கேள்வி 10 : ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்று என்னுடைய ஆசிரியர் அடிக்கடி கூறுகிறார். அதன் பொருள் என்ன? - செல்வன். ஆதித்யன், பழையாறை.
கேள்வி 10 : ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்று என்னுடைய ஆசிரியர் அடிக்கடி கூறுகிறார். அதன் பொருள் என்ன? - செல்வன். ஆதித்யன், பழையாறை.

பதில்: இந்த வாக்கியம் யாரோ ஆரம்பத்தில் தவறாகப் படித்து, அந்தத் தவறே தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது என்று தோன்றுகிறது. சரியாகப் படிக்கத் தெரியாத ஒருவனும், எழுதத் தெரியாத இன்னொருவனும் சேர்ந்து ஒரு பாட்டைக் கெடுத்து இருக்கலாம்.
பிரபஞ்சத்தில் பரவியிருந்த மகாபாரத சம்பவங்களையும் கருத்துகளையும் வியாச மகரிஷி தியானத்தின் மூலம் தமது மனக்கண்ணில் கண்டார். அதைப் பாட்டாக வடித்தார். அதனை விநாயகர் ஒழுங்குபடுத்தி நாம் வாசிப்பதற்காக ஏட்டில் எழுதிக் கொடுத்தார்.
கொடுத்தார் என்பது கெடுத்தார் என்று தவறாகச் சொல்லப்பட்டு விட்டது.
ஒருவர் சிறுவயதிலிருந்து எதையும் கவனமாகப் படிக்க மாட்டார். அவர் பிற்காலத்தில் தமிழ் ஆசிரியராக மாறியது பெரிய துரதிர்ஷ்டம். அவர் தன் மாணவர்களுக்கு திருக்குறளை எப்படி நடத்தினார் தெரியுமா?
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். - குறள் 131
இதில் வரும் ஒழுக்கம் விழுப்பம் தரலான் அதாவது ஒழுக்கம் மேன்மையைத் தரும் என்பதைக் கவனிக்காமல் தரலான் என்பதைத் ‘தரலாம்’ என்று படித்தார். அதையே மாணவர்களுக்குப் போதித்தார். திருக்குறளைச் சரியாக வாசிக்காத அவரது மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கமான வாழ்க்கை மேன்மையைத் தரலாம், தராமலும் போகலாம் என்று அவர்கள் புரிந்து கொண்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்.
ஆழமாகப் படித்த வியாச பகவான் பாட்டைக் கொடுத்தார்; துரிதமாகவும் துல்லியமாகவும் எழுதிக் கொண்ட விநாயகர் பெருமான் ஏட்டைக் கொடுத்தார். இவ்வாறுதான் நாம் இந்த வாக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனைக் கேட்க
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
07 டிசம்பர், 2023
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்