RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 25

08.11.21 07:12 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 25

கேள்வி: இறைவனை மகிழ்விக்க நம் பிரார்த்தனைகள் எப்படி இருக்க வேண்டும்?

-திருமதி காமாட்சி, மதுரை.

பதில்: இன்று கோர மழையும் வெள்ளமும் வந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இது போன்ற ஒரு நேரத்தில் சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஓர் இளந்துறவி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில், “இந்தப் புயலடித்து முடித்தவுடன் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்னை அனுப்புங்கள், இறைவா” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

இதை அறிந்த மற்றொரு துறவி அவரிடம், “இப்படியா ஒருவர் பிரார்த்தனை செய்வார்?” என்று கடிந்துகொண்டார்.

இளம் துறவிக்குக் குழப்பம். சேவை செய்யத்தானே நான் பிரார்த்தனை செய்தேன், அதில் தவறில்லையே?

"இல்லை தம்பி, புயல் வந்து நாசப்படுத்தினால் ஆயிரக்கணக்கில் மக்கள் உணவுக்கும் உடைக்கும் தவிப்பார்கள். அரசைச் சபிப்பார்கள். தொழில் இல்லாமல் திண்டாடுவார்கள். நோய் வந்து சிரமப்படுவார்கள். இவ்வாறு மக்கள் அவதிப்படும்போது சேவை செய்வது மிக அவசியம்.

“ஆனால் உன் பிரார்த்தனை புயல் வருவதற்கு முன்பே இருக்க வேண்டும். புயல் வந்து யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது. இன்னல்கள் வரும் முன்பு பிரார்த்தனை செய்து மக்களைக் காப்பாற்றுவதுதான் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான முதல் சேவை” என்று கூறினார்.

ஒரு தாய் தன் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை முதலில் கவனிப்பது சிறந்ததா? அல்லது குழந்தை நோயில் தவிக்கும்போது கவனிப்பது சிறந்ததா?

2020-ஆம் ஆண்டில் NIVAR புயல் வருமென்று அனைவரும் அச்சுறுத்தினர். அந்தப் புயல் கஜா புயலை விட மோசமாக இருக்கும் என்றும் கூறினர். முதல் நாள் மக்கள் பீதியில் இருந்தார்கள். அதைப் புரிந்து கொண்டு அன்றைய தினம் புயலால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை முன்னிட்டு தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஒரு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையை மனமுருகிச் செய்தோம்.

அன்னை ஸ்ரீ சாரதையின் அருளால் NIVAR புயல் NEVER ஆகி, பெரும் மழையை மட்டும் தந்து போனது. அப்போது மடம் டெல்டா பகுதிகளில் 5000 குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் செலவில் ஒரு வாரத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களை வழங்கியது.

இதனால்தான் இயேசுநாதர் “கவனி; பிறகு பிரார்த்தனை செய்” என்றார். காமாட்சியம்மா, கடவுளை நீங்கள் எப்படி மகிழ்விக்கப் போகிறீர்கள்?

சுவாமி விமூர்த்தானந்தர்

08 நவம்பர், 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur