RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பகவானுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி - 1

14.06.23 11:58 AM By thanjavur

எங்கிருந்தோ வந்த ஒரு சினிமா பக்திப் பாடலைக் கேட்டார் அந்த அன்பர். அவர் பெரும் மகானான மதுரானந்த சுவாமிகளிடம், "சுவாமிஜி, இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார். 

                

சுவாமிகளோ தெய்வச் சிந்தனையில் மூழ்கி இருந்தார். சுவாமிகள் அந்தப் பாடலை ரசிக்கிறார் என்று நினைத்த அன்பர் அடுத்த பாடலையும் கேட்டு, "சுவாமிஜி, இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?" என்று கேட்டார். 

                

ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் பக்தியோடு போற்றிய சுவாமி மதுரானந்தர் அந்த அன்பரின் அறியாமையைக் கண்டு, "தம்பி, முதல் பாடல் முடிந்து அடுத்த பாடல் ஆரம்பிக்கும் முன் உள்ள அமைதியான இடைவெளி இருக்கிறதே... அந்த கேப்தான் மிக அருமை" என்றார்.

                

ஆழ்வார்களின் பக்திக்கும் திரைப்படப் பாடலாசிரியர்களின் எழுத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை, இடைவெளியை அந்த அன்பருக்கு சுவாமிகள் புரிய வைத்தார்.

                

சுவாமிகள் குறிப்பிட்ட இடைவெளி என்பது கவனிக்கத்தக்கது.  இறைவனுடனான நமது பக்தியில்கூட பல தேவையற்ற பள்ளங்களும் இடைவெளிகளும் வெற்றிடங்களும் உள்ளன.

                

நமது சனாதன தர்மமான இந்து மதத்தில் ஜப சாதனை என்பது மிக முக்கியமானது. ஒரு நாமம் ஜபிப்பதற்கும் அடுத்த நாமம் ஜபிப்பதற்கும் இடையே உள்ள நேர இடைவெளியில், வெற்றிடத்தில் ஏராளமான எண்ணங்கள் ஓடும். ஆசைகள் குதிக்கும். ஜபத்தைக்கூட எந்திரகதியில் ஜபிக்க வைக்கும்.

                

பார்த்தது, கேட்டது, படித்தது, அனுபவித்தது என்று எண்ணற்ற நல்ல சிந்தனைகள் வரும். தீய எண்ணங்களும் மனதை ஆக்கிரமிக்கும். 

                

இந்த வெற்றிடமான இடைவெளியை எதனால் நிரப்புவது? எப்படி நிரப்புவது என்பதில்தான் ஜபத்தின் சூட்சுமம் அடங்கியுள்ளது. அதைப் பொருத்தே ஆண்டவனுடனான நமது தொடர்பின் ஆழம் தெரிய வரும். பல நேரங்களில் ஜபிக்கும்போது உணர்வும் ஆர்வமும் இல்லாமல் தெய்வத்துடான தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்து விடுகிறோம்.

                

மந்திரத்தை ஜபிக்கும்போது கட்டுக்கடங்காமல் எண்ணங்கள் வந்தால், சலிப்பான எண்ணங்கள் மேலோங்கினால் மனதின் சக்தி விரயமாகும். எதிர்மறைச் சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும்பொழுது நாம இடைவெளி அதிகரிக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் ஜபத்தில் தொய்வு ஏற்படும்.

                

பகவான் கண்ணனுக்கு இடையன் என்ற ஒரு பெயர் உண்டு. இடைச்சாதி என்பார் பாரதியார். இடையன் என்றால் மாடு மேய்ப்பவன் என்று பொருள். இடையன் - இடைவெளியை நீக்குபவன் என்ற மற்றொரு பொருளும் உள்ளது. அந்த இடையனின் அருளைக் கொண்டே இடைவெளியை நிரப்புபவர்களுக்கு இடைஞ்சலே இல்லை.

                

ஒரு மந்திரத்திற்கும் அடுத்த மந்திரத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைப்

பக்தியுடன் - பிரேமையுடன் - நம்பிக்கையுடன் நிரப்பினால் நாம இடைவெளி குறையும். 

                

ஜபிக்கும் போதும் சுயநலமில்லாமல் ஜபிப்பது மிக அவசியம். எனது ஜபம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்பது முக்கியமல்ல. நான் ஜபிப்பது இறைவனுக்குப் பிடித்திருக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

                

இந்தக் கவனம் நம்முள் வந்தால் காட்சிகள் முற்றிலும் மாறும். 'ஜபாத் சித்தி'- அதாவது ஜபம் செய்வதன் மூலம் சித்தி பெறலாம் என்று அன்னை சாரதை சும்மாவா சொன்னார்? இறைநாமத்தை மனமுருகச் சொல்லும்போது இறைவன் நம் ஜபத்தினால் பிரசன்னமாகி சாந்நித்தியம் தருவார்; நம் முன்னே நிற்பார் என்பது உன்னத பக்தர்களின், துறவிகளின், சாதகர்களின் அனுபவம்.

                

ஜபித்தால் கடவுள் வந்து நிற்பாரா? ஆத்மார்த்தமாக ஜபிப்பவர்கள் தங்களது மனக் கண்களால் ஆண்டவனைப் பார்த்து ஆனந்திக்கிறார்கள். அந்த அளவிற்கு நமது ஜபத்தில் உயிர்மை இருக்க வேண்டும். இறைவன் பக்தர்களிடையே அமரும் அதிசயம் பல நடந்துள்ளன.

ஓர் உன்னதமான வரலாற்று உண்மையைக் கேளுங்கள்.

திருக்கோவிலூரில் உள்ள மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தின் ஒரு சிறு இடத்தில் பொய்கையாழ்வார் தங்கியிருந்தார். அப்பொழுது அங்கு வந்த பூதத்தாழ்வார் தனக்கும் அங்கு இடம் இருக்குமா என்று வினவினார். அதற்குப் பொய்கையாழ்வார் இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்றார். இருவரும் உரையாட ஆரம்பித்தார்கள். அப்பொழுது அங்கு வந்த பேயாழ்வாரும் தங்க இடம் கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர்.

                

மூவரும் நெருங்கி நின்று கொண்டு இறைவனின் பெருமையைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். அடியார்களின் ஆனந்தக்கூத்தில் கலந்து கொள்ள விரும்பி எம்பெருமானும் அந்தச் சிறிய இடத்தில் உட் புகுந்தார். ஆனந்தமாக அவ்வளவு அணுக்கமாக யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி அவர்களின் மனதில் எழுந்தது.

                

இரவு நேரம். விளக்கேற்ற பொருள்கள் இல்லை. அதனால் மூவரும் ஞான விளக்கை ஏற்றினர். நான்காவது நபரை உணர முற்பட்டு மூவரும் திவ்யபிரபந்தப் பாடல்களைப் பாட ஆரம்பித்தனர். முதலில்  பொய்கையாழ்வார் பாடினார்:

                

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே!

                

உலகத்தையே அகல்விளக்காகவும், கடல்நீரையே நெய்யாகவும் வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார்.

                

அடுத்து பூதத்தாழ்வார் அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தார்.

                

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்.

                

இவ்விருவர் ஏற்றிய விளக்கில் பேயாழ்வார் லட்சுமி நாராயணனைக் கண்டார்.

                

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன் என்ஆழி வண்ணன்பால் இன்று!

                

பரிந்துரைத்து நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய சேர்க்கையினால் பொன் நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்' என்றார் பேயாழ்வார்.

                

இறைநாமத்தையும் இறைவனின் புகழையும் அருமையாகப் பாடினால் ஆண்டவனே அங்கு எளிமையாக வருவதை வளமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. 

                

பக்தியின் மூலம் இரண்டு இறைநாமத்திற்கிடையே உள்ள இடைவெளியில் மட்டுமல்லாது, பக்தர்களுக்கு நடுவிலுள்ள இடைவெளியிலும் இறைவன் வந்து நிறைந்து நிற்கிறான்.

                

எனவே, ஜபத்தின்போது ஒரு நாமத்திற்கும் மற்றொரு நாமத்திற்குமான இடைவெளியை இஷ்டதெய்வத்தின் வடிவத்தால் நிரப்பலாம். கடவுள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை, அவர் நமக்குச் செய்த அருளை நினைத்து இடைவெளியை நிரப்பலாம். லட்சக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டவன் அருளிச் செய்து வருவதை எண்ணி எண்ணி நமக்கும் நம் இஷ்ட தெய்வத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்திடுவோம்.

                

குறையொன்றுமில்லா கோவிந்தனைக் கூவி கூவி அழைப்போம்.

சுவாமி விமூர்த்தானந்தர்

15.06.2023

வியாழக்கிழமை,

இதனைக் கேட்க

thanjavur