RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோவில்

10.12.24 07:43 PM By thanjavur

108 திவ்ய தேசங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோமலவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோவில் 12-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. 

 

பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் கருவறையில் கோமளவல்லி தாயார் மற்றும் மகாலட்சுமியுடன் சாரங்கபாணி பெருமாள் அருள்பாலிக்கிறார். நாபியில் பிரம்மதேவர், தலைப் பகுதியில் சூரிய பகவான் உள்ளனர். கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

 

மகாவிஷ்ணுவைச் சந்திப்பதற்காக வைகுண்ட சென்ற பிருகு முனிவரை பெருமாள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், கோபமடைந்த பிருகு முனிவர் திருமாலின் திருமார்பில் காலால் உதைத்தார். இருந்தும் பிருகு முனிவர் மீது பெருமாள் கோபம் கொள்ளவில்லை. ஆனால் திருமாலின் மார்பில் தான் வசிப்பது தெரிந்தும் தன்னை அவமதித்தது தெரிந்தும் திருமால், முனிவர் மீது கோபம் கொள்ளாமல் இருந்ததைக் கண்டு கோபமடைந்த திருமகள் வைகுண்டத்தை விட்டு சென்று விட்டாள். 

 

பூலோகத்தில் பத்மாவதியாக பிறந்த மகாலட்சுமியை, ஸ்ரீநிவாசனாகச் சென்று கரம் பிடித்தார் திருமால். ஆனால் வைகுண்டத்திற்கு வந்ததும் பழைய நினைவுகள் மகாலட்சுமிக்கு மீண்டும் வந்ததால், தனது கோபம் தணியாமல் இருந்தார். அவரின் கோபத்திலிருந்து தப்பிக்க பெருமாள், பாதாள சீனிவாசராக பூமிக்கு அடியில் சென்று மறைந்து கொண்டார். 

 

அதே சமயம், தனது தவறுக்காக மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட பிருகு முனிவர், அடுத்த பிறவியில் மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்று அடுத்த பிறவியில், ஹேம மகரிஷி என் பெயரில் பிறந்த பிருகு முனிவருக்கு, பொற்றாமரைக் குளத்தின் அருகில் குழந்தையாகக் கிடைத்தார் மகாலட்சுமி.

 

ஆயிரம் இதழ் கொண்ட பெற்றாமரை குளத்தின் அருகில் கண்டெடுக்கப்பட்டதால் கோமலவல்லி என்று பெயர் சூட்டினர். திருமால், ஆராவமுதன் என்ற திருநாமத்துடன் யானைகள், குதிரைகள் பூட்டிய தேரில் வைகுண்டத்தில் இருந்து வந்து தாயாரைத் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது. 

 

சோமேஸ்வரம் கோவில் அருகே தங்கிய திருமால், மகாலட்சுமியைச் சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டார். கையில் சாரங்கம் என்னும் வில்லினை ஏந்தி வந்ததால் இவருக்கு சாரங்கபாணி (சாரங்கம்- விஷ்ணுவின் வில்; பாணி- கை) என்ற பெயர் உண்டாயிற்று.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோவில்

கோயிலின் மைய ஆலயம் குதிரைகள் மற்றும் யானைகளால் வரையப்பட்ட தேரின் வடிவத்தில் உள்ளது. இது, இருபுறமும் திறப்புகளுடன், தேரில் சொர்க்கத்தில் இருந்து சாரங்கபாணி இறங்குவதைக் காட்டுகிறது.

 

மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது. 

 

கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு சாரங்கபாணி தலையைத் தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். 

 

கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சிணாயன வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்குத் திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.

 

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் இக்கோவில் மிகப் பழமை வாய்ந்ததாகும். கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், மண்டபங்கள், ராஜ கோபுரங்கள், சோழர்களால் கட்டப்பட்டுள்ளன.

 

கோவிலின் ராஜகோபுரம் 11 நிலைகளுடன், 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. மேலும் 5 சிறிய கோபுரங்கள் உள்ளன. பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் உத்தான சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். முழுமையாக பள்ளிகொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை ‘உத்தான சயனம்’ என்பர். 

 

சாரங்கபாணி பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரே இத்தலத்துக்கு வந்ததால், இவரை வணங்கினால் முக்தி கிடைக்கும். அதனால் இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இத்தலத்தில் உள்ள உத்தராயண, தட்சிணாயண வாசலைக் கடந்து சென்றால் பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

 

திவ்யதேசங்களில் மூலவர் மட்டுமே பிரதானம் பெற்றிருப்பார். அவருக்கே பூஜையின்போது அனைத்து அலங்காரங்களும் செய்யப்படும். ஆனால் இக்கோயிலில் உற்சவருக்கு, மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது. அதாவது உற்சவர் மூலவரின் பொறுப்பில் இருந்து, உபயமாக (அவருக்கு பதிலாக) செயல்படுபவராக இருக்கிறார். எனவே இத்தலம், “உபய பிரதான திவ்யதேசம்’ எனப்படுகிறது.

 

வில்லுடன் பெருமாள்: பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். 

 

கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.

 

தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும் என்பது பொதுவான அம்சமானாலும், இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்குச் சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும்போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோயிலில் கோமலவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர்.

 

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன்: லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டியவரும் இவரே. அவருக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்குத் தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. 

 

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன் பக்தனுக்கு ஈமக்கிரியை செய்து வைத்து கருணைக்கடலாக விளங்கினார். 

 

தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது.

 

மறைந்து போயிருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ஸ்ரீ நாதமுனிகள் இந்தத் தலத்தின் பெருமாளை வேண்டி, அவரது அருளால் பிரபந்தங்களை மீட்டெடுத்தார்.

 

thanjavur