சிந்தனைச் சேவை - 29

27.11.21 07:44 PM - By thanjavur

சிந்தனைச் சேவை - 29

கேள்வி: இந்து தர்மத்தை மலினமாகப் பேசிவிட்டால் புத்திசாலிகள் என்று டிவி விவாதங்களிலும், பொது மேடைகளிலும் காட்டப்படுகிறது. வெறுப்பை உமிழும் இந்தப் போக்கை எவ்வாறு தடுப்பது?

                                                                                                                                                        -திரு. கே. ஆர். விட்டல் அரங்கன், காரைக்கால்.

பதில்: சாதுவான லட்சக்கணக்கான இந்துக்களின் மனங்களில் புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரும் பிரச்னை இது.

கடவுள் இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்..... என்றெல்லாம் கூறப்படும் நாத்திக வாக்கியங்களுக்கு முன்பு அவர்கள் போட முயலும் ஒரு வார்த்தை இந்து என்பதுதான். அதாவது இந்துக் கடவுளை நம்பாதே என்பதுதான் அவர்கள் பரப்பி வரும் வக்கிரமான விஷம். 

இதே வாக்கியங்களை சர்ச் மற்றும் மசூதியின் முன்பு எழுதினால், எழுதுபவர்கள் உடனே ஓடி ஒளிய வேண்டும் அல்லது ஒரேடியாக ஒழிய வேண்டியிருக்கும்.

மதச்சார்பின்மை பேசித் தங்களை அறிவுஜீவிகள் என்று நினைத்துக் கொண்டு பேசுபவர்கள் இந்து சமய அல்லது சமுதாய சீர்திருத்தவாதிகள் அல்ல. பிற மதத்துக் கூலிப்படை என்று இந்துக்களுக்கு மெதுவாக இப்போது தெரிய வருகிறது. முற்காலத்தில் முனிவர்கள் யாகம் வளர்க்கும்போது யாகத்தீயில் அசிங்கம் செய்யும் அரக்கர்கள் போன்றவர்கள் இவர்கள். 

இந்தச் சமய விரோதிகளை இப்போது நமது மக்கள் இனம் கண்டு வருகிறார்கள். நம் சமயத்தைப் பற்றிய கேலிகளுக்கும் வெற்று விமர்சனங்களுக்கும் தக்க பதில் அளிக்க படித்த நம் இளைஞர்கள் / யுவதிகள் பலரும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒன்றை இந்து சமய  விரோத துரோகிகளுக்கு நன்கு தெரியும். அது ஒவ்வோர் இந்துவுக்கும் தெரிய வேண்டும். அது என்ன?

இந்து மதத்தில் நம்பிக்கையும் பற்றும் இல்லாத ஜடமான சமயச் சோம்பேறிகள்-

விசாலமான மனம் கொண்டவர்கள் என்று நம்பிக்கொண்டு பணம் சம்பாதிப்பதிலேயே சாகிறவர்கள்-

மடத்தனமாக எல்லோரையும் நம்பித் தொலையும் தற்குறிகள்-

தனது மதத்தை ஒருவன் தரக்குறைவாகப் பேசும்போது தட்டிக்கேட்கத் திராணியற்றவர்கள்

இன்று இந்து மதத்தில் அதிகம் இருப்பதால்தான் இந்த விரோதிகளும் துரோகிகளும் வாலாட்டுகிறார்கள்.

இந்து மதத்தில் இருந்து கொண்டு அதில் ஈடுபாடும் இறைநம்பிக்கையும் இல்லாமல் நம் மதத்தையே குறை கூறி வருபவர்களைப் பார்த்து சுவாமி விவேகானந்தர் அன்றே இவ்வாறு கூறினார்:

....இந்துக்களே, நமது நாடு எனும் கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவு நன்மை செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று ஒருவேளை அதில் ஓரிரு ஓட்டை விழுந்திருக்கலாம், சிறிது பழுதுபட்டிருக்கலாம். இந்த நிலையில் ஓட்டைகளை அடைத்துத் தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நீங்களும் நானும், நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலை. நம் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்தை எடுத்துச் சொல்வோம். அவர்கள் விழித்தெழட்டும்; விழித்து நமக்கு உதவட்டும்.....

-இவ்வாறு 125 வருடங்களுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் ஆற்றிய சொற்பொழிவில் கூறினார்.சுவாமிஜி கூறியபடி நாம் நம் மக்களுக்கு

இந்து மதத்தின் மீது திணிக்கப்படும் மதச்சார்பின்மையாலும்,,,,,

மக்கள் சேவையில் ஈடுபடாத அரசியல் அநாகரீகங்களாலும்,

பணமும் புகழும் மட்டுமே காட்டும் கரன்சி கலாச்சாரத்தாலும்

வரும் ஆபத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்து சமயத்தின் சைவ, வைணவம் போன்ற பல்வேறு பிரிவுகளோடு நல்லிணக்கதோடு இருப்பதும், 

பிற மதம் பற்றிய மத வியாபார விழிப்புணர்வோடு இருப்பதும் இன்றைய இந்துவிற்கு மிக அவசியம்.

சனாதன தர்மத்தை வீரத்துடன் பாதுகாப்போம்;

பக்தியுடன் கடைப்பிடிப்போம்.

புழுங்கிக் கொண்டிருக்கும் இந்து சாது மிரண்டால் நிச்சயம் மிளிர்வான்!

விவேகானந்தருக்கு வெற்றி கிடைக்கட்டும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

27 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur