கேள்வி : ஈகோவைக் கொஞ்சம் விளக்குங்கள்.
- திரு. இளங்கோவன், தஞ்சாவூர்.
பதில்: உங்களுக்கான விடை ஒரு கவிதை வடிவில்.
ஆணவமா? ஆவணமா?
குருவே, என் அகங்காரத்தை அகற்றுங்கள் என்றான் சீடன்.
அகற்று என்று அடியேனுக்கே கட்டளை இடுவதா, சீடனே?
சீடன் பணிந்தான்.
அறுக்க அறுக்க முளைக்கும் புல் ஆணவம்.
புல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்காதே!
நான் பயனற்றவன் என்ற பலவீன ஆணவம் வேண்டாம் உனக்கு!
சீடன் நிமிர்ந்தான்.
என்னால் மட்டுமே முடியும் என்ற திமிரும் வேண்டாம்!
சீடன் விழித்தான்.
காற்று இல்லாமல் வாழ்க்கை உண்டா?
மாசற்ற வாயுவாக மனதை வைத்திருப்பதே வாழ்க்கையாம்.
ஆணவம் பிடித்தலைந்து அவதிப்படாதே! அதோடு,
ஆணவம் உன்னைச் செய்ய வைத்ததை எல்லாம் ஆவணப்படுத்தாதே!
அது போதும் வாழ்வதற்கு!
குருவும் சீடரும் தொடர்ந்தார்கள் பயணத்தை...!
சுவாமி விமூர்த்தானந்தர்
19 ஜூலை, 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்