RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

இளைஞர் கேள்வி பதில் - 11, 12, 13

06.04.24 08:08 PM By thanjavur

கேள்வி 11: நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுத்தாலும் இப்பவும் எனக்குப் பரீட்சை என்றாலே ஒருவித படபடப்பு வந்துவிடுகிறது. இதை எப்படித் தடுக்கலாம்? ஏதேனும் சுலோகம் இருந்தால் சொல்லித் தாருங்களேன்.

பதில்: நீ தேர்வு பயத்தை ஜெயிக்க ஒரு சுலோகம் சொல்கிறேன்.

அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடு. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப்படத்தின் முன் உட்கார். மனதை ஒருமுகப்படுத்து.

 

நீ சாதிக்கப் பிறந்தவள் என்பதை எப்போதும் நம்பு; நீ பலவீனமானவள் என்பதை ஒரு போதும் நம்பாதே!

 

இந்தச் சுலோகத்தைத் தெளிவாக உச்சரி. மனதால் உள்வாங்கு. அறிவால் உறுதிப்படுவாய். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் இந்த மேலான சிந்தனையை ஓது. முக்கியமாக, இரவில் படுக்கப் போகும் முன்பு இதனை உச்சரி. காலையில் நீ எழுவதற்கு முன்பே உனக்குள் உற்சாகம் எழுந்து விடும். அது உன்னுடனேயே தங்கிவிடும். வெற்றியாளர்களின் பெயர்களுள் விரைவில் உன் பெயரும் இடம் பெறும்.

கேள்வி 12: தேர்வுக்கூடத்திற்கு வெளியே இருந்த நான்தானா தேர்வுக்கூடத்தில் இருந்து தவிப்பது என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. இந்தப் பயத்தை நான் எப்படிச் சமாளிப்பது?

பதில்: பரீட்சை ஹால் செல்லும்போது நீ ஏன் தவிக்க வேண்டும்? தேர்வு எழுதுவதற்கு உன்னைத் தகுதி ஆக்கிக் கொண்டிருந்தால் உனக்குத் தளர்வு வராது. உனக்குப் பயத்தைத் தருவது ஹால் அல்ல; உனக்குள் இருக்கும் ஆள், அதாவது மனப்பக்குவம் அடைய வேண்டியது நீதான்.

 

பாடங்களை ஆர்வத்துடன் புரிந்து கொண்டு படி; படித்ததை உள்வாங்கு; அதைத் திரும்பத் திரும்ப மனனம் செய்; 9 மாதம் படித்ததை 3 மணி நேரத்திற்குள் எப்படி எழுதுவது என்பதற்குப் பயிற்சி செய்; தொடர்ந்து முயற்சி செய்.

 

உன் வீட்டில் ஹாலில் அமர்ந்து நீ படிக்கிறாய். அப்போது உனக்குத் தளர்வு வருவதாகக் கூறுவாய். ஆனால் அதே ஹாலில் அமர்ந்து நீ கிரிக்கெட் ஃபைனல் மேட்ச் பார்க்கும்போது உனக்கு உற்சாகம் பீறிட்டு வருகிறதே, அது எப்படி?

 

ஹால் மாறவில்லை, ஆள் மாற வேண்டிய நிலையை இது காட்டுகிறது. மேலே சொன்ன பயிற்சியையும் முயற்சியையும் செய். தேர்வுக்கூடத்திற்குத் துணிவுடன் சென்று வென்று வா.

கேள்வி 13: பரீட்சை ஹாலில் என்னைவிட பிறர் நன்கு எழுதும்போது பொறாமை வருகிறதே?

பதில்: ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். ஆம், உனக்குள் புகுவதற்குத் துடிக்கும் ஆமையை - அதாவது பொறாமையை நீ விரட்டியடி. நன்கு தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தால் ஆமை என்ற பொறாமை வரத்தான் செய்யும். அதை நீ இப்போதே கண்டுபிடித்து விட்டதால் அந்த ஆமை எருமை அளவிற்குப் பலம் பெறாது.

 

நீ ஏன் பிறரைப் பார்த்து உன் சொந்தத் திறமைகளைச் சிதைத்துக் கொள்கிறாய்? அதற்குப் பதிலாக,  உன்னையே நீ பார்க்கக் கற்றுக் கொள். உன்னால் எந்த அளவிற்குக் கவனமாகப் படித்து, நன்கு தேர்வு எழுத முடியும் என்பது உனக்கு விரைவில் புரியும்.

 

இயலாமை, முயலாமை என்ற இரண்டு ஆமைகள்தான் உன்னைப் படிப்பின் மீது ஒவ்வாமை என்ற நிலைக்குத் தள்ளுகின்றன.

 

இன்று நீ உனக்குள்ளே ஆமைகளை விட்டால் அவை முரடான எருமைகள் ஆவது உறுதி.

 

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

06 ஏப்ரல், 2023

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur