கேள்வி 26: 2025-ஆம் ஆண்டில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று வெற்றிவாகை சூடியுள்ளது. அதிலிருந்து நாம் கற்க வேண்டியது என்ன?

பதில்: இந்தியப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதனை புரிய வேண்டும் என்று முதன்முதலில் முழங்கியவர் சுவாமி விவேகானந்தர். பெண்களின் கல்வி, வீரம், பண்பாடு, பாரம்பரியம், தன்னம்பிக்கை, ஒழுக்கம் போன்றவற்றை வளர்ப்பதில் சுவாமிஜி பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல அரிய கருத்துக்களைக் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் சென்று இந்திய விமானப்படை பெண் விமானிகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தினார்கள்.
ISR0வில் பல துறைகளின் தலைமைப் பொறுப்பில் பெண் தொழில்நுட்ப வல்லுநர்கள் சாதித்தும் வருகிறார்கள். இதன் நீட்சியாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது உலகக் கோப்பையை வென்றது.
ஆசிய நாடுகளின் வீரர்கள் மற்ற உலக வீரர்களைவிட உருவிலும் வலுவிலும் எளியவர்கள் என்பார்கள். நம்மால் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு கிரிக்கெட்டில் ஈடு தர முடியாது என்ற பலவீனமும் இருந்தது. அந்தப் பலவீன மனநிலையை பாரத மகளிர் அணி தற்போது தகர்த்துவிட்டது.
உலக கோப்பை ஆட்டங்களில் இந்திய அணி மூன்று லீக் போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்தபோதும், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அப்போதும் அவர்கள் அமைதியாகவும் கவனத்துடனும் இருந்தார்கள். சிரமங்கள் வரும்போதுதான் செம்மையும் வரும் என்பது போல், ஜெமிமா, எல்லா ஆட்டங்களிலும் வென்று வந்த அசைக்க முடியாத ஆஸ்திரேலியாவை அடிபணியச் செய்தார்.
இந்த அணியில் இடம் பெற்றவர்கள் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் இருந்து வந்த வீராங்கனைகள் என்பதும் முக்கியமானது.
இன்றைய பாரதப் பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றி தனிமனித வெற்றியாக இல்லாமல் குழுவின் வெற்றி என அணியின் தலைவி ஹர்மான்ப்ரீத் கௌர் கூறியுள்ளார். இவ்வாறு இந்தியர்கள் ஒற்றுமையாக இணைந்து பெரும் காரியங்களைச் செய்வதைக் கண்டு சுவாமி விவேகானந்தர் கர்வப்பட்டிருப்பார்.
கோப்பையிலிருந்து கற்கலாமா?
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சாதித்த சில வீராங்கனைகளுக்குக்கூட ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்புகள் கிட்டவில்லை. ஆனால் வாய்ப்பு வந்ததும் அதை வகையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வாய்ப்பு வரும்போது அதைப் பிடித்துக் கொள்பவன் ஜொலிப்பான்; அதை இழந்தவன் தவிப்பான்.
பிரதிகா ராவல் நன்றாக பேட்டிங் செய்து விளையாடினார். ஆனால் திடீரென்று அவருக்குக் கால் முறிவு ஏற்பட்டது. இருப்பினும் அவரை ஒதுக்கி வைக்காமல் ஒவ்வொரு தருணத்திலும் மறவாமல் அவரைக் குழுவில் இணைத்துக் கொண்டது பாராட்டத்தக்கது.
வெற்றிக் கோப்பை கிடைத்ததும் தங்களுக்கு முன்னால் பல வருடங்கள் சிரமப்பட்டு விளையாடித் தோற்ற மூத்த வீராங்கனை மிதிலா ராஜை அழைத்து தற்போதைய அணியின் தலைவி கௌரவப்படுத்தியதும் காண வேண்டிய காட்சியாக இருந்தது. கோப்பையைப் பெற்றதும் அணித்தலைவி ‘'சின் கால்களைத் தொட்டு வணங்கி பாரதப் பண்பாட்டைக் காட்டினார்.
முத்தாய்ப்பாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கிரிக்கெட் குழுவினர் உரையாடியது உலகையே வியக்க வைத்தது. பிரதமர் அவர்களை வெறுமனே பாராட்டி டீ பார்ட்டி கொடுத்திருந்தால் அது ஒரு கௌரவ நிகழ்ச்சியாக மட்டும் நின்றிருக்கும். அல்லது அவர் அவர்களிடம் பல அறிவுரைகள் வாரி வழங்கிவிட்டுச் சென்றிருக்கலாம்.
ஆனால் பிரதமர் அந்த வீராங்கனைகளின் அனுபவங்களைக் கேட்டு தெரிந்து கொள்வதில் ஆவல் காட்டியது அருமை. ஒவ்வொருவரையும் பேசவிட்டு, ஒவ்வொருவரிலும் விளங்கும் சிறந்த தனித்துவப் பண்புகளைச் சுட்டிக்காட்டியது அனைவரும் பின்பற்ற வேண்டிய பண்பாகும்.
வெற்றியின் ஊடே அடுத்த வெற்றிக்கு ஆயத்தமாகு!
உலகக்கோப்பை வெற்றி ஒரு காலகட்டத்திற்கான வெற்றியல்ல என்பதை அந்த வீராங்கனைகளுக்குப் பிரதமர் புரிய வைத்தார். இந்த வெற்றியை விட அவர்களை, அவர்களது மனநிலையை அடுத்த உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்வதில் அவரது கவனம் இருந்தது.
இந்த உலகக்கோப்பை வெற்றி நம் வீராங்கனைகளை வெற்றிக் களிப்பில், மிதப்பில், போதையில் தள்ளிவிடக் கூடாது; அவர்களது மேம்பட்ட மனநிலை நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதிலும் பிரதமர் கவனமாக இருந்தார். அதனால் அவர் வீராங்கனைகளிடம் அவர்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று இளம் உள்ளங்களை ஊக்கப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அதன்மூலம் மாணவ மாணவிகள் உற்சாகம் பெறுவார்கள். அதோடு உற்சாகம் வழங்கும் வீராங்கனைகளும் புது உற்சாகம் பெறுவீர்கள் என்றும் கூறினார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள Fit India Movement–க்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். அனைவரும் நோய்களிலிருந்து, குறிப்பாக உடல் பருமன் போன்றவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உதவும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார். இத்தகைய அனைத்தையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிட்டால், என்ன நடக்கும்?
வரலாறு படைக்க வரலாறு படிக்க வேண்டும்!
1983 ஜூன் 25-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா சக்திவாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்து கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. ஆனால் அதற்குப் பிறகு, 1984-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த அடுத்த ஒருநாள் தொடர் போட்டிகளில் இந்தியா 5–0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது.
2017-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. போட்டி முடிந்ததும் அந்த வீராங்கனைகள் மாண்புமிகு நரேந்திர மோடியைச் சந்தித்தனர். அனுதாப வார்த்தைகள் சொல்லாமல், அவர் அவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்.
“கடந்த தோல்வியை மறந்து, அடுத்த வெற்றிக்கான தயாரிப்பில் முழு ஆற்றலையும் செலுத்துங்கள்” என்று அவர் கூறினார்.
அந்த வார்த்தைகள் பல வீராங்கனைகளின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் புது உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் உழைத்தனர். பின்னர் அவர்கள் அந்தச் சந்திப்பை தற்போது நினைவு கூர்ந்தபோது, பிரதமர் அவர்களுக்கு ஒரு நிரந்தரமான உண்மையை நினைவூட்டினார்:
“இப்போதைய இந்தக் கணத்தில் வாழுங்கள் - அதுவே வெற்றியின் அடித்தளம்.”
இருளில் இருந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் வழிகாட்டும் ஒளியாயின. உண்மையான வெற்றியாளர்கள் கடந்ததை நினைத்து வருந்துவதில்லை, எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்; தோல்வியின் தீயிலிருந்து பிறந்த அந்த மனப்பாங்கே, பின்னர் அவர்களை ஒளிமயமான வெற்றிக்கு இட்டுச் சென்றது.
ஒரு பெரிய வெற்றி நிரந்தரமானது அல்ல; உண்மையில் முக்கியமானது வெற்றியாளரின் மனப்பாங்கை என்றும் தக்க வைத்துக்கொள்வதே -
“எழுந்திரு, விழித்திரு, இலக்கை எட்டும் வரை நிற்காமல் செல்” என்பது சுவாமி விவேகானந்தர் நமக்கு வழங்கும் உயிர்மூச்சு உபதேசம். ஆம், “தேங்கி நிற்காதே” என்ற அந்த வைர வரிகள் அனைவரின் இதயங்களில் என்றும் ஒலிக்கட்டும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
11.11.2025
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
