RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 36

22.09.22 03:12 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 36

கேள்வி: ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் துறவியான நீங்கள் கிராமக் கோவில் பூஜாரிகள் மாநாடுகளில் சென்று அவர்களுக்கு என்ன கருத்துகளைக் கூறினீர்கள்?

- திரு. மணிகண்டன், மன்னார்குடி.

பதில்: 2022, செப்டம்பர் 17, 19- ஆம் தேதிகளில் பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணத்தில் நடந்த கிராமக் கோயில் பூஜாரிகள் மற்றும் அருள் வாக்கு கூறுபவர்கள் பேரவையினர் நடத்திய மாநாடுகளில் சுவாமி விமூர்த்தானந்தர் ஆற்றிய உரையின் தொகுப்பு: 

                

1. 'கடவுளை ஆராதிக்கும் பூஜாரி நீங்கள்' என்ற பெருமிதமும், பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்கவர்கள் நீங்கள் என்ற பெருமையும் எல்லா பூஜாரிகளுக்கும் இருக்க வேண்டும்.

                

2. கிராமக் கோவில் பூஜாரிகளான உங்களது பிரார்த்தனைக்கு அதிக பலம் உண்டு என்பதை நம்புங்கள். ஓர் உதாரணம்.

ஒவ்வொரு நாளும் 40 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று மக்களைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த காலம் அது. அந்தக் கொடூரமான கொரோனா காலகட்டத்தில் 24.6.21, அன்று பௌர்ணமி தினத்தில் தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் தஞ்சை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 2000 கோவில்களில் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் கொரோனா ஒழிய வேண்டிக் கூட்டுப் பிரார்த்தனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோவிலுக்கும் வேண்டிய அபிஷேகம் மற்றும் நைவேத்தியத்திற்கான பொருட்கள் மடத்திலிருந்து அனைத்துக் கோவில்களுக்கும் வழங்கப்பட்டன.

                

அன்று பூஜாரிகளான நீங்கள் செய்த பூஜையினாலும் ஆத்மார்த்தமான பிரார்த்தனையாலும் அடுத்த சில தினங்களிலேயே கொரோனா தொற்றின் எண்ணிக்கை 40,000 -லிருந்து 4000- க்குக் குறைந்த வரலாற்றை உலகுக்குச் சொல்லுங்கள்.

3. ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரபுருஷர், ஒரு சிறந்த மகான், உலக குரு என்றெல்லாம் பிரசித்தி பெறுவதற்கு முன்பு அவர் தமது வாழ்க்கையை ஒரு பூஜாரியாகத் தொடங்கினார். அந்த வகையில் உங்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு லட்சிய புருஷராக விளங்குகிறார்.

        

4. ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து எல்லா பூஜாரிகளும் கற்க வேண்டியவை:

தமது பக்திமிக்கப் பூஜையினால் ஸ்ரீராமகிருஷ்ணர் கற்சிலையான பவதாரணி தேவியை உயிர்ப்பித்து எழச் செய்தார். அம்பாளின் திருநாசியின் அருகில் கை வைத்து அம்பாள் சுவாசிப்பதை உணர்ந்தார். நைவேத்தியம் படைத்து மந்திரம் சொல்வதற்கு முன்பே அம்பாள் ஸ்ரீராமகிருஷ்ணர் வைத்த நைவேத்தியத்தை உண்ண ஆரம்பிப்பாள். காரணம், அங்கு மந்திரம் கூறி நிவேதிக்கும் சடங்கைவிட, பூஜாரியான ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து பக்தி என்ற பாவனையை தேவி அதிகம் விரும்பி தேவி உண்ண ஆரம்பிப்பாள்.

        

5. பூஜாரிகள் தாங்கள் எந்த தெய்வத்தை ஆராதிக்கிறார்களோ, அந்தத் தெய்வத்தின் ஒரு சில அம்சங்கள் அல்லது வெளிப்பாடுகள் அவர்களது நடத்தையில் வெளிப்பட வேண்டும்.

6. வாழ்வில் சிரமப்பட்டு உங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் வழங்கும் சேவையை நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

        

7. பக்தர்களின் வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பது பூஜாரியின் கடமை. பகவானுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள பிணைப்பைப் பலப்படுத்துபவர் பூஜாரிதான். இருவருக்கும் பாலமாகப் பூஜாரி திகழ வேண்டும்.

        

8. கிராமத்தில் அல்லது ஊரில் ஒரு கஷ்டம் என்றால் மக்கள் கோவிலுக்கு வருவார்கள். அப்போது அவர்களது குறைகளைச் செவிமடுத்து இறைவனிடம் அவர்களுக்காகப் பக்தியுடன் வேண்டுங்கள்.

9. சற்று சிரமப்பட்டாவது தங்களது இந்து சமய அறிவினை மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் பெற்ற அறிவைக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் கூறினால் அவர்களது தெய்வ நம்பிக்கை பெருகும். கோவிலுக்கு வரும் எண்ணிக்கையும் அவ்வாறே கூடும்.

                

10. நீங்கள் பூஜிக்கும் தெய்வம் உங்களது வாழ்வின் மற்றும் குடும்பத்தின் ஓர் அங்கத்தினராக மாறும்படி உங்களுக்குப் பக்தி பெருகட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்களது பூஜையில் பக்தி பெருக்கெடுத்தால், ஆ! என்ன அருமையான வாழ்க்கை உங்களுக்கு அமையும்!

                

11. பூஜாரிகளே, அரசியல் கட்சியில் இருப்பது உங்களது விருப்பம். ஆனால் நம் மதத்திற்கு ஓர் இடைஞ்சல், அவமதிப்பு, கேலியாக யாராவது பேசும்போது நீங்கள் உங்கள் கட்சியை மறந்து உங்கள் மதத்திற்காகக் கச்சை கட்டிக் கொள்வீர்களா?

                

12. உங்களது அருள்வாக்குகளில் ஆண்டவனின் அருளைப் பெற்று பக்தர்களுக்காக அருள்வாக்கை உரைத்திடுங்கள். அதைவிட முக்கியமாக, தேர்தல் நேரத்தில் எந்த வேட்பாளர் உங்கள் மதத்தைப் பெருமைப்படுத்துகிறாரோ, ஏளனம் செய்யவில்லையோ அந்த நபருக்கே உங்களது வாக்குகளை (Vote) வழங்கவும் செய்யுங்கள்.

13. நீங்கள் பூஜிக்கும் சாமிகளுக்கும் கோவிலுக்கு வரும் அன்பர்களுக்கும் சேவை செய்து வந்தால், மதம் மாற்றும் மிஷனரிகள் உங்கள் கிராமத்துப் பக்கம் படையெடுக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்து மதப் பாதுகாவலர்களாக நீங்கள் உயர்கிறீர்கள்.

                

கிராமக் கோவில் பூஜாரிகளே, மேற்கூறியவை எல்லாம் இன்று நமது இந்து மதத்திற்குத் தேவையான கருத்துகள். இவை யாவும் பொறுப்புள்ள பல்வேறு  ஆச்சாரியார்களின், இந்து சமயத்தைச் சுவாசிக்கும் நல்ல அடியார்களின் சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை. 


உங்களைச் சக்தி மிக்க மனிதர்களாக உருவாக்க இருப்பவையாகும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

22 செப்டம்பர், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur