RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -2

10.12.22 02:42 PM By thanjavur

திருப்பாத தீர்த்த மகிமை


தீர்த்தம், தாகத்தைத் தணிக்கும், தாக சாந்தியைத் தரும். தீர்த்தம் எனப்படும் தண்ணீரே சிறந்தது என்றால், ஸ்ரீபாத தீர்த்தம் (சரணாமிர்தம்) எவ்வளவு மகிமை வாய்ந்ததாக இருக்கும்.


அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்க சரயுபாலா என்ற பக்தை 15 ஆண்டுகளாகக் காத்திருந்தார். முடிவில் 1911-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று அன்னையிடம் அவர் மந்திர தீட்சை பெற்றார். 


நெடுந்தூரத்திலிலுள்ள பூரி ஜெகந்நாதரின் பக்தர்கள் பகவானின் உலர்ந்த அன்ன பிரசாதத்தைத் தங்கள் இல்லங்களில் வைத்துக் கொள்வார்கள். தினமும் முதலில் அந்தப் பிரசாதத்தின் ஒரு சில பருக்கைகளை அருந்திய பின்னரே மற்றதை உண்பார்கள். அதுபோல் அன்னையின் பாத தீர்த்தத்தை சரயுபாலாவும் தன் இல்லத்தில் வைத்திருக்க ஆசைப்பட்டார்.


சரயுபாலா நீருள்ள ஒரு பாத்திரத்தில் அன்னையின் பாதங்களை வைக்க வேண்டினார். அன்னையும் அவ்வாறே வைத்துச் சில மந்திரங்களை உச்சரித்தார். பிறகு சரயுபாலா அந்தத் திருப்பாத தீர்த்தத்தை அருந்த அன்னை கூறினார். அது அந்தப் பத்தைக்கு நீர்த்துளி மட்டுமல்ல, அன்னையின் அன்புத் துளிகள்தான்!


அன்னையின் ஸ்ரீபாத தீர்த்தத்தை அருந்தியவர்கள் பலர். அந்தப் பேற்றினை அன்னையைத் தரிசிக்காத ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அருளியவர் நாகர்கோவிலைச் சேர்ந்த மதுரநாயகம் பிள்ளை என்பவர்.


1897 -ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது அவரும் அவரது சீடரான அளசிங்கப்பெருமாளும் கடற்கரைக்குச் செல்வார்கள். இளைஞனான மதுரநாயகம் அப்போது அவர்கள் பின்னே செல்வதுண்டு. சுவாமி விவேகானந்தரே மதுரநாயகத்திடம் ஒருமுறை பேசியும் இருக்கிறார்!


பிற்காலத்தில் பெரும் மகானாக மலர்ந்த மதுரநாயகம் 1914 -ஆம் ஆண்டில் அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசித்து மந்திர தீட்சை பெற்றார். அன்னை வங்காள மொழியில் மதுரநாயகத்திடம் பேசினார். அவர் மலையாளத்தில் பதில் வழங்கினார். அன்னையின் அருளே மந்திரமாகி அது மதுரநாயகத்திடம் வந்தது.


தீக்ஷை தரும் முன்பு மதுரநாயகம் அருந்துவதற்காக அன்னை சிறிது தீர்த்தம் கொடுத்தார். அதனை அவர் தலையில் தெளித்துக் கொண்டார்; கண்கள் மீது தடவிக் கொண்டார். தீட்சை முடிந்ததும் பக்திக் கண்ணீரினால் தாயின் பாதத்தை அலம்பினார்.


ஆனாலும் அவரது மனதில் ஒரு குறை. அன்னையே சரணாமிர்தத்தைத் தந்தபோது தான் அருந்தாமல் போனதில் அவர் வருந்தினார். சீடரின் அந்த வருத்தத்தைப் போக்கவும், ஸ்ரீசாரதாதேவியே மதுரநாயகத்தின் மூலமாக, தென்னகத்துப் பக்தர்களுக்கு அருளவும் கருணை கொண்டார்.


அடுத்த நாள் மதுரநாயகம் கங்கை நதிக்குச் சென்றார். நன்றாக வடிகட்டி தூயநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்தார். உத்போதன் மடத்திற்கு வந்து ஒரு தாம்பாளம் பெற்றார். மடத்து சுவாமியிடம், "அன்னைக்குப் பாதபூஜை செய்ய வேண்டும். அதனை அன்னைக்குத் தெரிவியுங்கள்" என்று வேண்டிக்கொண்டார் மதுரநாயகம். 

அந்த சுவாமி மதுரநாயகத்தை அன்னையிடம் அழைத்துச் சென்றார். அவர் சொல்வதற்கு முன்பே அன்னை, தாம்பாளத்தில் தமது பாதத்தை வைத்தார். பக்திப்பெருக்கோடு மதுரநாயகம் அன்னையின் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். ஸ்தோத்திரங்களைக் கூறினார்.


சீடரின் பக்தியினால் பரவசமுற்ற அன்னை முகமலர்ச்சியுடன் தமது திருக்கரங்களில் சிறிது கங்கைநீரை ஏந்தினார். கண்ணை மூடி ஜபித்தபடி அவர் தமது திருப்பாதங்களிலேயே அந்த நீரை மூன்று முறை விட்டார். பிறகு அதனை மதுரநாயகம் அருந்தினார்.


அன்னையின் அன்பு பிரவாகத்தில் மூழ்கியிருந்த மதுரநாயகம் அன்றே முடிவு செய்திருக்க வேண்டும் அன்னைக்காகவே இனி வாழ்வதென்று!


பாத தீர்த்தம் பாவன தீர்த்தமானது. ஆம், பிற்காலத்தில் அந்த மதுரநாயகம் மகான்களுக்குள் ஒரு நாயகமாக சுவாமி அம்பானந்தராக மலர்ந்தார். தமது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னையின் அருள்துளிகளான அந்தத் தீர்த்தத்தைப் பக்தியுடன் விநியோகித்தார் சுவாமி அம்பானந்தர். வெள்ளிமலை, விவேகானந்தா ஆசிரமத்தில் இன்றும் அந்த ஸ்ரீபாத தீர்த்தம் உள்ளது.


நமது காலத்தில் நிகழ்ந்த ஓர் அருளிச்செயலையும் காண்போமா?

சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு எதிரில் ஒரு பக்தரின் கடை ஒன்று இருந்தது. முன்பின் தெரியாத ஒருவர் அன்று மாலையில் சாம்பிராணி புகை போட்டுப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். கடையில் அந்தப் பக்தரின் அண்ணன் அன்று இருந்தார். அவர் அன்று சற்று கவனக்குறைவாக இருந்தார். அதனைப் பயன்படுத்திக் கொண்டு புகை போடுபவர் மயக்கும் புகை மருந்து ஒன்றைப் போட்டார். கடைக்காரர் மயக்கமுற்றார். வந்தவன் திருடனாக மாறி ஓடிவிட்டான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு கடைக்குப் பக்தர் சென்றார். தனது அண்ணன் கண்ணைத் திறந்திருந்தும் எதையும் கவனிக்காததைக் கண்டார். அவரை உலுக்கினார்; அழைத்தார்; மயக்கம் தெளியவில்லை.


முடிவில் நேரே ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றார். கோவிலில் ஸ்ரீராமகிருஷ்ண -ஸ்ரீசாரதா தேவியின் சன்னிதியில் வைக்கப்பட்டிருந்த  சரணாமிர்தத்தை எடுத்துச் சென்று அண்ணனின் முகத்தில் தெளித்தார். மயக்கத்தில் இருந்தவர் விழித்துப் பயம் தெளிந்தார்.


இவ்வாறு திருப்பாதத் தீர்த்தத்தின் பலன் பலவகையிலும் உள்ளது.

மெய்யன்பர்களே, இனி, நீங்கள் எந்தக் கோவிலுக்குச் சென்று தீர்த்த பிரசாதம் வாங்கினாலும் அது ஸ்ரீபாத தீர்த்தம் என்றே எண்ணுங்கள். பத்ம புராணம் கூறும் இந்தப் பிரார்த்தனையைக் கூறிவிட்டு அருந்துங்கள்:

 அகால ம்ருத்யு ஹரணம்

 ஸர்வவ்யாதி வினாசனம்

 விஷ்ணோ பதோதகம் பித்வா

 சிரஸா தாரயாமி அஹம்!


பொருள்: "எல்லா நோய்களையும் நீக்கி, அகால மரணமடையும் நிலையைப் போக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானின் பாதத் தாமரை நீரை அருந்தி, அந்தப் புனித நீரை என் சிரசில் தரிக்கிறேன்."


அன்னை ஸ்ரீசாரதா தேவி தாமே தமது பக்தர்களுக்கு உகந்தளித்த அவரது திருவடித் தாமரைகளில் சிந்தும் தேனமுதத்திற்கு ஏங்கும் வண்டுகளாக மாறுவோம்!

சுவாமி விமூர்த்தானந்தர்

10 டிசம்பர், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

அன்புத் துளியைக்  கேட்க

thanjavur