RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

இளைஞர் கேள்வி பதில் - 2

23.06.23 06:56 PM By thanjavur

கூகுள் வந்த பிறகு மாணவர்களாகிய எங்களுக்கு ஆசிரியர்கள் அவசியமா?

கேள்வி 2: பள்ளிகளில் நாங்கள் படிக்க வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. அதோடு, கூகுளில் தேடி நாங்களாகவே படித்துக் கொள்வோம். மிக முக்கிய உதவியாக எல்லா தகவல்களையும் நொடியில் தரும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது.

பதில்: தம்பி, உன் கேள்வி வாயால் கேட்பதை விட காதால் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. மாதா - பிதா - கூகுள் - தெய்வம் என்ற வரிசையில் நீ யோசிக்கிறாயோ? குருவிற்குப் பதிலாக கூகுளைப் போடுகிறாய், அப்படித்தானே?

    

நீ வளர்ந்தவுடன் தாய் தந்தையரை வேண்டாம் என்று ஒதுக்கினால் மேற்கொண்டு நீ வளர முடியுமா? மரத்தின் உச்சியில் உட்கார்ந்ததும் அடிமரத்தை வெட்ட ஆரம்பிப்பவனை நீ புத்திசாலி என்பாயா?

    

செயற்கை நுண்ணறிவு சிறப்பாக மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால் அதனை இயக்குபவர்கள் சிறந்த அறிவையும், பிறர் நலம் நாடும் செம்மையான மனதையும் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் செயற்கை நுண்ணறிவு தீயவர்களின், முட்டாள்களின் கைகளில் சிக்கிச் சீரழிந்து விடும். அதோடு, அது எல்லோருக்கும் ஆபத்தாகிவிடும்.

    

மேலும், நீ நினைப்பது போல், ஆசிரியர்கள் தகவல்களைப் புத்தகத்திலிருந்து மாணவனின் தலையில் ஏற்றும் பணியாளர்கள் அல்ல. உன் மூளைக்குள் செல்லும் கருத்து உன் மனதிற்கும் செல்ல வேண்டும். தகவல்கள் வாழ்க்கைக்கு ஏற்றதா? என்பதை எடுத்துச் சொல்பவர்கள் ஆசிரியர்கள். மக்கள் தரமாக வாழ்கிறார்களா அல்லது தரம் தாழ்கிறார்களா என்பதை ஆசிரியர்கள்தான் எடுத்துரைப்பார்கள். அவ்வாறு எடுத்துரைத்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.

    

உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆசிரியர்கள் விளக்கினால், உனது தகவலறிவு பயனுடையதான அறிவாக மாறும். அதைச் செய்பவர்கள் - செய்ய வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.

    

இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறந்த மாணவன் மாதா - பிதா - கூகுள் - குரு - தெய்வம் என்ற வரிசையில் தனக்குள்ள வாய்ப்புகளையும் அறிவியல் முன்னேற்றங்களையும் பயன்படுத்திக் கொள்வான். சுவாமி விவேகானந்தர் தேடும் அப்படிப்பட்ட இளைஞன் சமய அறிவையும் பெறுவான். விஞ்ஞானத் தேடலையும் கொண்டிருப்பான். இரண்டையும் நன்றாகக் கையாண்டு அவற்றை ஆன்மிக அனுபவ ஞானமாக மாற்றிக் கொள்வான்.

    

இன்னும் ஒன்று. ஆசிரியர்கள் மாணவர்களை நெறிப்படுத்துபவர்கள் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் முழு வளர்ச்சிக்கும் அவர்கள் முக்கிய காரணமாக இருப்பவர்கள்.

    

ஏகே 47 துப்பாக்கி மூலம் எப்படிச் சுடுவது என்பதை கூகுள் உனக்குக் காட்டலாம். ஆனால் தேசத் துரோகி யார், தீவிரவாதி யார் போன்றவற்றைத் தெரிந்து கொண்டு எவரைச் சுட வேண்டும் என்பதை ஆசிரியர் உனக்குக் கற்றுத் தர முடியும்.

    

கூகுள் உனக்குத் தருவது தகவலறிவு. குரு ஸ்தானத்தில் ஆசிரியர் வழங்குவது அனுபவ அறிவு. கூகுளிலேயே எவற்றைத் தேட வேண்டும் என்ற அடிப்படை அறிவைப் புகட்டுபவரும் ஆசிரியரே. அவ்வாறு சிறந்த ஆசிரியர்களிடம் பாடம் படித்த நல்ல மாணவர்கள்தாம் பிற்காலத்தில் கூகுளையே கண்டுபிடித்தனர்.

    

ஆசிரியர், வீட்டின் அஸ்திவாரம்! கூகுள், வீட்டிலிருக்கும் சொகுசு வசதிகள் போன்றது! பல்வேறு சிந்தனைகளையும் யோசனைகளையும் படங்களையும் காட்சிகளையும் கூகுள் உனக்குக் குவித்துத் தரலாம்.

    

ஆனால் மனதைக் குவிய வைத்து எதைச் சிந்திப்பது என்ற அடிப்படை அறிவை மனித நேயம் உள்ள ஆசிரியர்தான் வழங்க முடியும்.

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

23 ஜூன், 2023

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur