கேள்வி 9: “எனக்கு வயது ஏற வயது ஏற, உன்னதத்தை நான் ஒவ்வொரு சிறு செயல்களிலும் காண்கிறேன்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனை நான் அவரது நூல்களில் படித்தேன். இதன் உண்மையான பொருள் என்ன?
- கல்லூரி மாணவர் அருண் சிவநேசன், சிதம்பரம்.
கேள்வி 9: “எனக்கு வயது ஏற வயது ஏற, உன்னதத்தை நான் ஒவ்வொரு சிறு செயல்களிலும் காண்கிறேன்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். இதனை நான் அவரது நூல்களில் படித்தேன். இதன் உண்மையான பொருள் என்ன?
- கல்லூரி மாணவர் அருண் சிவநேசன், சிதம்பரம்.
பதில்: சுவாமி விவேகானந்தரின் இந்த அனுபவம் உன்னதமானது. பெரிய செயல்கள் செய்யும்போது மட்டுமே நாம் ஒருவரது திறமையையோ, தகுதியையோ, புகழையோ பார்க்கிறோம். ஆனால் சுவாமிஜி மற்றவர்களின் கருத்துக்கு மாறாக, சிறு செயல்களில் செலுத்தும் கவனம்தான் ஒருவரைப் பெரிய மனிதர் ஆக்குகிறது என்பதைப் புரிய வைக்கிறார்.
இதனைப் பற்றி சுவாமி விவேகானந்தர் மிக அழகாகத் தமது ‘கர்ம யோகம்’ நூலில் விளக்கியுள்ளார். அருண், நீ கல்லூரி மாணவன் என்பதால் உனக்கு எளிதில் புரியும் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறேன்.
சென்ற மாதம் உலக கிரிக்கெட் கோப்பை ஆட்டங்களில் நமது பாரத அணி மிகச் சிறப்பாகப் பத்து ஆட்டங்களிலும் வெற்றி அடைந்தது. ஆனால் கடைசி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது உனக்குத் தெரியும்.
அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணிக்குக் கோப்பையைப் பாரதப் பிரதமர் பரிசளித்தார். ஆனால் அடுத்து அவர் செய்த காரியம் மிக முக்கியமானது.
தோல்வி அடைந்து அவமானத்திலும் சோகத்திலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களை அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கே நேரில் சென்று மாண்புமிகு. மோடி அவர்கள் ஆறுதல் கூறினார். அவர்களது கவலைகளைப் போக்கும் விதத்தில் தட்டிக் கொடுத்தார். அவர்கள் ஏற்கனவே செய்த சாதனைகளைப் பற்றி அவர்களிடமே கூறினார்.
தோல்வியில் மொத்த அணியினரே துவளும்போது அவர்களைத் தூக்கி நிமிர்த்துவது மிகச் சிறந்த தலைமை பண்பு ஆகும்.
அடுத்து, இந்திய அணி தோல்வி அடைந்ததால் நாட்டின் மீடியாக்கள் பல்வேறு விமர்சனங்களால் நம் அணியைத் தாக்க ஆரம்பித்தார்கள். வசைபாட ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் பாரதப் பிரதமரின் இந்த ஐந்து நிமிடச் செயல் சிறிதே என்றாலும் அதன் மூலம் அணியின் தன்னம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது; மீடியாக்களின் வெற்றுக் கூச்சல் நிறுத்தப்பட்டது.
இதே போன்று 2019-இல் சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெறவில்லை. அப்போது விஞ்ஞானி சிவம் அவர்களை நமது பிரதமர் தட்டிக் கொடுத்தார். மீண்டும் வெல்வோம் என்றார். சில மாதங்களுக்கு முன்பு சந்திராயன்-3 வென்ற வரலாறு உனக்குத் தெரியுமே!
தம்பி, இப்போது புரிகிறதா? நாம் வளர வேண்டும் என்றால் சின்ன சின்ன காரியங்களில் நாம் கூடுதல் கவனமும் சிரத்தையும் கொள்ள வேண்டும். அதை சுவாமி விவேகானந்தர் “எனக்கு வயது ஆக வயது ஆக நான் உன்னதத்தை ஒவ்வொரு சிறு செயல்களிலும் காண்கிறேன்” என்று கூறினார்.
தம்பி, நீயும் மேலான எல்லாவற்றுக்கும் கவனம் கொடு; மேன்மக்கள் எல்லோர் கவனமும் உன் மீது இருக்கும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
06 டிசம்பர், 2023
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்