கேள்வி 18: இன்றைய வாலிபர்களின் நாக்கு பிரியாணி பொட்டலத்திற்கும் மது பாட்டிலுக்கும் அடிமை என்பது உண்மையா?இதற்கு முன் நம் நாட்டில் இந்த அவல நிலை இருந்ததா?மக்கள் திடீரென்று கெட்டுவிட்டார்களா?சமூக ஊடகங்களில் ஆளுக்கு ஆள்தங்கள் இஷ்டத்துக்கு நம் நாட்டைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்கள். அதை எல்லாம் கேட்டு நான் குழம்பித் தவிக்கிறேன், இதிலிருந்து விடுபட எனக்கு உதவுங்கள்.
பதில்: நம் இளைஞர்கள் கெட்டு விட்டார்கள் என்று லட்சம் பேர் கூறினாலும் நீ ஒருவன் இவ்வாறு கேள்வி கேட்பது சுவாமி விவேகானந்தரின் மனதை நிச்சயம் குளிர்விக்கச் செய்திருக்கும்.
இன்று பத்து லட்சம் இளைஞர்களைத் திரட்ட வேண்டும் என்றால் குறைந்தது 60 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருப்பதை நீ சென்ற மாதம் பத்திரிகையில் படித்திருப்பாய்.
பொட்டலம் + பாட்டில் = இன்றைய பையன் என்பது உண்மை போல் தோன்றலாம். உன்னைப் போன்று இளைஞர்கள் தைரியமாகச் சிந்திக்க ஆரம்பித்தால் இந்த முட்டாள்தனத்தை இன்றைய இளைஞர்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். அதற்கு நீ சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் ஒன்றை வலியுறுத்திக் கூறுவார்: நாம் நமது நாட்டின் பாரம்பரியப் பெருமையைப் புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தும்போது நமது நாட்டின் வளர்ச்சியை யாரும் தடை செய்ய முடியாது.
இளைஞன் தானாகக் கெடுவதில்லை. இளைஞர்களைக் கெடுப்பவர்கள் லட்சக்கணத்தில் திரிகிறார்கள்; அதற்காகக் கோடிக்கணக்கில் செலவும் செய்கிறார்கள்.
இன்று பிரியாணிக்கும் மதுவிற்கும் நம் இளைஞர்களை ஆட வைக்கிறார்கள். ஆனால் நமது முன்னோர்கள் இப்படி இருந்ததில்லை. விவசாயத்திற்கும் தெய்வீகத்திற்கும் முன்னுரிமை கொடுத்தது நம் இந்து சமுதாயம். அந்த இரண்டிற்கும் கவனம் தந்த வரை நமது உற்பத்தித் திறன், மனித வளம் போன்றவை உலக தரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தன.
மேலை நாடுகள் விவசாயத்தை அதிகம் நம்பவில்லை அல்லது அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. அதனால் விலங்குகளைக் கொன்று தங்கள் வயிற்றைச் சவக்கிடங்குகளாக ஆக்குகின்றனர். ஆனால் நம் நாட்டில் இன்றும் பெருமளவில் காய்கறிகளையே உண்கிறார்கள்.
அண்மையில் World Wildlife Fund (WWF) எனும் உலகளாவிய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பு, உணவுமுறைகள் மற்றும் அதன் காலநிலைத்தாக்கம் குறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றிய அறிக்கை.
இந்தியர்கள் உண்ணும் உணவுமுறையே உலகில் சிறந்ததாகவும் பூமிக்கும் உகந்ததாகவும் இருக்கிறது; அது தானியங்களை முக்கியமாக உண்ணும் இந்தியர்களின் சிறப்பான உணவு நுகர்வு முறையே மற்ற உலகின் பெரிய பொருளாதாரங்களின் (G20 நாடுகள்) உணவுமுறைகளை விட சிறந்தது; மேலும் புவியைப் பாதுகாப்பதிலும் அதன் உயிர்ச்சூழலை மிகவும் நிலையாகப் பேணுவதற்கும் உதவும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகின் பெரிய பொருளாதாரங்களில் நிலவும் தற்போதைய உணவு நுகர்வு முறையையே ஒவ்வொருவரும் தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் புவி மண்டலத்தை வெப்பப்படுத்தும் வாயுக்களின் (Greenhouse gases) உமிழ்வு இப்போதைய அளவைவிட 263% அதிகரிக்கும். இதனால், பூமியின் வெப்பநிலை அபாயகரமானதாக 1.5 செல்சியஸ்க்கு (நிர்ணயிக்கப்பட்ட சராசரி வெப்ப வரம்பு) மேல் அதிகரித்து உணவு உற்பத்தி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். அப்போது, நாமனைவருக்கும் உணவளிக்க இந்த ஒரு பூமியின் உணவு உற்பத்தி போதாது. நமது உணவுத் தேவையை ஈடு செய்ய ஏழு பூமிகளின் உற்பத்தி தேவைப்படும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும் இந்த அறிக்கை, வளர்ந்த நாடுகளின் தற்போதைய உணவுமுறையையே அனைவரும் தொடர்ந்தால், உணவு உற்பத்திக்கு எத்தனை பூமி(கள்) தேவைப்படும் எனவும் கணக்கிட்டுள்ளது.
அதன்படி, இந்திய உணவுமுறையை உலக மக்கள் ஏற்றுக்கொண்டால் 1 பூமியைவிட குறைவான அளவே போதும்;
சீனா, ஜப்பான் முறைகளுக்கு 1.8 அளவு பூமி போதும்;
அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளின் முறைகளுக்கு 5.5 மற்றும் 6.8 பூமிகள் தேவைப்படும் என்கிறது.
பூமியின் காலநிலைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத இந்தியாவின் உணவுமுறையை உலகின் எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்தினால், வளிமண்டலத்தில் மேற்கூறிய வாயுக்களின் உமிழ்வு வெகுவாகக் குறைக்கப்படும்.
இதனால், வெப்பநிலை அதிகரிக்காமல் ஒட்டுமொத்த பூமியும் பாதுகாக்கப்படும்போது 2050-ம் ஆண்டில் உணவு உற்பத்தி பெருகி உலகின் உணவுத் தேவையை நாம் நன்கு பூர்த்தி செய்யலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இவ்வாறு இந்தியர்களின் உணவுப் பழக்கமே பூமிக்கு ஏற்றது என்று WWF கூறும் இந்த அறிக்கை எதன் அடிப்படையில் வந்தது தெரியுமா?
நமது சனாதன தர்மத்தின் சீரிய, அனுபவமிக்க, காலத்தால் நிரூபிக்கப்பட்ட சில அடிப்படை சிந்தனைகளினால்தான் நமது பாரம்பரிய உணவு முறை இன்று பாருக்கே உத்தரவாதம் தருகிறது. அவை என்ன சிந்தனைகள் தெரியுமா? *பசித்துப் புசி *உயிர்கள் மீது ஜீவகாருண்யம்! *சாப்பிடுவதற்கு முன்பு அதற்கான தகுதி உனக்கு உள்ளதா என்று பார்.
* (உணவு) மிகினும் குறையினும் நோய் செய்யும்!
* பசித்தோர் முகம் பார்! - பட்டினத்தார்
* அறம் செய்ய விரும்பு! -ஔவையார்
* அன்னதானம் எல்லா தானங்களிலும் சிறந்தது.
* உன் மனதையும் உடலையும் மந்தமாக்கும் எதையும் உண்ணாதே.
* பெருந்தீனிப் பிரியனாக அலையாதே.
* எல்லா உயிர்களுக்கும் உணவு பொதுவானது.
* பிறருடன் பகிர்ந்து உண்.
* உழைத்து உண்!
* உன் கண் முன்னே எவனும் பட்டினி கிடக்கக் கூடாது
* "எனது நாட்டில் உணவில்லாமல் ஒரு நாய் இருந்தால்கூட அதற்கு உணவளிப்பதுதான் எனது சமயத்தின் முதல் வேலை" - சுவாமி விவேகானந்தர்.
இவ்வாறான தார்மீகமான, இயற்கையோடு இயைந்த சிந்தனைகளின் அடிப்படையில் நமது முன்னோர் உணவுப் பயிர்களை உற்பத்தி செய்தனர்; அவற்றைச் சமைத்தனர். அதனால் இயற்கையும் வளம் குன்றாமல் அள்ளி அள்ளித் தந்தது. இயற்கையின் அந்தப் பெரும் பண்பை நாம் அன்னலட்சுமி என்று கொண்டாடுகிறோம்.
அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தைச் சிதைப்பதற்கு மலினமான வெளிநாட்டு வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் வேற்று மத வியாபாரிகளும் நம் நாட்டைச் சூறையாடி வருகிறார்கள்.
இவற்றைப் புரிந்து கொண்டு சிங்கமென நீ நிமிர்ந்து நில். உண்மையான இளைஞர்கள் நம் ஊரில் உள்ளனர் என்று முழங்கு.
இதனைக் கேட்க
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
08.11.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்