



சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களையும் ஆச்சாரியர்களாகவே, குருமார்களாகவே கண்டது, போற்றியது.
ஆச்சாரியர்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்கள். சமுதாய வளர்ச்சியோடு சமய வளர்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி விவேகானந்தர் "ஆன்மீக மனிதர் ஆவதற்கு முன்பு ஜென்டில்மேன் ஆக மாறு" என்பார்.
கற்றறிந்த, மக்கள் சேவையில் ஈடுபடும் மேன்மக்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பது நம் நாட்டின் பன்னெடுங்காலத்துப் பாரம்பரியம். ஆசிரியர் இந்த உலகைப் பற்றிய அறிவியல் அறிவைத் தருவார். இந்த உலகில் நன்கு வாழ்ந்து மறு உலகிற்கு நம்மைத் தயார்படுத்துவர் ஆச்சாரியர் ஆவார்.
ஆனால் காலம் செல்லச் செல்ல ஆசிரியர்கள் மீதான கவனத்தை நம் சமூகம் குறைத்துக் கொண்டது. ஆசிரியர்களும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டு வளர்த்துக் கொள்ளாததால், பிறரும் அவர்களைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆசிரியப் பணி அறப்பணி; ஆர்வப் பணி; அதற்கே உன்னை அர்ப்பணி என்பதெல்லாம் மேடை வார்த்தைகளாகிவிட்டன.
ஆசிரியர்களை மதிக்கிற சமூகம் முன்னேறாமல் இருந்ததே கிடையாது. ஜப்பானின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்குள்ளது என்பதை அந்த நாட்டின் 52% மக்கள் நம்புகிறார்கள், அதனால் ஆசிரியர்கள் அங்கு போற்றப்படுகிறார்கள்.
மாணவர்களை முன்னேற்றும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஈ போன்ற ஆசிரியர்கள்
ஈக்கள் சுறுசுறுப்பானவை. அது நல்லது - கெட்டதிலும் அமரும். வாசனையும் நாற்றமும் ஒன்றுதான் அதற்கு. அருந்த வேண்டியதும் அழுகியதும் அதற்குச் சமம். பழமும் மலமும் ஒன்றுதான்.
சுறுசுறுப்புடன் மேற்கூறிய குணங்களுடன் நல்லது, கெட்டது அறிந்த ஆசிரிய வேலை செய்பவர்கள் பலர் உண்டு. நல்ல இடத்தில் நல்லவர்கள் போல் பாசாங்கு செய்வார்கள்; மோசமான இடத்தில் மோசமாக்கி விடுவார்கள்.
ஈ வகை ஆசிரியர்களுக்குக் கற்க வரும்; கற்பிக்க அவ்வளவாக வருவதில்லை. படிப்பார்கள், மாணவனைப் படிக்க வைக்க அவர்களால் முடிவதில்லை; தகவல்களைத் திரட்ட முடியும்; ஆனால் மாணவனின் மனதைத் தொட முடிவதில்லை.
ஆசிரியப் பணியின் மேன்மையை அறியாத இப்படிப்பட்டவர்களால்தான் நுட்பமான மாணவர்களை உருவாக்க முடியாமல் போய்விடுகிறது. இது போன்ற ஏட்டுச் சுரைக்காய் ஆசிரியர்கள் படித்திருந்தும் தகுதி பெறாமல் போய்விடுகிறார்கள். சமைக்கத் தெரிந்தவர்கள் பலருக்கும் பரிமாறத் தெரிவதில்லை.
சுவாமி விவேகானந்தர் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது ஒரு சம்ஸ்கிருத இலக்கண பண்டிதரைச் சந்தித்தார். அவரிடம் வடமொழி இலக்கணம் கற்க விரும்பினார். அந்தப் பண்டிதர் மூன்று தினங்கள் ஒரே சூத்திரத்தைப் பற்றி விளக்கிக் கூறியும் சுவாமிஜியால் அதனைக் கற்க முடியவில்லை.
மகாமேதாவியான சுவாமிஜி பிறகு அரை மணி நேரத்தில் அதைத் தாமே கற்று அந்தப் பண்டிதரிடமே விளக்கிக் கூறினார். அதைக் கேட்டு பண்டிதரே வியந்தார்.
