RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 37

30.09.22 01:26 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 37

கேள்வி: சிவபெருமான் தாயுமானவர் ஆனார் என்று படித்தேன். ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாற முடியுமா? எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். 

- திரு. செபாஸ்டியன், மதுரை.

பதில்: சிவபெருமான் தாயுமானவர் ஆன வரலாற்றைப் பக்தி மிக்க ஓர் இந்துவிடம் கேளுங்கள், அவர் தெளிவிப்பார் அல்லது கூகுள் பாபாவே உங்களுக்குப் புரிய வைத்து விடுவார்.

                                                                

சிவபெருமான் தாயானது இருக்கட்டும். சிவாம்சம் மிக்கவர் என்று ஸ்ரீ ராமகிருஷ்ணராலேயே காட்டப்பட்ட சுவாமி விவேகானந்தர் தாயுமானவராக மாறினாரே! உடலால் அல்ல, மனதால், சிந்தனையால், பரிவால், தேசபக்தியால் சுவாமிஜி தாயானது குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியல்ல, இந்திய வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய பதிவு அது.

                                                                

நமது நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு அடிமை நாடு என்று உலக அரங்கில் ஒதுக்கப்பட்டது. இன்று தேசபக்தியற்ற மீடியா பேர்வழிகள் உளறுவது போல், அன்றும் பல ஆங்கிலேயர்கள் மற்றும் ஆங்கிலம் படித்த நமது அறிவிலிகள் நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசிய காலம் அது.

                                                                

பலவீனமான அந்தக் காலகட்டத்தில் 1893- இல், சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் தன்னம்பிக்கைத் தங்கமாக ஒளிர்ந்தார். அந்தச் சமய மாநாட்டில் உலக சமயங்கள் அனைத்திற்கும் தாய்மதமாக இந்து மதம் விளங்குவதை உணர்த்தினார்; பாரதப் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் வீரியத்தைப் பறைசாற்றினார்.

                                                                

மேலைநாட்டில் பலர், நம் நாட்டின் பெருமையைக் குறைக்க, சிதைக்க முயன்றபோதெல்லாம் ஒரு வீரத்தாயாக நின்று சுவாமி விவேகானந்தர் நம் நாட்டிற்காக வாதாடினார்; விமர்சித்தவர்களைப் பந்தாடினார்.

                                                                

அவர் கூறிய உண்மைகளை உணர்ந்த வெளிநாட்டினர் இந்தியாவின் பெருமையை உணர்ந்தார்கள். பிறகு இந்தியர்களே இந்தியாவை மதிக்க ஆரம்பித்தது விவேகானந்தரின் தாய்மை உள்ளம் தந்த பரிசு.

                                                                

"தாயினும் கனிந்த உள்ளம் தளர்விலா தீரவீரம்...." என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சுவாமி விவேகானந்தரைப் பற்றிப் பாடியது சத்தியமான வார்த்தைகள்.

                                                                

ஒருமுறை கப்பலில் நமது தாய்நாட்டையும் தாய் மதத்தையும் கிண்டல் செய்த ஒரு பாதிரியாரை மிரட்டியே பணிய வைத்தவர் விவேகானந்த மாமுனி. 'உன் தாயைப் பழிக்கும் ஒருவரைப் பார்த்து நீ சும்மா இருப்பாயா?' என்று கேட்டவர் சுவாமிஜி.

                                                                

'வஜ்ரம் போன்று கடுமையாகவும், மலரை விட மென்மையாகவும்' ஸ்ரீராமர் விளங்கினார். அதே பண்பை சுவாமிஜியும் பெற்றிருந்தார்.

                                                                

இந்தியாவிற்கு சுவாமி விவேகானந்தர் தந்தையாகவும் விளங்கினார். பாரதத்தின் தேசப்பிதா காந்திஜி என்கிறோம். சுவாமிஜி பாரதத்தின் ஞானப்பிதா என்பது நாடு இன்னும் உணர வேண்டிய ஒன்று. இந்தியாவைப் பற்றி உருகி உருகிப் பேசிய விவேகானந்தர் தாய் நாட்டிற்குத் திரும்பி வந்தவுடன் பாரதத்தின் பழம்பெருமைகளை நம்மிடையே பேசித் திளைக்கவில்லை. 

மாறாக, இங்கிருந்த, இன்றும் இருக்கின்ற மூடநம்பிக்கைகளைக் களைந்திடக் குரல் கொடுத்தார். மக்களின் வறுமை, சோம்பேறித்தனம், ஜாதிக் கொடுமை, பெண்களின் கல்வியின்மை, பாமர மக்களைக் கொடுமைப்படுத்தியது, மேல்தட்டு மக்களின் ஆதிக்க வெறி போன்றவற்றையெல்லாம் சாடினார்.

        

1950-60 -ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தோன்றிய சில சமுதாயத் தலைவர்கள்தான் நம் நாட்டின் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டியதாக நமக்குத் தவறாகச் சொல்லப்படுகிறது. அவற்றை அவசர அவசரமாகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஏற்றப்படுகிறது.

        

ஆனால் விவேகானந்தர், 1897 -ஆம் ஆண்டே தமது உரைகள் மூலம் இந்தக் கருத்துகளை எல்லாம் ஒவ்வோர் இந்தியனின் மனதிலும் மண்டையிலும் ஆணித்தரமாக அடித்தார்.


இந்து சமயத் தலைவர்கள் ஆன்மீகத்தை மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் அசட்டுத்தனமாக இருப்பதை அவர் வெறுத்தார். மேல்குடி மக்கள் கீழ் ஜாதி மக்களை நேசிக்காததால் அவர்கள் இந்து மதத்தை விட்டு வேற்று மதத்தைத் தழுவுவதைச் சுட்டிக் காட்டினார்; தட்டிக் கேட்டார்.

 

இவ்வாறு சுவாமிஜி அந்நியர்களிடமிருந்து இந்து தர்மத்தை ஒரு தாயாக இருந்து பரிவுடன் பாதுகாத்தார். இந்து சமயத்தில் புரையோடிப் போன மலினங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளைத் தயவு தாட்சணையின்றி விமர்சித்தார். முட்டாளாகத் திரிந்த தன் மகனைக் கண்டித்துச் சீர்படுத்தும் தந்தை போல சுவாமிஜி இந்து மதத்தைக் காத்தார்; இன்றும் காத்து வருகிறார்.

 

"இந்தியாவில் தோன்றியிருக்கும் புது எழுச்சிக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விதமான காரணங்களைக் கூறுகிறார்கள். சுவாமி விவேகானந்தர் மதாச்சாரியராகவே நாட்கழித்த போதிலும் தேசபக்தி எழுச்சிக்கு அவர் பெரியதோர் மூலாதாரமாக நின்றார். "

மேற்கூறியவாறு மகாகவி பாரதியார் சும்மாவா கூறினார்?

சுவாமி விமூர்த்தானந்தர்

30 செப்டம்பர், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur