RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 27

11.11.21 06:56 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 27

கேள்வி: என் கணவர் நல்லவர். ஆன்மீக நூல்களைச் சிரத்தையுடன் படிக்கிறார். அவருக்கு அலுவலகத்திலும் நண்பர்களிடத்திலும் பல பிரச்னைகள் வருகின்றன. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று சொல்கிறார்; எங்களுக்குள்ளும் அதையே திணிக்கிறார். 

அன்றாடம் நடக்கும் உலகியல் விஷயங்களில் அவர் அக்கறையின்றி நடந்துகொண்டு ஆண்டவன் மீது பாரத்தைப் போடுகிறார். என் புரிதல் சரியா, சுவாமிஜி?                                   - திருமதி இந்துமதி, சிவகாசி.


பதில்: இது போன்ற பிரச்னை இந்துக்களிடம் தற்போது அதிகமாகத் தெரிகிறது. வெறும் மன அமைதியை மட்டும் தரும் உணர்ச்சிப்பெருக்கான பக்தியைக் காட்டிலும், உணர்வு மற்றும் வலிமை உடையவனாக ஒருவனை

மாற்றும் சிரத்தா சக்திதான் இன்றைய இந்து மக்களுக்கு அவசியம் தேவை.

பகவத் கீதையில் கிருஷ்ணர், அர்ஜுனன் 'ஞானி போல் பேசி, ஆனால் காரியத்தில் கோட்டை விடுவதை' ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டினார்.

சுவாமி விவேகானந்தர் கூறும் ஆன்மீக வாழ்க்கை என்பது செயல்முறை வேதாந்தம் ஆகும். இறைவன் நம்மைப் படைத்து வாழ வைக்கிறார். நாம் உண்மையில் இறைவனது விருப்பப்படி வாழ்வதற்கான அறிகுறி என்ன

மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் நாம் இருப்பது ஒரு முக்கிய அறிகுறி.

எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்பது உயர்ந்த ஞானிகள்/ பக்தர்கள் / துறவிகளின் முடிந்த முடிவு. முதலில் நம் கடமையைச் செய்த பின் கடவுளின் அருளுக்காக நாம் காத்திருக்கிறோமா? என்பது ஒரு கேள்வி.

சுவாமிஜி கூறுவதுபோல், உயர்ந்த சாத்வீகமான குணமும், அப்பட்டமான தாமச, மந்த குணமும் வெளியில் அமைதியாகவே காட்சி தரும். யோகியின் தியானத்திற்கும் திருடன் பதுங்கி அமைதியாக இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அதைப் பக்தர்கள் இனம் கண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டும்.

சுயமுயற்சியுடன் நமக்கு விதிக்கப்பட்ட அன்றாட பணியை நாம் திறம்பட செயலாற்ற மனம் வைக்க வேண்டும். எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என எண்ணும் முயற்சியற்ற ஜென்மங்கள் ஆண்டவன் மீது பாரத்தை அல்ல; பழியைத்தான் போடுவார்கள். 'கடவுளே, என்னைக் கை விட்டுட்டியே' என்ற புலம்பல் அந்த வகையைச் சேர்ந்தது.

ஆரம்பத்தில் நமது பக்தியினால் வரும் கண்ணீரை விட, கடமைக்காகச் சிந்தும் வியர்வையே ஆண்டவன் விரும்புகிறார்.  

ஓர் அவதாரபுருஷரின் சக தர்மபத்தினிஒரு மாபெரும் துறவறப் பரம்பரையின் சங்கஜனனீலட்சக்கணக்கான பக்தர்களின் தியான தெய்வம் - இப்படி அரிய பல பேறுகளைப் பெற்ற அன்னை ஸ்ரீசாரதா தேவி ஒருமுறை கூறினார்:

"ஆன்மீக விஷயங்களில் நான் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களை முழுவதுமாக கடைப்பிடிப்பேன். ஆனால் அன்றாட விஷயங்களிலோ எனது நடைமுறை அறிவைப் (common sense) பயன்படுத்திக் காரியமாற்றுவேன்."

ஆஹா, இந்த ஓர் அணுகுமுறையை, ஆன்மீக அனுபவ அறிவையையும், சமுதாய அக்கறையையும் ஈடுபாட்டையும் நம் மக்கள் வளர்த்துக்கொண்டால், நிச்சயமாக ஒவ்வோர் இந்துவும் சரியான சீரிய பக்தர் ஆக முடியும்.

இன்று இப்படி இருந்தால்தான் இந்து குடும்பங்கள் மற்றும் இந்து சமயம் விவேகானந்தரின் வழியில் வீர நடை போடும். மிக முக்கியமாக இந்து மதத்தின் சொத்துக்களான கோவில்கள் முதல் சாஸ்திரங்கள் வரை எல்லாவற்றையும் நாம் பாதுகாக்க முடியும்.

ஆகவே இந்துமதி, நீங்கள் நல்ல பக்திமதியாக உங்கள் கணவரிடம் அன்பாகப் பேசி 'ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா' என்பதை அவருக்கு விளக்குங்கள்.

சுவாமி விமூர்த்தானந்தர்

11 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur