RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 4

03.06.24 08:06 PM By thanjavur

மனிதர்கள் பொதுவாக எதையும் அவசரப்பட்டு தீர ஆலோசிக்காமல் முடிவெடுத்து விடுவார்கள். "மனிதன் சிந்திப்பதில் சோம்பேறியாக இருக்கிறான். அதனால்தான் அவன் எதைப் பற்றியும் விரைவாகத் தீர்ப்பு வழங்கி விடுகிறான்" என்று ஓர் அறிஞர் கூறினார்.

 

மனிதர்களின் விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது புனிதர்களின் விஷயத்தில் மனிதர்கள் இன்னும் வேகமாகப் புரிந்து கொண்டதாகப் பெருமிதப்படுவார்கள் அல்லவா! ஓர் உதாரணத்தைப் பாருங்கள்.

 

அம்ஜத் என்ற திருடன் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். வீட்டில் புகுந்து திருடுவதும், மாடு கன்றுகளைப் பறித்துக் கொண்டு போவதும், பிறகு போலீசில் சிக்கி ஜெயிலில் கிடப்பதும் அவருக்கு வாடிக்கை.

 

ஆனால் ஒவ்வொரு முறை சிறையிலிருந்து திரும்பியதும் அவர் தன் வீட்டுக்குப் போகிறாரோ இல்லையோ, முதலில் அன்னையின் வீட்டுக்குத் தான் செல்வார். அன்னையும் அவர் திருடன் என்று முகம் சுளித்ததில்லை. அன்னையின் உறவினர்கள் அவரை அலட்சியப்படுத்தி  அவமானப்படுத்தினாலும் அன்னை, தான் அன்னைதான் என்பதை விளக்கி வந்தார்.

 

சாரதாம்மா, அம்ஜத் குளிப்பதற்கு எண்ணெய் தருவார், வயிறார உணவு படைப்பார், குருதேவரின் பிரசாதம் வழங்குவார். துணிமணிகள் தந்து அவரை வீட்டுக்கு அனுப்புவார். இது பலருக்கும் பிடிக்கவில்லை.

 

இது ஓரிரு நாட்கள் மட்டுமல்ல. வாழ்நாள் வரை அம்ஜத்தும் திருடுவதை நிறுத்தியதில்லை. அன்னையும் அவன் மீது அன்பை நிறுத்திக் கொண்டதும் இல்லை. அன்னையின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பூஜைக்காக, அன்னைக்காகத் தன் வீட்டில் விளைந்த காய்கறிகளைக் கொண்டு வந்து காணிக்கையாக்குவார்.

 

ஆச்சரியம் என்னவென்றால், அன்னை ஸ்ரீசாரதா தேவி, "அம்ஜத், நீ இனி திருடக் கூடாது" என்று ஒருமுறைகூட கண்டித்ததில்லை. 

"அம்மா, இனி நான் திருடவே மாட்டேன்" என்று அம்சத்தும் ஒரு முறையும் பொய் வாக்குறுதி தந்ததில்லை. அம்மா அம்மாவாகவே இருந்தார். அம்ஜத் திருடனாகவே இருந்தார்.

 

அன்னையின் தம்பி வரதர் ஒரு முறை ‘விஷப்பாம்புக்கு நீங்கள் பால் வார்க்கிறீர்கள்’ என்பது போன்ற முறையில் அன்னையைக் கண்டித்தார்.

 

அதைக் கேட்ட அன்னை, "வரதா! திருடுகின்ற அம்ஜத்தின் மனநிலை உள்ளே அழுத்தி வைக்கப்பட்டிருந்தது. நான் காரணமில்லாமலா அவன் மீது அவ்வளவு அன்பையும் பாசத்தையும் கொட்டினேன்? அவனுக்குப் பலவித பரிசுப் பொருட்களையும் உணவையும் அளித்து அவனைப் பணிவாக வைத்திருந்தேன். அதனால்தான் அவன் எனக்கு எப்போதும் அடிபணிந்து இருந்தான். நான் இவ்வளவு பெண்களுடன் இருக்கிறேன்; பல நகைகளும் பணமும் இருக்கின்றன. நீங்கள் எல்லோரும் சிறுவர்கள்; எல்லா நேரங்களிலும் என்னுடன் இருக்கவும் மாட்டீர்கள். இதற்கெல்லாம் பாதுகாப்பு யார் தருவார்கள்?" என்று அன்னை கேட்டார்.

 

அன்னை சாரதை சொல்ல வந்ததும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியதும் இதுதானோ!:

 

அன்னை வாழ்ந்த காலத்தில் நம் நாட்டு வளங்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பெரும் கொள்ளையர்கள் நம் நாட்டில் ஏற்படுத்திய பஞ்சத்தினால் அம்ஜத் போன்ற சிறிய திருடர்கள் தோன்றினார்கள்.

 

திருடன் ஒருவன் ஒரு பகுதியில் அடிக்கடி சென்று வருகிறான் என்றால் மற்ற திருடர்கள் அங்கு செல்வதில்லை. அதன்படி ஜெயராம்பாடி பகுதி அம்ஜத்தின் 'ஏரியா'வாக இருந்தது.

 

அந்த அம்ஜத்தை அன்னை தமது அபரிமிதமான அன்பினால் ஒரு நல்லவனாக, அடக்கமாக, திருட்டு புத்தி இல்லாத மகனாக வைத்திருந்தார். அன்னையின் இந்த அறிவு கலந்த அன்பாற்றல் எவ்வளவு உயர்ந்தது!

 

அந்த ஸ்ரீசாரதாதேவி நம்மிடம் உள்ள துர்குணங்களை நீக்கி, சத்குணங்களாகச் சீக்கிரம் செய்யட்டும் என்று அன்னையின் திருவடியில் நம்மைச் சமர்ப்பித்துக் கொள்வோம்.

சுவாமி விமூர்த்தானந்தர்

03.06.2024

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

அன்புத் துளியைக்  கேட்க

thanjavur