

பிளஸ் டூ படிக்கும் என் மகள் நான் பூஜை செய்வதை, விரதம் இருப்பதை, ஆச்சாரமாக நடந்து கொள்வதைக் கிண்டல் செய்கிறாள். என்னுடைய நம்பிக்கையை அவ்வப்போது குலைக்கிறாள்.
கோவிலுக்கு வர மாட்டேன் என்கிறாள். காலையில் குளித்து லட்சணமாக இருப்பதில்லை. பூஜையறையையே தேவையற்றதாக நினைக்கிறாள்.
கடவுள் கல்லிலும் மரத்திலும் மெட்டலிலும் இருப்பாரா என்று என்னை நக்கல் செய்கிறாள்.
நான் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சுவாமிஜி?

பதில்: குழந்தைகளின் 6-வது வயதில் தேசபக்தியைப் புரிய வைத்தால் அவன் தேசியவாதியாக மிளிர்வான்.
16-வது வயதில் தேசபக்தி, தெய்வ பக்தி போன்றவற்றைப் புரிய வைக்க முயன்றால் அதற்குள் அவன் மனதளவில் தீவிரவாதியாகவே மாறிவிடும் அவலத்தை நாம் இந்தக் காலத்தில் காண்கிறோம்.
தீவிரவாதி என்றால் துப்பாக்கி தூக்கினால் மட்டுமல்ல. குடும்ப வழக்கங்களை, சமுதாய நெறிமுறைகளை, நாட்டின் மீதுள்ள பற்று போன்றவற்றை ஏளனம் செய்வதும், கண்டனம் செய்வதும் தீவிரவாதத்தில் அடக்கம்.
அதனால் உங்கள் பெண்ணுக்கு மெல்ல மெல்ல புரிய வையுங்கள். முதலில் நீங்கள் நம்பும் தெய்வ பக்தி மற்றும் ஆச்சாரங்களைத் தைரியமாக நம்பிக்கையுடன் கடைப்பிடியுங்கள். அதன் மூலம் உங்களது சிரத்தையினாலும் வாழும்முறையினாலும் அவள் மீது செல்வாக்கு செலுத்த ஆரம்பியுங்கள்.
சிறுவயதிலேயே இதை நீங்கள் செய்திருந்தால் சுலபம். இப்போது செய்வதிலும் கடினம் பெரிதாக இல்லை.
கிரிக்கெட் வீரர் விராட்கோலி தனக்கு மிகவும் கைவந்த Straight Drive Shot -ஐ விளையாட முடியாமல் சமீபத்தில் தடுமாறினார். அப்போது அவர் தீவிரப் பயிற்சியுடன் பல்வேறு கோவில்களுக்குச் சென்றதையும்
பல சந்நியாசிகளைச் சந்தித்து மனோதிடம் பெற்றதையும் உலகம் அறியும்.
இது போன்ற விஷயங்களையும் நீங்களும் தெரிந்துகொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் கூறலாம்.
உங்களது மகளின் கிண்டலுக்குப் பயப்படாதீர்கள். ஏளனத்திற்கு அடிபணியாதீர்கள்.
அவளுக்கு அறியாமையில் அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்றால்.... உங்களுக்குச் சமயப் பற்றில் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்!

சின்ன அகங்காரத்தை நம்புபவளுக்கே இவ்வளவு தைரியம் வருகிறது என்றால்.... பெரும் கடவுளை வணங்கும் உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்!
ஓர் அருமையான சம்பவத்தைக் கேளுங்கள். உங்கள் மகள் போன்று மங்கள்சிங் என்ற அரசன் ஒருவர் இருந்தார். அவரும் மேலைநாட்டுக் கலாச்சாரம் மற்றும் குடி, கூத்து என்று அதிலேயே சிக்கித் தவித்தார். பாரதப் பண்பாட்டை இகழ்ந்தார். அவரைத் திருத்துவதற்காக மன்னரின் அமைச்சர்கள் சுவாமி விவேகானந்தரின் உதவியை நாடினார்கள்.
மன்னரும் சுவாமிஜியும் சந்தித்தனர். மன்னர் இந்து மதத்தின் மீதும் குறிப்பாக கல்லையும் மண்ணையும் வணங்கும் உருவம் வழிபாட்டை மலினமாகப் பேசினார். சுவாமிஜி அனைத்தையும் கேட்டுக் கொண்டார்.
முடிவில் அங்கு தொங்கப்பட்டிருந்த மங்கள்சிங்கின் ஓவியம் ஒன்றைப் பார்த்தார். அதை எடுக்கச் சொன்னார். அதன் மீது அங்கு இருந்தவர்களிடம் எச்சில் உமிழ சொன்னார். எல்லோரும் குலை நடுங்கிப் போனார்கள். அது எப்படி முடியும் சுவாமிஜி? இது எங்கள் மன்னர் அல்லவா என்று கேட்டார்கள்.
"அதுபோல்தான் உருவ வழிபாடும். எந்தப் பக்தனும் ஏ கல்லே, என்னைக் காப்பாற்று. ஏ மண்ணே, எனக்கு வேண்டியதைக் கொடு என்றெல்லாம் கேட்பதில்லை. கல்லாளோ அல்லது மரத்தாலோ எதனாலும் கடவுளின் திருவுருவம் அமைந்திருக்கலாம். ஆனால் நம்பிக்கை உள்ள பக்தன் அதனைக் கடவுளாகவே நம்புகிறான், காண்கிறான்" என்று கூறி மன்னரைத் திருத்தினார்.
மங்கள்சிங் அளவிற்கு உங்கள் மகள் மோசமாகி இருக்க மாட்டாள். தன்னம்பிக்கையுடனும் தெய்வ நம்பிக்கையுடனும் முயற்சி செய்யுங்களம்மா. நம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல மகளை வளர்த்துக் கொடுங்கள். அவளுக்காக நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்.
சுவாமி விமூர்த்தானந்தர்
29.06.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்