Go Head or Go with Heart?
கேள்வி: நான் ஓர் இளம் டாக்டர். எனக்கு மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க ஆசை. அதைப் படித்தால் நன்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளை நான் அந்த நாட்டிலும் நம் நாட்டிலும் பெறுவேன். ஆனால் எனக்கு என் தாய் தந்தையரைப் பிரிய மனமில்லை; தாய் நாட்டையும் பிரிய மனம் ஏற்கவில்லை.
இந்த விஷயத்தில் என்னால் சரியான முடிவெடுக்க முடியவில்லை, சுவாமி. நான் என்ன செய்ய வேண்டும்? வெளிநாட்டிற்கு செல்லட்டுமா? வேண்டாமா?
துறவி: அன்பார்ந்த டாக்டர் மஞ்சு, வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் நடைமுறையிலும் சரியான முடிவெடுப்பது என்பது ஓர் ஆன்மீகப் பண்பு ஆகும். Correct decision-making is a spiritual quality.
மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வது நல்ல வாய்ப்பு. அங்கு சென்று அந்த அனுபவத்தையும் படிப்பையும் பெற்று, பிறகு இங்கு வந்து நம் சொந்த மக்களுக்காக அதைப் பயன்படுத்தினால் மிக அருமையாக இருக்கும்! அதைப் பற்றி யோசியுங்கள் மஞ்சு.
இங்கிருந்து புலம்பெயர்ந்த எத்தனையோ மக்கள், நம் தாய்நாட்டிற்கு ஒரு இன்னல் வந்தால் உதவிகளை அள்ளி வழங்குகிறார்கள். இங்கிருக்கும் இந்தியர்களை விட அங்கு சென்ற பிறகும் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சமயத்தையும் மறவாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உள்ளவர்களையும் நாம் பாராட்டியாக வேண்டும்.
ஆனால் தாய்நாட்டை மறந்துவிட்ட பல NRI -கள் 'மேலை நாடுகளில் உள்ள தூய்மையும் அரசு எந்திரங்கள் செயல்படும் துல்லியமும் உங்கள் இந்தியாவில் கிடையாது... இது டர்ட்டி லேண்ட் ஆயிற்றே' என்பார்கள்.
தங்கள் தாய் நாட்டிடமிருந்து அதிகம் பெற்று, தாய்நாட்டிற்குத் திரும்ப ஒன்றும் தராத NRI - Non- returning Indians, அவர்களின் சுயநல, சொகுசு வாழ்க்கை சொல்லும் நொண்டிச் சமாதானம் இது.
உன்னைப் பெற்றெடுத்து வளர்த்துப் படிக்க வைத்த தாய்நாட்டிற்கும் உன் மக்களுக்கும் நீ காட்டும் மரியாதையும் நன்றி செலுத்தும் பண்பும் இதுதானா? வசதியில் வெளிநாட்டில், வயதான அசதியில் அன்னை நாட்டிலா? இதில் உனக்கென்ன பெருமை உள்ளது? என்று கேட்டால் அவர்கள் திணறுவார்கள். நம்மைத் திட்டுவார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சங்ககுருவாக வீற்றிருந்த சுவாமி ரங்கநாதானந்தஜி மகராஜ் ஒருமுறை கூறினார்: 'நல்ல வாய்ப்பு இருந்தால் சம்பாதிக்க வெளியிடம் செல்; ஆனால் வாழ்வதற்கோ தாய்நாட்டை மறந்து விடாதே.'
டாக்டர், இதை மனதில் கொண்டு Go Head. இந்த வார்த்தையைக் கவனியுங்கள். மேற்படிப்பிற்காகவும் சம்பாதிப்பதற்காகவும் வெளிநாடு செல். அதற்கு உன் Head அதாவது அறிவை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்து. நீ பெறும் வாய்ப்பு வசதிகளை உன்னைச் சேர்ந்தவர்களுக்காகவும் சேர்த்துப் பெருக்கு. நீ வாழ்வதற்கும் உன்னால் உன் சமுதாயமும், உன் சமயமும், உன் தாய் மண்ணும் வளமை அடைவதற்கும் Go with Heart.
Go Head or Go with Heart? இதுவா? அதுவா என்பதல்ல பிரச்னை. நாம் நன்கு வளர்வதற்கு நமக்கு நல்லறிவு வேண்டும்; நம்மோடு சேர்ந்து நம்மைச் சேர்ந்தவர்களையும் எல்லா நல்ல வகைகளிலும் வளர்த்துக் கொள்வதற்கு ஆழ்ந்த அன்பும் வேண்டும்.
Use your head efficiently for livelihood and use your heart fully for Living properly.
சுவாமி விமூர்த்தானந்தர்
13 ஜூன், 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்