கேள்வி 4: புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஒருவருக்கு என்ன பயன் உள்ளது? புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஒருவன் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
கேள்வி 4: புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஒருவருக்கு என்ன பயன் உள்ளது? புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஒருவன் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
பதில்: இப்படி ஓர் அருமையான கேள்வியைக் கேட்டதற்காக உன்னைப் பாராட்ட வேண்டும்.
புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், புதிய சக்திகள் என்று தேடும்போது மனிதனின் வாழ்க்கை ஜொலிக்கிறது. குண்டுசட்டியில் குதிரை ஓட்டாதே, அரைத்த மாவையே அரைக்காதே என்பதெல்லாம் புதுமையை விரும்ப வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவை.
ஒரு சிறு சம்பவத்தைக் கேள். பரபரப்பான மும்பை மாநகரில் படிக்கும் சிறுவன் ஒரு குக்கிராமத்திற்குச் சுற்றுலா சென்றான். அவன் போகும் முன்பு ஆசிரியர் அவனிடம், “கிராமத்தில் நீ கண்ட ஓர் அரிய ஒன்றை ஒரே வரியில் எழுத வேண்டும்” என்று ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தார்.
சிறுவன் கிராமத்திற்குச் சென்றான். வயல்வெளிகளில் சுற்றினான். சில தினங்களுக்குப் பின்னர் ஊருக்குத் திரும்பினான். பள்ளியில் தான் பார்த்த அரிதான ஒன்றை பொடியன் புட்டு வைத்தான். அதைப் பார்த்து ஆசிரியர் அதிர்ந்து போனார். சிறுவன் எழுதியது இதுதான்: ‘இந்தக் கிராமத்தில நெலவு ரொம்ப பெருசா இருக்கு.’
சிறுவன் நிலவைப் பார்த்த தினம் பௌர்ணமி என்பதைப் புரிந்து கொண்டார் ஆசிரியர். அந்தச் சிறுவனிடத்தில் மூன்று அறியாமைகள் இருப்பதைப் பாருங்கள்.
1. பௌர்ணமியன்று நிலவு பெரிதாகத்தான் இருக்கும் என்பதே அவனுக்குத் தெரியவில்லை.
2. உலகில் இருப்பது ஒரு நிலவுதான் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.
3. அவனது நகரிலும் ஒவ்வொரு மாதமும் உதிக்கும் முழு நிலவை அவன் இதுவரை கவனித்துப் பார்த்ததே இல்லை.
இந்த விஷயத்தை நாம் இன்னும் சற்று விரிவுபடுத்திப் பார்க்கலாமா?
கடவுளைப் பற்றிய அறிவில் சிறுவன் செய்த அதே தவறைக் பலரும் குறிப்பாக, மதத் தீவிரவாதிகள் செய்கிறார்கள். அந்தச் சிறுவனுக்கு இருக்கும் அதே மூன்று அறியாமைகள் வயதில் மட்டும் வளர்ந்த பலருக்கும் இருக்கிறது.
முதல் அறியாமை: எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்திருந்தாலும் மதத் தீவிரவாதி தனக்குப் பிடித்த ஓர் இடத்தில், தனது மதத்தில் மட்டும் கடவுள் இருக்கிறார் என நம்புகிறான். பிறரையும் அவ்வாறு நம்பும்படி வற்புறுத்துகிறான். மாற்று மதத்தினருக்கு வேதனை தருகிறான்.
இரண்டாம் அறியாமை: ‘ஏகம் சத், விப்ரா பஹுதா வதந்தி:’ - கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரைப் பல பெயர்களிட்டு அழைக்கிறார்கள் என்கிறது வேதம். ஆனால் மத வெறியனோ, இருப்பது என் கடவுள் மட்டுமே. அவர் மட்டுமே உயர்ந்தவர் என்று கூறி உலகினைப் புரட்டி எடுக்கிறான்.
மூன்றாம் அறியாமை: ஒவ்வொருவரின் உள்ளத்தில் இறைவன் வீற்றிருக்கிறார். அவ்வாறு விளங்கும் இறைவனைத் தரிசிக்காமல், அதற்காக முயற்சியும் செய்யாமல் எதையெதையோ செய்து, எங்கெங்கோ சென்று அவரைத் தேடித் திரிகிறான்.
ஹர்ஷினி, இவ்வாறு ஒரு சிந்தனையைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்கப் புதுப் புது அர்த்தங்கள் பிறக்கும். அர்த்தமுள்ள சிந்தனைகள் ஆனந்தத்தை வழங்கும். அதனால்தான் மகாகவி பாரதி 'சொல் புதிது, சுவை புதிது' பாடினார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் "வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்" என்று கூறுவார். கற்கும் வரைதான் மனிதனுக்கு ஆனந்தம் பிறக்கும். அதனால் கசடற கற்றிடு; கற்றுக் கொண்டே இரு. குதூகலம் உனக்குள் கொப்பளிக்கும்.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
23 ஜூன், 2023
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்