RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 30

10.03.22 11:28 AM By thanjavur

சிந்தனைச் சேவை - 30

கேள்வி: இது ஒரு பழைய கேள்வியாக இருந்தாலும் பதில் தாருங்கள். எது சிறந்தது - துறவறமா? இல்லறமா? 


- திரு. பாலகுரு, ஒரத்தநாடு.

பதில்:

துறவறப் பாதைக்கு வந்து விட்டதாலேயே சிலர் இல்லறத்தார்களை ஏளனமாகப் பார்ப்பதுண்டு. தங்களது உபன்யாசத்தில் இல்லறத்தார்களைக் கிண்டல் செய்வதையும் காணலாம். சில இல்லறப் பண்டிதர்களும் தாங்கள் ஆற்றும் உபன்யாசத்தில் துறவறத்தை மட்டம் தட்டுவதையும் பார்க்கலாம்.

 

இரண்டு கோஷ்டியினரும் சேற்றை வாரி பிறர் மீது வீசும் முன்பு முதலில் சேறாவது அவர்களது கைகள்தான் என்பதை இருவரும் மறக்கிறார்கள். எந்த அறத்தில் இருக்கிறார்களோ அந்த அறத்திற்குத் தீமை செய்கிறார்கள்.

 

இல்லறத்தாரோ, துறவறத்தாரோ இருவரும் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளை மனதில் கொண்டாக வேண்டும். ஒன்று த்யஜ - விட்டுவிடு என்பது. அடுத்தது பஜ - பற்றிக்கொள் என்பது. விட்டுவிடுவது ஞான மார்க்கம்; பற்றுவது பக்தி மார்க்கம்.

 

இல்லறத்தானின் வழியானது இறைவனிடம் சரியான பற்றுதலைக் கொண்டு இல்லறக் கடமைகளை ஆற்றுவது ஆகும்; தன் குடும்பத்தை, தன் சொந்தங்களை, பந்தங்களை என்று ஒவ்வொன்றையும் சரியாகப் பிடித்துக் கொண்டு- புரிந்து கொண்டு வாழ்வது. அவ்வாறு சீருடன் வாழ்வதற்கு ஆண்டவனிடம் பக்தியுடன் இருக்கிறான்.

 

அதோடு, பக்திமிக்க வாழ்க்கையினால் யாரெல்லாம் ஆண்டவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களைப் பிடித்துக் கொள்வது பஜ மார்க்கம். 'பிடித்தாரைப் பிடி' என்கிறது வைணவம்.

 

நேதி நேதி- இதுவல்ல, இதுவல்ல என்று விசாரம் செய்தபடி ஆண்டவனை இலக்காகக் கொண்டு ஒவ்வொன்றிலிருந்தும் பற்றில்லாமல் கடமையாற்றுவது துறவறமாகும். எல்லாவற்றிலும் பற்றினை விட்டுக் கொண்டே வந்து முடிவில் ஆண்டவனை முழுவதுமாகப் பற்றுகிறார் துறவி. அதன் மூலம் ஆண்டவனுக்குள் அனைத்துச் சொந்தங்களும் அடக்கம் என்பதை உணர்கிறார். ஜீவர்களை சிவனாகக் கண்டு, குறைந்தபட்சம் சிவனாகக் கருதியாவது அவர்களுக்கு சேவையும் பூஜையும் செய்கின்றார்.

பக்தனின் நோக்கம் பஜ. அது ஆண்டவன் திருநாமத்தை ஓதியபடி அவருக்குத் தொண்டு செய்வதைக் காட்டுகிறது.

 

துறவியின் நோக்கம் த்யஜ. அது இல்லற சுகங்களையும் உலகியல் வாசனைகளையும் சுயநலத்தையும் துறப்பது.

 

பஜ மற்றும் த்யஜ ஆகிய இரண்டு வார்த்தைகளையும் இரண்டு பிரிவினரும் புரிந்துகொண்டால் அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்தவரே. இது சுவாமி விவேகானந்தர் வகுத்துக் கொடுத்த பாதை.

 

 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தது துறவிகளுக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும்தான். அதோடு, உலகிலுள்ள எல்லாவித ஆன்மீக சாதகர்களுக்கும் அவரது திருவாழ்வு பயன்படும் என்று தவத்திரு சுவாமி கம்பீரானந்தர் ஒருமுறை கூறினார்.

சுவாமி விமூர்த்தானந்தர்

10 மார்ச், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur