கற்றதன்படி நிற்பதா? கல்வியை விற்பதா?
கற்றதன்படி நிற்பதா? கல்வியை விற்பதா?
கேள்வி:
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்றார் திருவள்ளுவர். கசடுடன் கல்வி கற்றால் என்ன ஆகும்?
- திரு. செந்தூரன், நீடாமங்கலம்.
பதில்: சிறந்த கல்வியால் மனித மனங்களில் வரும் வீண் கோபம், பேராசை, பொறுப்பின்மை, வஞ்சகம், சூது போன்ற கசடுகள் அகற்றப்படும்.
அதேபோல் சமுதாயத்தில் உள்ள கசடுகளான
வேலையில்லாத் திண்டாட்டம்,
வேலை செய்யத் தெரியாத திண்டாட்டம்,
ஊழியர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கத் தெரியாத திண்டாட்டம், மற்றும் வறுமை, லஞ்சம், ஊழல், மதவெறி, ஜாதிவெறி போன்ற கசடுகளும் சிறந்த கல்வியினால் நீக்கப்படும்.
மாணவனின் திறமைகளை வளர்த்து அவனைப் பெருந்தன்மை படைத்தவனாகச் சமைப்பதே சுவாமி விவேகானந்தர் வழங்கும் கல்வி.
இந்த அருமையான படத்தினைப் பாருங்கள். எந்த மூன்று முக்கிய பண்புகள் மாணவனுக்குத் தேவையோ, அவை என்ன ஆகின்றன என்று கவனியுங்கள்.
கசடுகளை நீக்கும் கல்வியைக் கற்றால், அக்கல்வி கற்றுத் தந்த உயர் நோக்கங்களால் நிற்போம், நெஞ்சை நிமிர்த்தி.
அது நடக்காமல் போனால்.....?
கசடுகளுடன் கற்றால், கல்வியையே விற்போம், வாங்குபவரின் வசதிக்குத் தக்கபடி!
அதுதான் இப்போது நடக்கிறது!
சுவாமி விமூர்த்தானந்தர்
02 அக்டோபர், 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்