ஒருவருக்கு விடாமல் ஜபம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மனது அடங்க மாட்டேன் என்கிறது. தன்னால் முடியாததை வெளி உதவியுடன் செய்து கொள்வது என்று தீர்மானித்தார்.
அதற்காக ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக இருந்த தவத்திரு சுவாமி பூதேஷானந்த மகராஜிடம் சென்று ஆலோசனை கேட்டார்: "மகராஜ், நான் ஜபம் செய்யும்போது என் மனதில் புகும் ஆயிரக்கணக்கான எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் எனக்கு ஒரு ஐடியா உதித்தது."
"என்னப்பா அந்த ஐடியா?" என்று சுவாமி பூதேஷானந்த மஹராஜ் கேட்டார் அமைதியாக.
"ஒரு டேப் ரெக்கார்டரில் நீங்கள் தந்த மந்திரத்தைப் பதிவு செய்து அந்த மந்திரத்தை நான் தொடர்ச்சியாகக் கேட்கும்படி ஓட விடுவேன். இவ்வாறு செய்தால் எனக்கு முக்தி கிடைக்கும் அல்லவா?" என்று அப்பாவியாக அந்த அன்பர் கேட்டார்.
தவத்திரு சுவாமிகள் அமைதியாக, "ஆம், முக்தி கிட்டும்" என்றார்.
அன்பருக்கு ஒரே குஷி. "கட்டாயமாக முக்தி கிடைக்குமா?" என்று கேட்டார் துள்ளிக் குதித்தபடி.
"ஆம் கட்டாயமாக முக்தி கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு சுவாமிகள் ஒரு சிறு இடைவெளி கொடுத்தார். பிறகு, "கட்டாயமாக அந்த டேப் ரெக்கார்டருக்கு முக்தி கிடைக்கும்" என்றாரே பார்க்கலாம்.
சுவாமிகள் அந்த இடைவெளியில் புகுத்திய நகைச்சுவையைக் கேட்டு அன்பர் அசடு வழிந்தார்.
ஜப சாதனை செய்யும்போது மனம் சிதறிப் போகிறது என்பது பல வருடங்களாகப் பலரும் பேசி வரும் ஒரு பிரச்னைதான். அவ்வாறு பேசுவதே சாதனையின் ஓர் அங்கமாகச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். நம் மனது கட்டுப்படாது சிதறி கொண்டே இருக்கும் என்ற உறுதிப்பாடு பலருக்கும் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அதனை நாணமின்றிப் பிறரிடம் ஒப்புக் கொள்ளவும் நம்மில் பலரும் தயங்குவதில்லை.
"மனோ ப்ரஹ்மம் இதி உபாஸீத, இதி அத்யாத்மம் - மனதை பிரம்மம் என்று உபாசனை செய்ய வேண்டும். இது அத்யாத்ம சாதனை" என்கிறது சாந்தோக்கிய உபநிஷதம்.
கட்டாந்தரையாகவும் தாறுமாறாகவும் உள்ள மனதை ஏர் பூட்டி உழுதால் உன்னதமான ஆன்மீகப் பயிர் விளையும். அதற்கு முன் களைகள் வேகமாக வெளியே வரும். களைகளையும் எருவாக்கும் திறமைதான் ஜப சாதனை.
ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் அருமையான காட்சி. காட்டில் ரிஷிகள் சிவலிங்கத்தை பூஜிக்கிறார்கள். அப்போது சேட்டை பிடித்த நளன் என்ற வானரன் அவற்றை எடுத்துக் கடலில் போட்டுவிடுவான். லிங்கங்கள் கடலில் மூழ்கிவிடும்.
வானரத்தைச் சபித்தால் தங்களுடைய தவசக்தி குறையும். அதே சமயத்தில் நளனும் திருந்த வேண்டும் என்று நினைத்த ரிஷிகள், நீ இனி எதைக் கடலில் போட்டாலும், அது மூழ்காது, மிதக்கும் என்று கூறிவிட்டார்கள்.
ஸ்ரீராமர் சீதாபிராட்டியை மீட்க இலங்கைக்குச் செல்வதற்காகக் கடலில் பாலம் கட்ட நினைத்தார். அவர் நினைத்தால் அம்புகளைக் கொண்டே பாலம் கட்டி இலங்கையை நொடியில் அடைந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. தமது பக்தர்களுடன் சேர்ந்து காரியமாற்றுவதில் பகவானுக்கும் திருப்தி அல்லவா?
அதன்படி, வானர சேனை ராமருக்காகப் பாலம் கட்டியது. வானரங்கள் பாறைகள் மற்றும் மரங்களைக் கொண்டு வர, அவற்றை நளன் கடலில் தூக்கிப் போடுவான். ரிஷிகள் தந்த சாபத்தின் காரணமாக அவை மிதந்தன.
இந்த வரலாற்று உண்மையின் மூலம், பகவத் கைங்கரியத்தில் ஈடுபடும் போது, இறைவனுக்காக உழவாரப் பணி செய்யும்போது, சுவாமி விவேகானந்தர் கூறும் நரசேவையில் நாராயணனுக்குத் தொண்டு செய்யும்போது ஒருவருக்குள்ள சாபமும் வரமாக மாறுவதைப் பார்க்கிறோம்.
நளன் போட்ட பாறைகள் அங்கும் இங்குமாக இருந்ததால், அதில் வானர சேனை நடக்க முடியவில்லை.
அப்போது ஸ்ரீராமர் ஆஞ்சநேயரைப் பார்த்து அருளினார். ராமரின் அனுக்கிரகத்தைப் பெற்ற ஆஞ்சநேயர், மிதந்த கற்களின் மீது ராம், ராம் என எழுதினார். நளனைக் கொண்டு அவற்றை மீண்டும் கடலில் இடச் செய்தார்.
தாறுமாறாக மிதந்த கற்கள் உடனே ஒழுங்காகச் சேர்ந்தன. ஒரு பாறைக்கும் அடுத்த பாறைக்கும் இடையில் இருந்த இடைவெளியில் ராம பிரேமை புகுந்தது. சிதறிக் கிடந்த எண்ணங்கள் சேர்வது போல் பாறைகள் ஒன்று திரட்டப்பட்டன. வானர சேனை அதன் வழியே வெற்றிகரமாகச் சென்றது.
சிதறிய பாறைகளை ராமநாமம் சீர் செய்ததைப் போல் சிதறிக் கிடக்கும் நம் எண்ணங்களைச் சீராக்கி, நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு. முறையாக சித்த குருவிடமிருந்து பெறும் எல்லா மந்திரங்களுக்கும் அந்தச் சக்தி உண்டு.
அப்படிப்பட்ட நாமத்தை நாம் ஜபிக்கிறோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஒருவருக்கு இருக்க வேண்டும். நாம இடைவெளியில் பக்தியும் இறை நம்பிக்கையும் முழு கவனமும் இருந்தால் நமக்குள் ஆனந்தம் ஊற்றெடுக்கும். ஒவ்வொரு நாமத்தையும் அவசர கதியில் சொல்லாமல் கடவுளைத் தவிர வேறு கதி இல்லை என்ற மனநிலையில் நாமத்தைச் சொல்ல வேண்டும்.
அவ்வாறு சொல்லி முடித்ததும் "பகவானே, நான் சொல்லும் நாமம் உனக்குப் பிடித்திருக்கிறதா? உனக்கு இது சந்தோஷத்தைத் தருகிறதா?" என்பதைக் கேட்டு ஜபியுங்கள். எல்லாம் வல்ல பரம்பொருள் பிரியமுடன் வந்து அமர்வார், நம்முடன் உரையாட!
ஆறுதலுக்காகவும் அரவணைப்பிற்காகவும் யார் யாரிடமோ சென்று அல்லல்படுவதைவிட ஆண்டவரிடம் செல்வது அதி உத்தமம் அல்லவா!
சுவாமி விமூர்த்தானந்தர்
15.06.2023
வியாழக்கிழமை,