கேள்வி: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்வதின் சிறப்பம்சம் என்ன?
பதில்: பொதுவாக, நமக்குக் கடவுள் கருணை புரிகிறார் என்றால், நமது வியாதி நீங்கும், நூறு வயதுக்கும் நமக்கு நோயே வராது; யாருக்கும் இல்லாத வசதிகள், அதிர்ஷ்டங்கள் நமக்கு மட்டும் வேண்டும், ஏக்கர் கணக்கில் நமக்குச் சொத்துக்கள் பெருகும்.
இவை போன்றவற்றையே இறையருள் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கிறது. அதையே நாமும் நம்பி வருகிறோம்.
ஆனால் கடவுளின் உயர் கருணை, மறக்கருணை என்பதெல்லாம் அலாதியானது.
இமயமலை ஏறும் ஒரு வீரனுக்குப் பிராணவாயு சிலிண்டர் திடீரென்று காலியாகிவிட்டது. அப்போது அடுத்த சிலிண்டரை அங்கேயே ஒருவர் சென்று வழங்கினால் எவ்வளவு ஆனந்தம் இருக்கும்!
துன்பத்தைத் தவிர்த்த சுகம் மட்டுமே ஒருவரது ஆன்மிக நோக்கமாக இருந்துவிட முடியாது. பாலைவனத்தின் ஊடே சென்றாவது சொர்க்கத்தை அடைவது போல், ஆன்மீக வாழ்க்கை என்பது உயர உயரச் சொல்லும் உன்னதமான ஒன்று. ஆன்மிகச் சாதகனுக்கு வரும் தடைகள் அவனே அறியாதவை. ஆரம்ப காலத்தில் பயன்பட்டது பின்னர் பாரமாகிப் போவதும் உண்டு.
ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தொண்டையில் எரிச்சல் இருந்தது. அப்போது அவரது சிஷ்யை யோகின் மா என்பவரை அழைத்தார். "யோகின், நோயை நீக்கும் மந்திரம் உனக்குத் தெரியுமே! அதைச் சொல்லி என் தொண்டைப் பகுதியை லேசாகத் தடவி விடம்மா" என்றார்.
யோகின் மாவிற்கு ஒரே ஆச்சரியம். பல வருடங்களுக்கு முன்பு தான் கற்றிருந்த அந்த மந்திரம் குருதேவருக்கு எப்படி தெரிந்தது என்று வியந்தார். குரு சொன்னபடி யோகின் மா செய்தார். உடனே குருதேவருக்குத் தொண்டை எரிச்சலிலிருந்து நிவாரணம் கிடைத்தது. யோகின் மா இந்த விஷயத்தை அன்னை ஸ்ரீசாரதாதேவியாரிடம் சென்று கூறினார்.
"அம்மா, பல வருடங்களுக்கு முன்பு இந்த மந்திரத்தை நான் கற்றேன். உடல்நிலை சரியில்லாதபோது அந்த மந்திரத்தைச் சொல்வேன். உடனே குணமாவேன். குருதேவரின் அருளைப் பெற்ற பிறகு இந்த மந்திரம் பற்றி நான் அவரிடம் சொல்லவில்லை. காரணம் இது போன்ற விஷயங்கள் அவருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நான் கற்ற அந்த மந்திரத்தை குருதேவர் எப்படி அறிந்தார்?" என்று கூறி வியந்தார்.
இப்படியான ஒரு கருணையை சுவாமி நிரஞ்ஜனானந்தரின் வாழ்விலும் பார்க்கிறோம். அவர் ஆரம்ப காலத்தில் பேய்களை வசப்படுத்தும் சித்திகளைப் பெற்றிருந்தார். அந்த சித்தி சீடனுக்கு மனசுத்தியைத் தராது. மனத்தூய்மை இல்லாமல் இறைவனை அடைய முடியாது என்பதால் நிரஞ்ஜனானந்தரின் பேய் வசிய சித்தியைத் தாமே உள்வாங்கிக் கொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர். சுற்றுலா செல்லும்போது சுமைகளுடன் செல்லலாம்; யாத்திரையின்போது வீண்சுமை இருக்கக் கூடாது. சாதாரண வாழ்க்கை சுற்றுலா போன்றது; ஆன்மிக வாழ்க்கை என்பது யாத்திரை.
ஓரிரு சொற்ப பலன்களைத் தரும் மந்திரங்களை அழிக்க ஸ்ரீராமகிருஷ்ணர் வரவில்லை. அவை சாதாரண மக்களுக்குப் பயன்படலாம். ஆனால் இறைவனை அடைவதுதான் மனித வாழ்க்கையின் லட்சியம் என்பதைக் கூறும் குருதேவர் தமது சீடர்களுக்கு அருள்பாலித்த விதமே அலாதியானது.
சுவாமி விமூர்த்தானந்தர்
11 மே, 2022
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்