RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

பார்வதி தேவியாகப் பால்; சாரதா தேவியாகத் தயிர்!

01.03.23 05:37 PM By thanjavur


பார்வதி தேவியாகப் பால்;
சாரதா தேவியாகத் தயிர்!

தேவை அறிந்து அருள்வதில் தெய்வங்களைப் போல் வேறு யார் செய்திட முடியும்!

                                

1923-களில் பிரம்மச்சாரி த்ரம்பக சைதன்யர் மேற்கு வங்காளத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் பேலூரில் சேர்ந்திருந்தார். இஷ்டதெய்வ சாந்நித்தியம், சங்ககுருவிற்கு சேவை, கங்கை நதி புனித நீராடல், பகவத்கீதை பாராயணம் என ஆன்மீக வாழ்க்கைக்கு அடிப்படையான அனைத்தும் பேலூர் மடத்தில் அவருக்கு நிரம்பக் கிடைத்தன.

                                

மேற்கு வங்காளத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் கடுகு எண்ணெய் அதிகமாக இருக்கும். அந்தச் சமையலின் சுவை அவரது உடலுக்கு ஏற்கவில்லை. உணர்வு மேம்பாட்டிற்காக வந்த இடத்தில், உணவு பற்றிய கூப்பாடு வருகிறதே என்று இளம் பிரம்மசாரியான த்ரம்பக சைதன்யர் வருந்தினார். இது பற்றி தமது குருவான மகாபுருஷர் சுவாமி சிவானந்தரிடம் கூட அவர் கூறவில்லை.

                                

சரியாகச் சாப்பிட முடியாததால் சோர்வாக அன்று படுத்துவிட்டார். அப்போது ஒரு தெய்வீகக் கரம் கிண்ணம் ஒன்றில் தயிர் சாதம் கொண்டு வந்து அன்புடன் நீட்டியது. பசியின் மிகுதியால் அதனை அவர் புசிக்கப் போனபோது அந்தத் திருக்கரம் யாருடையது என்பதைப் பார்த்ததும் பசி மறந்தார்.

                                

ஆ, அன்னை ஸ்ரீசாரதாதேவியின் அன்பு முகம் அல்லவா இது! பக்தியினால் பூரித்து நின்றார் த்ரம்பக சைதன்யர்கனவு கலைந்தது. தமது சாதாரண தேவைகளைக்கூட தாய் சாரதாதேவி எவ்வாறு கவனித்து வருகிறார் என்று மெய்சிலிர்த்து நின்றார் த்ரம்பக சைதன்யர்

அன்ன பாலிப்பு அடுத்த நாளும் தொடர்ந்தது. 


இரண்டு நாட்கள் கனவில் நடந்தது மூன்றாம் நாள் நிஜத்திலேயே நிகழ்ந்தது. தமது சீடர் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளதால் குரு சுவாமி சிவானந்தரே சீடருக்கு விசேஷமாகத் தயிர் வழங்க ஏற்பாடு செய்தார். 

        

அருட்தாயும் அருட்குருவும் உடலாலும் உள்ளத்தாலும் தன்னை போஷிப்பதை எண்ணி எண்ணி நெக்குருகினார் த்ரம்பக சைதன்யர். அன்னை ஸ்ரீசாரதா தேவி த்ரம்பக சைதன்யருக்குத் தயிர் தந்ததின் தாத்பரியம் என்ன?

        

சீர்காழியில் ஞானசம்பந்தர் சிறுவனாக இருந்து தாயை அழைத்தார். அன்னை ஆதிபராசக்தி பார்வதி தேவியாக  அழுத அந்தப் பிள்ளைக்குப் பாலூட்டினார். அந்த ஞானப்பாலில் திருஞானசம்பந்தர் தோய்ந்தார். பால் தோய்ந்து போனால் தயிர்தானே ஆகும்! பார்வதியாக வந்து சம்பந்தருக்குப் பாலூட்டிய அதே பராசக்தி அடுத்த ஓர் அவதாரத்தில் அன்னை ஸ்ரீசாரதையாக த்ரயம்பக சைதன்யருக்குத் தயிரூட்டினார். 


அந்த ஞானத்தயிரைப் பெற்ற த்ரயம்பக சைதன்யர் பின்னாளில் சுவாமி சித்பவானந்தராக மலர்ந்தார்.


பார்வதி தேவியின் பாலையும் சாரதாதேவியின் தயிரையும் நம் மனங்களில் தோய வைத்துக் கடைவோம்; அடுத்து அன்னையின் அருளால் பக்தி எனும் நெய் பெறுவோம். அந்த நெய்யை ஊற்றி நமது வாழ்க்கை என்ற விளக்கை ஏற்றுவோம்.

        

இது ஒரு லீலா தியானம். தியானிப்பவர்கள் மகிழ்வர்.

சுவாமி விமூர்த்தானந்தர்

01.03.2023

புதன்கிழமை,

ஸ்ரீராமகிருஷ்ண மடம்,

தஞ்சாவூர்

thanjavur