மாணவரிடம் எந்த ஈர்ப்பும் கவனமும் தாக்கமும் ஏற்படுத்தாத இது போன்ற ஆசிரியர்கள் கோடிக்கணக்கில் குவிந்துள்ளார்கள். தங்களுக்கென்று தனித்தன்மையில்லாதவர்களால், மாணவர்களின் தனித்தன்மையைக் கண்டறிய முடியாது. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் ஈக்களைப் போல் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கொசு போன்ற ஆசிரியர்கள்
இரண்டாம் வகை, இன்று சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளனர். கொசு நமது ரத்தத்தை உறிஞ்சி, தன்னிடம் உள்ள கிருமிகள் நிறைந்த நோயுள்ள ரத்தத்தை நமக்குள் புகுத்திவிடும்.
ஆசிரியர்கள், மாணவர்களின் மனங்களில் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்த வேண்டியவர்கள் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் இன்று மனிதன் அதிருப்தியில் இருக்கிறான். அதற்குக் காரணம் அவனது சுயநலம் மிகுந்த வாழ்க்கை. சுயநலம், சாமானியனைக்கூட சாத்தானாக்கி விடுகிறது.
எழுச்சியூட்ட வேண்டிய பல ஆசிரியர்களும் தங்களது அமைதியின்மையை, குழப்பங்களை மாணவ மனங்களில் நஞ்சு போல் செலுத்துகின்றனர்.
உனக்கெல்லாம் எங்கே படிப்பு வரப் போகிறது! என்று ஆரம்பித்து உன் ஜாதிக்காரன் எவன் உருப்பட்டான்? நீ இந்து மதத்தில் இருக்கும் வரை முன்னேற முடியாது போன்ற மலேரியா நோய் ரத்தங்களைப் பல ஆசிரியர்களே பள்ளிகளில் மாணவர்களிடம் பரப்புகிறார்கள். இன்று இந்த அவல நிலை எண்ணற்ற பள்ளிகளிலும் ஊடுருவிவிட்டது. பல தனியார் பள்ளிகளிலும் இந்த ‘ஊழியம்’ பார்ப்பவர்கள் தனி சம்பளமே பார்க்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு வீடியோ வெளிவந்தது. ஓர் ஆசிரியை தாஜ்மஹால் தஞ்சாவூரில் இருக்கிறது என்று தன் மாணவிக்குத் தவறாகப் போதிக்கிறார். அந்த மாணவி தன் அம்மாவிடம் சென்று முறையிடுகிறார். மாணவியின் தாய் பள்ளி முதல்வரிடம் வந்து உங்கள் ஆசிரியை தப்பாகப் பாடம் நடத்துகிறார் என்று கூறுகிறார்.
அதைக் கேட்ட பள்ளி முதல்வர், "உங்கள் மகளுக்கான பீஸ் கேட்டு உங்களைப் பலமுறை தொலைபேசியில் அழைத்தோம். செய்தி அனுப்பினோம். நீங்கள் வரவில்லை. அதனால்தான் உங்கள் மகளுக்கு அப்படி பாடம் நடத்தினோம். நீங்கள் பீஸ் கட்டாத வரை உங்கள் மகளுக்கு மட்டும் தாஜ்மஹால் தஞ்சாவூரில்தான் இருக்கும்" என்று முடிப்பார்.
சுவாமி விவேகானந்தர் ஆசிரியர்களுக்கான இரண்டு கடமைகளைக் கூறுகிறார். ஒன்று, மாணவனுக்குப் படிப்பதில் ஆர்வத்தைப் பெருக்க வேண்டும். அடுத்தது, அவனது மனதில் உள்ள தடைகளையும் தயக்கங்களையும் நீக்க வேண்டும்.
இந்த இரண்டு முக்கிய அம்சங்களையும் ஆசிரியர் அறிந்து கொண்டு கடைப்பிடித்தால் மாணவர்கள் படிப்பிற்கு வசப்படுவார்கள். ஆனால் இதைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் பல ஆசிரியர்கள், இளம் மாணவ மனங்களில் அவநம்பிக்கையை, அலட்சியத்தை, அதைரியத்தைப் புகுத்துகிறார்கள். அவர்கள் நாட்டைப் பற்றிய பெருமிதத்தைக் கூறாமல், எதிர்மறை சிந்தனைகள், ஜாதி வெறுப்பு, மதமாற்றம் போன்ற மலினமான செயல்களில் ஈடுபட்டு சமுதாய நோய்க்கிருமிகளை மாணவ சமூகத்தில் பரப்புகிறார்கள். நோய் பரப்பும் இது போன்ற கொசு ஆசிரியர்களை அனைவரும் சேர்ந்து 'ஆல் அவுட்' ஆக்க வேண்டும்.
தேனீ போன்ற ஆசிரியர்கள்
தேனீக்கள் உறிஞ்சுவதால்தான் மலர்களுக்கே தங்களின் தேன் மதிப்புள்ளது என்பது புரிகிறது போலும்.
மாணவன் ஒரு மலர். மலரின் தேன் எனப்படுவது மாணவனின் திறமை மற்றும் ஒழுக்கத்திற்குச் சமம். மலர்களின் தேனைத் தேனீக்கள் எடுப்பது போல், மாணவர்களிடத்தில் உள்ள திறமைகளை ஆசிரியர்கள் தட்டி எழுப்புகிறார்கள். தேனீக்கள் போன்ற ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில், நேரங்களில் சேகரித்த அறிவை மாணவர்களிடத்தில் செலுத்துகிறார்கள். அதன் மூலமாக அறிவுப் பெருக்கம் என்ற மகரந்தச் சேர்க்கை மாணவர்களிடத்தில் நிகழ்வதற்குக் காரணமாக இருப்பார்கள்.
வாழ்க்கையைப் பற்றிய உயர் தேடல் உள்ள ஆசிரியர்கள் நல்லவற்றைத் தேடித் தேடித் தங்கள் மாணவர்களிடம் முதலீடு செய்கிறார்கள். முடிவில் தாங்களே ஒரு தேன்கூடாக - அறிவுக்களஞ்சியமாக - மாறி விடுவார்கள். அதோடு மாணவர்களையும் ஒரு தேன்கூடாக - அறிவுத் தாகம் கொண்டவர்களாக மாற்றி விடுவார்கள். இவர்களே சுவாமி விவேகானந்தர் எதிர்பார்த்த உண்மையான மனிதனை உருவாக்கும், நாட்டை நிர்மாணம் செய்யும் ஆசிரியர்கள் ஆவர்.
ஆசிரியரின் கடமையாக சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திக் கூறுகிறார்:
"வேதாந்தத்தின்படி, மனிதனின் உள்ளேயே எல்லா அறிவும் உள்ளன. ஒரு சிறுவனிடம்கூட அது உள்ளது. அந்த அறிவினை விழிப்புணர்த்த வேண்டும். இதுவே ஆசிரியரின் கடமை. சொந்த அறிவைப் பயன்படுத்திக் கை, கால் கண், செவி முதலியவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைச் சிறுவர்களுக்குக் கற்பித்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்".
இவ்வாறு சமுதாயத்தைச் சீர்செய்ய வேண்டிய ஆசிரியர் சமூகத்தில் இன்று சுயநல ஈக்களும், விஷநோய்களைப் பரப்பும் சமுதாய சீர்கேடுகளான கொசுக்களும் மலிந்திருக்கிறார்கள்.
இந்த ஈக்களையும் கொசுக்களையும் விரட்டியடிக்க வேண்டிய உன்னத பணியும் தேனீக்களான நல்லாசிரியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. தேனீக்கள் தெளிவாகவும் தைரியமாகவும் துல்லியமாகவும் இருந்தால் ஈக்களும் கொசுக்களும் விரைவில் நலிந்து விடும்.
அதற்கு ஆசிரியர்கள் தாங்கள் மற்றவர்களைப் போன்ற வேலைக்காரர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் ஏன், உலக நலனுக்காகவும் பாடுபடும் பணியாளர்களை உருவாக்கும் புனிதர்கள் தாங்கள் என்பதை ஆசிரியர்கள் நம்ப வேண்டும்; மாணவர்களை அவ்வாறே தயார் செய்ய வேண்டும்.
ஆம், ஆசிரியர்கள் ஆச்சாரியார்களே, அதாவது குருமார்கள் என்பதை உணரும் அக்கணமே மாணவ சமுதாயம் மலரும்; நாட்டில் நல்லவை நிலைக்கும்.