பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.
ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும் பூஜாரியின் முகம் அவரைப் போல் மாறி இருப்பதைப் பார்த்திருக்கிறோம். எத்தனையோ துறவிகள் தாங்கள் வழிபடும் ஸ்ரீராமகிருஷ்ணரின் தன்மையை உள்வாங்கி தியாகசீலர்களாக, சேவா வடிவினர்களாக, பக்தஜனபிரியர்களாக விளங்கி இருக்கிறார்கள்.
“அன்னை ஸ்ரீசாரதா தேவியின் வாயில் காப்பவன் அடியேன்” என்று தன்னைக் கருதிக் கொண்டவர் சுவாமி சாரதானந்தர். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான அவர் ஸ்ரீசாரதா தேவியின் காரியதரிசியாகவும் விளங்கியவர். தமது பெயருக்கு ஏற்றாற்போல் அவரது ஆனந்தம் முழுவதும் அன்னை சாரதையின் மூலமாகவே சித்தித்தது.
அது எந்த அளவிற்குச் சென்றது என்றால், அன்னை பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம் போலவே இவரும் அன்பின் ஊற்றாக மலர்ந்தார்.
சரயுபாலா என்ற பக்தை தமது நினைவுக்குறிப்பில் கூறியது ஒரு சிறிய ஆனால் சுவையான தகவல். அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத்துளி ஒன்று சுவாமி சாரதானந்தர் சரயுபாலாவின் நலத்தை விசாரிப்பதன் மூலமாக நமக்குக் கிடைக்கிறது.
சுமார் 15 வருடங்கள் அன்னை சாரதா தேவியின் தரிசனத்திற்காகக் காத்திருந்த பிறகு அவரை நேரில் தரிசித்தவர் சரயுபாலா. முதன்முறை உத்போதனில் சாரதா தேவியை தரிசித்தார்; அன்னையின் அன்பில் திக்கு முக்காடிப் போனார்.
அன்னையிடம் விடைபெற்று மாடியிலிருந்து இறங்குவதற்கு முன்பு அன்னை அவரிடம், "படிகளில் நீயே தனியாக இறங்கி விடுவாயா அல்லது நான் உதவிக்கு வரட்டுமா"? என்று ஒரு குழந்தையிடம் கேட்பது போல் அந்த 40 வயதைக் கடந்த பெண்மணியிடம் விசாரித்தார் அன்னை.
இது நடந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அன்னையை சரயுபாலா மீண்டும் தரிசிக்கச் சென்றார். அவர் அன்று இரவு அன்னையுடனே தங்க முடிவு செய்தார். ஆனால் அவரை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல ஒருவர் வந்தார், அதுவும் இரவு 11 மணிக்கு.
அன்னை அப்போது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். சரயுபாலா அன்னையிடம் விடை பெற்றுச் செல்ல முடியவில்லை. உத்போதன் மடத்தில் கீழே பல துறவிகள் உறங்கிக் கொண்டிருந்தனர், ஒருவரைத் தவிர. அவர் சுவாமி சாரதானந்தர் என்று நீங்கள் யோசித்தது சரிதான்.
துறவிகளுக்கு இடைஞ்சலாகிவிடக் கூடாது என்பதற்காக ஓசையின்றி மாடியிலிருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருந்தார் சரயுபாலா. அப்போது அந்த நடுநிசியிலும் சாரதானந்தர் இன்னொருவரிடம், "அந்த சரயுவை மாடிப்படிகளில் பத்திரமாக இறங்கி வரச் சொல்" என்று அன்னை சொல்வது போன்றே சொன்னார். புறப்படும்போது அன்னை தன்னிடம் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் சரயுபாலாவிற்கு உடனே தீர்ந்தது.
சாரதையை தியானித்து தியானித்து அவர் பேசுவது போலவே சாரதானந்தரும் பேசினார் என்பதே நாம் கவனிக்க வேண்டியது.
'தேவோ பூத்வா தேவம் யஜேத்' - தேவ தன்மையைப் பெற்ற பிறகு தெய்வ ஆராதனை செய் என்று பூஜா பத்ததி கூறும். சாரதானந்தர் தமது வாழ்வில் மட்டுமல்ல, வார்த்தையிலும் ஸ்ரீசாரதையின் சாரத்தைக் கொண்டிருந்தார்.
அந்தச் சாரமான சத்து அன்னை சாரதா தேவியின் பிரசாதமாக நமக்கு என்றும் கிடைக்கட்டும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
17 டிசம்பர், 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்