இளைஞர் கேள்வி பதில் - 8

20.07.23 06:12 PM - By thanjavur

கேள்வி 8: நான் ஒரு பள்ளி ஆசிரியை. எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் எடுப்பது மட்டும்தான் அவர்களது கடமை. அவர்கள் வேறு என்ன செய்ய வேண்டி இருக்கிறது?


பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் நீங்களே!

சுவாமி விமூர்த்தானந்தர்: ஆசிரியர்களே! இந்த ஒரு கேள்விக்கான சரியான பதிலைக் கடமையாகவும் பொறுப்பாகவும் ஏற்றுக் கொண்டால் நீங்கள் சிறந்த ஆசிரியர் ஆவது திண்ணம்.

    

ஒரு பேருந்தின் ஓட்டுனரையும் நடத்துனரையும் கவனித்திருக்கிறீர்களா?

    

டிக்கெட் வழங்குபவர் ஒரே சமயத்தில் அஷ்டாவதானிபோல் ஏழு எட்டு வேலைகளைச் செய்வார். டிக்கெட் வழங்குவது, சில்லறை சரியாகத் தருவது, சில்லறை இல்லை என்றால் சற்றுப் பொறுத்துத் தருவது, அதனை நினைவில் வைத்துக் கொள்வது, யார் ஏறுகிறார்கள், இறங்குபவர்கள் யார் என்று கவனிப்பது, எந்தப் பயணியை எங்கு இறக்குவது, எங்கு விசில் அடிப்பது, அவ்வளவு ஏன், பஸ்ஸில் பிக்பாக்கெட்காரன் யாராவது ஏறிவிட்டால் பயணிகளை ஜாக்கிரதையாக இருக்க வைப்பது, வாலிப முறுக்கில் படிக்கட்டில் பயணிக்கும் இளவட்ட பைத்தியங்களை மேலே ஏற்றுவது...... என்று அப்பப்பா, பல கடமைகளை அவர் இன்முகத்துடன் செய்கிறார்.

    

இதை நிர்வாக மேலாண்மைப் பள்ளியில் Multi-Tasking என்கிறார்கள். இதைப் பழகுவது எல்லா மக்களுக்கும் ஓர் அடிப்படைத் தேவை.

    

முக்கியமாக, ஆசிரியர்களுக்கு இந்தப் பன்முகத் தன்மை - திறமை - கடமை - சேவை என்பது ஒரு கட்டாயத் தேவை.

    

ஏனென்றால் ஆசிரியர்களே, உங்கள் பிரியமான மாணவர்களுடன் நீங்கள் ஒரு பஸ்ஸைத் தினமும் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

    

அந்த பஸ் என்ன தெரியுமா? Sylla.....bus!

ஆம், ஒரே வகுப்பின் பல்வேறு மாணவ மாணவிகளையும் கவனித்துக் கொள்வது, பாடம் நடத்துவது, நன்கு புரிந்துகொண்டவனைக் கொண்டு புரியாதவனுக்குப் பாடம் நடத்துவது, மந்தமானவனுக்குக் கூடுதல் கவனம் தருவது, மாணவர்களின் மனோரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களின் அறிவுத்தேடலை அதிகரிப்பது, படிப்போடு பண்பாட்டையும் ஊட்டுவது, தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறச் செய்வது, மாணவர்களை மதிப்பு மிக்கவர்கள் ஆக்குவது என்று ஆசிரியர்களுக்கு அநேக multi-tasking உண்டு.

    

அந்த வகையில் சிலபஸ்ஸின் நடத்துனர் நீங்கள்தான்!

    

அடுத்து, சிலபஸ்ஸின் ஓட்டுனரும் நீங்கள்தான் ஆசிரியப் பெருமக்களே!

    

நடத்துனர் செய்யும் வேலைகள் ஓட்டுனருக்கு இல்லை. அவரது ஒரே கவனம் பஸ்ஸை விபத்தின்றி நேரத்திற்கு ஓட்டுவது. 

அதுபோல், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாணவனின் மீது ஆர்வமுள்ள அக்கறையும், அவனை வகுப்பிலும் வாழ்க்கையிலும் சரியாகக் கொண்டு செல்வது என்ற நோக்கத்துடன் பாடத்தை நடத்துவது மிக அவசியம்.

        

இன்றைய காலச் சூழ்நிலையில் அரசின் கெடுபிடிகள், கைகளையும் கண்களையும் கட்டிப் போட்டிருக்கும் சட்டதிட்டங்கள், பள்ளி நிர்வாகத்தின் கட்டாயங்கள், மாணவர்களின் அலட்சியப் போக்குகள், மாணவர்களிடம் கவனச்சிதைவாக ஊடுருவிவிட்ட சமூக ஊடகம் போன்றவை ஒரு புறம் இருக்கட்டும்.

        

மேற்கூறிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆற்றுவது போன்ற இரண்டு பணிகளும் ஆசிரியர்களுக்கு உள்ளன என்பதை உணரும்போது மாணவர் உலகம் உங்களை நிச்சயமாகக் கொண்டாடும். குறைந்தது பணியாற்றிய பெருமிதமாவது உங்களோடு நிச்சயம் இருக்கும்.

        

சிறந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் தனிக் கவனம் தருவார்கள்; மாணவ-மாணவிகளின் முன்னேற்றத்தில் கவனம் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களையே உங்களது அன்பான மாணவ மாணவிகள் தங்கள் கவனத்தில் வைப்பார்கள்.

        

சிலரது மனங்கள் நீங்கள் அன்பை விதைத்த அன்றே முளைக்கும்; மற்றவை அடுத்தடுத்த நாட்களில் முளைக்கலாம்! வெளியே உங்கள் மாணவர்கள் மலர்வதற்கு உங்களுள்ளே தொழில் தர்மம் உதிக்கட்டும்; அது நிலைக்கட்டும்.

        

அவ்வாறு நீங்களே ஓட்டுனராகவும் நடத்துனராகவும் மாறும்போது உங்களது சிலபஸ்ஸின் பாதை மென்மையாகும்; அந்த பஸ்ஸில் மாணவர்களின் பயணம் சுகமாக இருக்கும்.

        

மாறாக, ஓட்டுனர் பணியை மட்டும் ஏற்பேன்; நடத்துனர் பணி நமக்கு வேண்டாம் என்றால் உங்கள் பஸ் தாறுமாறாகப் போகும். உங்களுக்குத் தொழிலில் நேர்த்தியும் வராது; திருப்தியும் வரவே வராது. ஏனென்றால் உங்களது பஸ்ஸில் உள்ளவை உயிர்கள்;பொருட்கள் அல்ல!

        

ஆசிரியர் பணியின் அறம் எனப்படுவது உங்கள் பஸ்ஸில் உள்ள ஆட்களைக் கொண்டு செல்வது மட்டுமல்ல, முறையாகக் கொண்டு செல்வதும் முக்கியமானது.

        

அன்பு ஆசிரியர்களே! இது உபதேசமல்ல, உற்சாக உரையாக உள்வாங்குங்கள்! உன்னதமாக மலர மாணவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்!

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

20 ஜூலை, 2023

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur