இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இந்தக் கேள்வி நம்மில் கோடியில் ஒருவருக்குக்கூட வருமா என்பது சந்தேகமே. அதுதானே, மனிதன் தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையே பெரிதாக கவனிக்காதபோது, கடவுள் செய்வதையா கவனிப்பான்!
லாட்டு என்ற பீகார் மாநிலத்தின் கிராமத்துச் சிறுவனை சுவாமி அத்புதானந்தர் என்ற மகானாக மாற்றியது ஸ்ரீராமகிருஷ்ணர் நிகழ்த்திய ஓர் அற்புதம்தான். லாட்டு மிகவும் ஏழை. ஏட்டறிவு சிறிதும் இல்லாதவர். அப்படிப்பட்டவரை ஸ்ரீராமகிருஷ்ணர் தமது பரம கருணையால் சீடராக ஏற்றுக்கொண்டார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரே ஏட்டறிவு எதற்கு என்று கேட்டு அதை வேண்டாம் என்றவர். அவரே லாட்டு மகராஜுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் என்றால் எப்படி இருக்கும்!
சீடரின் அப்பழுக்கற்ற தூய மனதைக் கண்டு ஸ்ரீராமகிருஷ்ணர் அவரை ஆட்கொள்ள திருவுளம் கொண்டார். அதனால் ஒரு நாள் அவர் தமது பாதங்களை மசாஜ் செய்யுமாறு லாட்டுவை அனுமதித்தார்.
அப்போது சீடரைக் கனிவுடன் கவனித்த பகவான் திடீரென்று, "லாட்டு, நீ வணங்கும் ஸ்ரீராமச்சந்திர பிரபு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், தெரியுமா?" என்று வினவினார். லாட்டு பதில் தெரியாமல் தவித்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர், "பகவான் இப்போது ஒரு சிறு ஊசித் துவாரத்தில் யானை ஒன்றை நுழைத்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.
குருதேவர் சொன்னது லாட்டுவிற்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் குருதேவர் தமக்கு அருளிய விந்தையை அவர் உணர்ந்தபோது கண்கலங்காமல் அவரால் அதைக் கூற முடிந்ததில்லை.
இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு லாட்டு மகராஜ் கூறினார்: "குருதேவர் என்னைச் சம்சாரப் பந்தத்திலிருந்து ஒரேடியாக மேலே தூக்கிவிட்டார். நான் ஓர் அனாதை, ஒரு தகுதியும் இல்லாதவன். குருதேவர் மட்டும் என்னை ஆட்கொண்டிராவிட்டால் சமுதாயத்தில் நான் ஒரு மிருகமாகவோ அல்லது எங்கோ யாருக்கோ அடிமையாகவோ ஆயுள் முழுவதும் வேலை செய்து கொண்டே இருந்திருப்பேன்".
தகுதியால் சீடர் அப்போது இறைகருணைக்கு அந்நியமாக இருந்திருக்கலாம் அல்லது சில பிறவிகளுக்குப் பிறகு பகவத் கிருபை அவருக்கு வாய்த்திருக்கலாம். சீடர் முற்றிலுமாகத் தன்னிடம் சரணாகதி அடைந்து விட்டதால் நடக்க முடியாத ஒன்றை பகவான் நடத்திக் காட்டினார். சீடனின் கர்மத்தைப் பார்க்காமல் தமது கருணையைக் காட்டினார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
கர்மவினைகளுடன் கூடிய லாட்டு மகராஜ் என்ற யானையை, இறைவனின் கருணை என்ற ஊசித் துவாரத்தின் வழியே ஸ்ரீராமகிருஷ்ணர் செலுத்திக் கொண்டிருந்தாரோ!
பல பிறவிகளுக்குப் பிறகு நடக்கயிருந்த ஒன்றை, அன்று தான் நடத்திக் கொண்டிருப்பதாக குருதேவர் மறைமுகமாகச் சீடருக்கு உணர்த்தினார் போலிருக்கிறது.
சத்தியம்தானே! இறைவன் நம் மீது கருணை கொள்ளாமல் இருந்திருந்தால், நாம் சோகத்திலோ, மோகத்திலோ சிக்கித் தவித்திருப்போம் அல்லவா?
சுவாமி விமூர்த்தானந்தர்
06 ஜனவரி, 2023
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்