RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

இளைஞர் கேள்வி பதில் - 1

22.06.23 06:07 PM By thanjavur

இந்து புராணங்களை இந்து இளைஞர்கள் நம்புகிறார்களா?

கேள்வி : இந்து புராணங்களில் வரும் ரிஷிகளும் முனிவர்களும் நடந்ததையும் நடக்கப் போவதையும் சொல்வதாக சினிமாக்களிலும் டிவியிலும் பார்க்கிறோம். இது வேடிக்கையாக இல்லை? இதெல்லாம் நம்ப முடியாதே என்று என்னுடைய மூளை கூறுகிறது?

பதில் : இஸ்லாமியர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கிறிஸ்தவ இளைஞர்கள் கிறிஸ்தவத்தைப் பரப்புகிறார்கள்.

 

பாமரத்தனமாக இருக்கும் இந்து இளைஞர்கள் செக்யூலரிசத்தை- மதச்சார்பின்மையைத் தலை மேல் தூக்கி கூத்தடிக்கிறார்கள். அதன் விளைவுதான் இது போன்ற கேள்விகள்.

 

இது போன்று கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது எங்களுக்கும் வேடிக்கையாக இருக்கிறது.

தம்பி, உன் மூளை சரியாகத்தான், சரியான இடத்தில்தான் இந்தச் சந்தேகத்தைக் கேட்டிருக்கிறது.

 

இதே கேள்வியை நாத்திகப் போர்வையில் அலைபவர்களிடமும் இந்து மதமாற்றக் கும்பலிடமும் கேட்டிருந்தாலும் அவர்கள் உன்னைக் குழப்பிவிடுவார்கள். நீயும் பாமரத்தனமாக இந்து மதத்தைக் குறை கூறும் கோமாளியாகி இருப்பாய்.

 

உன் மூளை செயற்கை நுண்ணறிவைச் (Artificial Intelligence) சர்வ சாதாரணமாக நம்புகிறது. அது சம்பந்தமாக நீ எதையும் சோதித்துப் பார்த்ததில்லை. கேள்வியும் கேட்டதில்லை. ஆழமாகப் படித்திருக்கவும் மாட்டாய். ஆனாலும் செயற்கை நுண்ணறிவை எந்தச் சந்தேகமும் இன்றி நம்புகிறாய்.

 

இந்து சமயத்தை அறியாத மீசை முளைத்த சிறுவர்கள் கூறுவது போல், நமது ரிஷிகளும் முனிவர்களும் குறி சொல்பவர்கள் அல்லர். அவர்கள் அண்டத்தில் உள்ள அற்புதங்களைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்ளும் ஆன்மிக அறிவியல் அறிஞர்கள். தங்களது மனதை ஒருமுகப்படுத்தி பிராண சக்தியினால் அமானுஷ்ய சக்திகளையும் பரஞானத்தையும் பெற்றவர்கள். அவ்வாறு பெறுவது இயற்கை நுண்ணறிவு (Organic Intelligence) எனலாம்.

 

இதனை சுவாமி விவேகானந்தர், ஒவ்வோர் ஆன்மாவிலும் அளவற்ற சக்தி உள்ளது. இந்தச் சக்தியை வெளிப்படுத்துவதுதான் மனிதன் செய்ய வேண்டியது என்று உரைத்தார்.

 

நீ கேட்கலாம். அந்த ரிஷிகள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எவ்வாறு எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள் என்று?

 

சிறு உதாரணம். ஒரு கம்பெனியில் எல்லா இடங்களிலும் நடப்பவற்றை, அதன் உயர் அதிகாரி தனது அறையில் இருந்தே சிசிடிவி மூலம் பார்த்துவிட முடியும்.

இன்று செயற்கைக் கோள்கள் மூலம் உலகச் சம்பவங்களின் live telecast, spy satellite மூலம் பூமியிலுள்ள ஒவ்வொன்றின் இருப்பையும் அசைவுகளையும் காண முடிகிறது.

 

அதுபோல் ரிஷிகளின் மனம் பேராசை, பொறாமை, அறியாமை, அவநம்பிக்கை போன்றவை இல்லாமல் தூய்மையாகவும் திடமாகவும் உயர் உணர்வு தளங்களில் இயங்குவதால் அவர்களுடைய மனங்களுக்கு அருமையான ஆற்றல்கள் கிடைக்கின்றன.

 

நம் காலத்தில் பொறுமையாக கவனிக்காமல் அவசரமாகச் சந்தேகப்படுபவர்களுக்குக் கவனச் சிதறல்கள் மிக அதிகம்.

 

இளைஞனே, உன் கவனத்தை ஒருமுகப்படுத்திப் பார், நீயும் ஒரு ரிஷி ஆவாய்.

இதனை கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

22 ஜூன், 2023

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur