RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 28

24.11.21 07:11 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 28

கேள்வி: இப்போதெல்லாம் மாணவ-மாணவிகள் எதையும் சர்வ சாதாரணமாக வீணாக்குகிறார்கள். சேமிக்கும் பழக்கம் மற்றும் சிக்கனம் இவற்றையெல்லாம் கேலி செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம்?

திருமதி. கலாராணி, அய்யம்பேட்டை.

பதில்: சுயநலம்தான். கற்காலம், பொற்காலம் என்றெல்லாம் கூறுவது போல் சுயநலக் காலம் என்று நமது காலத்தைக் குறிப்பிடலாம்.

இன்று அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்தும் இலவசம். அதனால் பொருட்களை உழைத்துப் பெற வேண்டிய முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.

மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் எதையும் வாங்கிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பலருக்கும் ஒரே குழந்தை என்பதால் அதிக செல்லம்!

வியாபாரத்தில் பல பொருட்களை USE and THROW என்று விளம்பரப் படுத்துகிறார்கள். விளைவு?

பள்ளியில் தான் படித்த புத்தகங்கள் பரீட்சை எழுத மட்டுமே உதவுகிறது என்பது மாணவனுக்கு நன்கு புரிகிறது. அதனால்தான் பரிட்சை முடிந்ததும் பல பள்ளிகளின் வாசலிலேயே அந்தப் பள்ளி மாணவர்களே நூல்களைத் தீயிட்டுக் கொளுத்திய செய்தியை நாம் கேட்கிறோம். The worst effect of use and throw pattern of living.

பயன்படுத்து; தூக்கி எறி - இது இன்றைய தறிகெட்ட கலாச்சாரம்.

Use and Reuse and Keep things for future Generation என்பது நமது தொன்று தொட்டு வரும் பாரதப் பாரம்பரியம். 

கலாம்மா, இனிமேல் உங்கள் குழந்தைகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும்போது உங்கள் மகனுக்குச் சோற்றுப் பருக்கையை விரயம் செய்யாதே என்று  கற்றுத் தாருங்கள். அதன் மூலம் அவன் பின்னாளில் அரசு தானியக் கிடங்கை விரயம் செய்யாதவனாக இருப்பான்.

உங்கள் மகள் கேட்டதையெல்லாம் வாங்கித் தரும் பொறுப்பில்லாத ATM அம்மாவாக இருக்க வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் விலை உண்டு, அதற்குப் பின்னே உள்ள உழைப்பவரின் அவல நிலையும் உண்டு என்பதை எடுத்துச் சொல்லுங்கள். உழைப்பைப் போற்றத் தெரிந்தவரைச் சமுதாயம் போற்றும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

24 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur