கேள்வி: சில நேரங்களில் நாம் செய்வதெல்லாம் தவறாகிறது. நல்ல எண்ணத்துடன் பிறருக்கு நல்லது செய்தாலும் அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அல்லது தவறாகப் போய்விடுகிறது. எதைத் தொட்டாலும் நஷ்டம், கஷ்டம். எப்படியாவது அவப்பெயர் வந்து தொலைகிறது. இது போன்ற சமயங்களில் எவ்வாறு ஒருவர் நடந்து கொள்ள வேண்டும்? - செல்வி கவிதா லட்சுமி, ஒக்ளோஹோமா, அமெரிக்கா.
பதில்: தோல்விகளைச் சவால்களாக மாற்றும் ஒருவர் சிக்கலான சமயங்களில் என்ன செய்வார், தெரியுமா?
ஓர் உதாரணம். கணினிகளில் சில நேரங்களில் சிஸ்டம் hang ஆகி முறையாக வேலை செய்யாது. நாம் ஒன்றைத் தட்டினால் அதில் வேறு ஏதாவது வரும். அது போன்ற சமயங்களில் Control -Alt -Delete செய்து Restart செய்வார்கள்.
நமது வாழ்க்கையிலும் சில நேரங்களில் எல்லாம் தாறுமாறாகப் போகலாம். சுற்றி நடப்பதெல்லாம் ஏறுமாறாக, தவறுதலாக, பிரச்னையாக, உங்களுக்கு எதிராகப் போனால் உடனே, அப்போது செய்ய வேண்டுவது இது:
Control yourself,
Hold on to the Almighty,
Delete whatever comes and
Restart the system
1. எல்லாம் இறைவன் விருப்பப்படி நடக்கட்டும் என்று எண்ணி அமைதியாக இருக்க முயலுங்கள். நீங்கள் நினைப்பதைவிட வேறு வகையில் நல்லதாக நடக்கப் போகிறது என்று சமாதானம் பெறுங்கள்.
மனதைக் குதிக்க அல்லது கொதிக்கச் செய்யும் உங்களது அகங்காரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் - Control yourself. பல சமயங்களில் பிரச்னையைப் பற்றிய நமது தவறான புரிதலே பிரச்னைக்கு மூலகாரணமாகிறது.
2. சிக்கலான சூழ்நிலையைச் சரியாகச் சமாளிக்க இறைவனிடம் வேண்டுங்கள் - Hold on to the Almighty.
3. அந்த நேரத்தில் உங்களைப் பற்றி யார் விமர்சித்தாலும் அவற்றை உங்கள் மனதிற்குக் கொண்டு சென்று சிரமப்படாதீர்கள். வீண் விமர்சனங்களை மனதில் ஏற்றி நீங்களும் சிரமப்பட்டுப் பிறரையும் சிரமப்படுத்தாதீர்கள்.
அதோடு, உங்களுக்குள் வரும் குழப்பங்களையும் உங்கள் மனதில் பதிவு செய்யாமல் டெலிட் செய்யுங்கள் - Delete whatever comes.
குழப்பமான சூழ்நிலையில் இந்த மூன்றையும் ஒருவர் செய்யும்போது விரைவில் அவர் தமது பழைய நல்ல நிலைக்குத் திரும்பிவிடுவார். இதனால்தான் இந்த மூன்று தீர்வுகளையும் மதிக்கும் வகையில் three fingers salute or solution என்று கணினி உலகம் கூறுகிறது.
சுவாமி விமூர்த்தானந்தர்
21 November, 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்