பிரித்துக் கொள்வார். அதனால் விட்டல் பிரபுவை மட்டும் நாம் பற்றுவோம்; வேறு எதையும் பின்பற்ற வேண்டாம் என்று நிச்சயமாகக் கூறிவிட்டார்.‌

                

உடனே அரச பொருள் அரண்மனைக்கு மீண்டது. பரம்பொருள் தியானத்தில் துகாராம் மீண்டார்.

                

ஆண்டவனைப் பக்தன் அனுபவிப்பது ஆன்மீகத்தில் ஆரம்ப நிலை; ஆண்டவனையே, தன் பக்தியை அனுபவிக்க வைப்பது ஆன்மீகத்தில் உயர் நிலை. அந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்ல வந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

சுவாமி விமூர்த்தானந்தர்

16 மார்ச், 2023

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

அமிர்தத் துளியைக்  கேட்க

thanjavur