RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -1

08.12.22 07:44 PM By thanjavur

சாரதா என்றால் சாரத்தைத் தருபவள் என்று பொருள். அன்னை ஸ்ரீசாரதாதேவி உங்களுக்கும் நமக்கும் என்ன தருகிறார்?


பொருள்களேயே பெரிதாகப் பேசும் இந்த உலகில் மெய்யான அன்பை வழங்கவும் ஆளில்லை, ஏற்பதற்கும் அதுவே நிலை.

    

அப்படிப்பட்ட நிலையில் அன்பை அள்ளி அள்ளி அகிலத்திற்குத் தரும் தாய்தான் அன்னை சாரதை. அவரது அன்புத் துளி ஒன்றைச் சுவைப்போமா?

    

ஒரு முறை ஜெயராம்பாடியிலிருந்து சில பக்தைகள் பேலூர் மடம் சென்று வந்து அன்னையைத் தரிசித்தனர். அப்போது அவர்கள் முதலில் சொன்ன ஒரு செய்தி அன்னையின் செவிக்கு இனியது மட்டுமல்ல; அன்னையின் ஓர் அன்புத்துளி அன்று பிரவாகம் எடுத்து சமுத்திரமான நிகழ்வு அது.

    

பாபுராம் மகராஜ் என்ற சுவாமி பிரேமானந்தர் தாய்மை நிறைந்தவர். பக்த சேவையை பகவத் சேவையாகவே கண்டவர். அந்த அடியார்த் தொண்டினையே அந்தப் பெண்கள் சிலாகித்துப் பேசினார்கள்.

    

"அம்மா, பேலூர் மடத்திற்கு யார் சென்றாலும் பாபுராம் மகராஜ் அவர்களுக்குப் பிரசாதம் வழங்காமல் வெறும் கையோடு அனுப்புவதே இல்லை. எந்த நேரத்தில் பக்தர்கள் சென்றாலும் அவரே சமைத்துத் தரவும் தயாராக இருக்கிறார். அவரது அன்பு கடல் போல் இருக்கிறதம்மா" என்று கூறினர்.

பக்தர்களை பகவானாகப் பார்த்துச் சேவை செய்த தனது பாபுராமைப் பற்றிக் கேட்டு அன்னை அக மகிழ்ந்தார். தனது விதை ஒன்று உன்னதமான விருட்சமானதில் தாய் விருட்சத்திற்கு மட்டில்லா ஆனந்தம்!

                                

பல வருடங்களுக்கு முன்பு அன்னையின் ஓர் அன்புத் துளி சமுத்திரமாக மாறியதை, பக்தர்களே, நீங்களும் அறிந்து ஆனந்தம் அடையுங்கள்.

                                

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டிப்பான ஒரு குரு. தமது சீடர்கள் தூக்கத்தை வெல்ல வேண்டும், தியானத்தில் நிலைக்க வேண்டும் என்று மிகவும் ஆவலுற்றார்.

                                

சீடர்கள் இரவில் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்று அறிய ஒரு நாள் நினைத்தார். ஒல்லியான தேகமுடைய இளஞ்சீடர் பாபுராமிடம், "நீ இரவில் எவ்வளவு சப்பாத்தி சாப்பிடுகிறாய்?" என்று கேட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

                                

"ஐந்து அல்லது ஆறு சப்பாத்தி சாப்பிடுகிறேன் டாகுர்" என்றார் பாபுராம் பயந்தபடியே.

                                

"ஆ...., ஆறு சப்பாத்தி சாப்பிட்டு நீ காலையில் எப்படி சுறுசுறுப்பாக எழுந்து தியானம் செய்ய முடியும்?" என்று பரபரப்புடன் கேட்டார் பகவான்.

                                

பயந்து போன சீடர், "நான் நன்கு சாப்பிட்டால்தான் உடம்பில் சக்தி இருக்கும் என்று சாரதாம்மாதான் எனக்கு அதிகமாக ஊட்டி விடுகிறார்" என்றார்.

                                

கண்டிப்பான குரு, காருண்ய அன்னையை அழைத்தார். சீடன் அதிகம் சாப்பிடுவதைப் பற்றிக் குற்றம் சாட்டினார்.

                                

முதலில் அம்மா அமைதியாகப் பதில் சொன்னார். ஆனால் சற்று அதிகம் சாப்பிடுவதை அளவுக்கதிகமாக கண்டித்தபோது அன்னை தனது கருணையைக் கம்பீரமாகக் காட்டினார்:

                                

"என் பாபுராம் அதிகமாகச் சாப்பிடுவதால் அவனது ஆன்மீக வாழ்க்கை தடைபடும் என்று நீங்கள் வருந்த வேண்டாம். அவனது ஆன்மீக வாழ்க்கையை அதன் வளர்ச்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றாரே பார்க்கலாம்.

                                

மாதாவின் மறக்கருணை இப்படி வெளிப்பட்டதில் குருதேவர் வாயடைத்துப் நின்றாரா என்ன? இல்லை. அவர் விரும்பி காத்திருந்தது அந்தத் தருணத்தைக் காணத்தான்!

                                

சொட்டு ஒன்று சமுத்திரமாக விரியப் போவதை ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கு எதிர்பார்த்தார்.

                                

தமக்குப் பிறகு எல்லாச் சீடர்களையும் அவர்களது ஆன்மீகப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது அன்னைதான் என்பதற்காக இப்படி ஒரு பொய்க் கோபம் கொண்டார் போலும். அதன் மூலம் அன்னையின் அன்புத் துளியை பாபுராம் மகராஜின் நெஞ்சில் தெளித்தார். அந்தத் துளி பாபுராம் மகராஜிடத்தில் அனுதினமும் அன்பை ஊற்றெடுக்கச் செய்தது வரலாறு.

                                

அன்னையின் அந்த அன்புத் துளி நம் நெஞ்சிலும் விழட்டும்; நமது ஆன்மீகமும் பிரவாகம் எடுக்கட்டும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

08 டிசம்பர், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur