RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 15

26.02.21 07:58 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 15

திருநீறு அணிவதை இப்போது சிலர் விமர்சிக்கின்றனர். திருநீறு அணிந்தால் கடவுளைக் காண முடியுமா? உன் கஷ்டம் நீங்கிவிடுமா? என்றெல்லாம் பரிகசிக்கிறார்கள். இவற்றை எவ்வாறு சமாளிப்பது?

- ஆசிரியை செல்வி பிரேமா, சென்னை-4.

பதில்: எந்தக் காலத்தில்தான் நல்லவற்றை விமர்சிப்பவர்கள் நம்மிடையே இல்லாமலில்லை?

 

ஒருவரது கருத்துச் சுதந்திரம் அறிவுதாகத்தைத் தூண்டிவிட்டால் நல்லது. ஆனால், அந்தச் சுதந்திரம் அவரது குதர்க்க வாதத்தையும் மந்த புத்தியையும் தம்பட்டம் போட வைத்தால், அதற்குச் சரியான நெத்தியடி பதில் தர வேண்டும். அவரது நெற்றிக்கும் திருநீறு பூச வைக்க வேண்டும்.

 

தங்கள் மத அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதிலும், கடைப்பிடிக்க வைப்பதிலும் இஸ்லாமியரிடமிருந்தும் கிறிஸ்தவரிடமிருந்தும் ஒவ்வோர் இந்துவும் கற்க வேண்டும். அவர்கள் தங்கள் மதச் சின்னங்களைக் காட்டுவதில் கூச்சபடுவதில்லை. மாறாக, நம் பிள்ளைகள்..... சமய விஷயங்களில் பிள்ளைகளாகவே கடைசி வரையில் இருந்து விடுகிறார்கள்.

 


சென்னையில் உள்ள 'விவேகானந்தா கல்வி குழுமம்' மற்றும் உளுந்தூர்பேட்டை, சாரதா ஆசிரமம் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகள் அனைவரும் நெற்றிக்குச் சமயச் சின்னங்களை அணிந்து மங்களமாக வருகிறார்கள்.

 

'நீரில்லாத நெற்றி பாழ்'. சாஸ்திர நெறிப்படி, திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகத்தில் ஒரு முறை ஒரு கிணற்றைக் குனிந்து பார்த்தார். அவரது நெற்றியில் இருந்த ஒரு துளி திருநீறு உள்ளே விழுந்தது. அதனால் அந்தப் பாழும் கிணறு தேவலோகம் போல் மாறியதாக ஒரு புராண வரலாறு உண்டு.

 

துன்பம் எனும் பாழுங்கிணற்றில் விழுந்துப் பழசாகிப் போனவர்கள்,  திருநீரணிந்தால், அவர்கள்  சிவபெருமானின் அருளால் அந்தத் துன்பங்களிலிருந்து விடுபடுவது திண்ணம்.

 

திருநீறுக்குத் தெய்வீகத் தகுதியும் உண்டு; அறிவியல் தன்மையும் உண்டு. தலைக்குள் நீர் கோர்த்துக்கொண்டால் அதை உறிஞ்சும் தன்மை விபூதிக்கு உண்டு. இதனால் விபூதி அணிபவர்களுக்குத் தலைவலி வருவதில்லை. மேலும் பூச்சிக் கடிகளுக்குக்கூட பஸ்மம் சிறந்த மருந்தாக உள்ளது.

 

நமது நாட்டின் வடபகுதியில் தவம் இயற்றும் நாகா சாதுக்கள் உடை அணிவதில்லை. ஆனால் உடம்பு முழுவதும் திருநீறு அணிவார்கள்.

 

உடல் முழுவதும் திருநீறு அணிவதால் கோடைக்காலத்தில் அவர்களது உடலிலுள்ள நீர்ச்சத்து வியர்வையாக மாறி ஆவியாவதில்லை. குளிர்காலத்தில் குளிர்க் காற்று உடலுக்குள் ஊடுருவாமல் விபூதி தடுக்கிறது.

 

ஒருவரது உடல் உஷ்ணத்தைச் சீராக வைத்திருப்பது எவ்வளவு அருமையான ஓர் அறிவியல் உண்மை. இந்த உண்மையை விபூதியைக் கண்டு கேலி செய்பவர்களுக்குச் சொல்லும் தைரியம் உங்களுக்கு உள்ளதா?

 

விபூதியின் ஆன்மீக உண்மை: சாதாரண மனிதன் பல வகையில் அகங்கார ஆட்டம் போடுகிறான். தனது சிறு மதியைத் தானே மெச்சிக்கொண்டு கொக்கரிக்கிறான். ஒரு மாநிலத்தையே விலை பேசி நிலங்களை வாங்க முயற்சித்தவர்கள், செத்த பின் ஒரு சட்டி சாம்பலாகிறார்கள்.

 

நன்றாக வாழ முடிவெடுத்தவர்கள், அவ்வாறு அல்பமாகத் தாங்களும் வெற்றுச் சாம்பலாகப் போய்விடக் கூடாது என்பதற்காக வாழ்க்கையின் அந்திம தத்துவமாக விளங்கும் சாம்பலை- பஸ்மத்தைப் பூசிக் கொள்கிறார்கள்.

 

எல்லாம் மண்ணடா என்ற எதிர்மறை சிந்தனை அல்ல இது.  மரணத்தைச் சரியாக நேசித்தவர்கள்தான் வாழ்க்கையை நிறைவாக வாழ்கிறார்கள்.

 

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இனி நீங்கள் சிவாய நமஹ என்று பக்தியுடன் செப்பித் திருநீறு பூசுங்கள்.

 

நெறியுடன் வாழ்பவன் சிவம் ஆகிறான்; நெறியற்றவன் சவம் ஆவான். சிவம் என்றால் மங்களம்.

 

மேலும், நான் மங்களமானவன் என்று காட்டும் விபூதி தரித்த உங்கள் நெற்றியைப் பிறர் காணும்போது சிவபெருமானின் சிந்தனை அவர்களுக்கு வரும். அந்தப் புண்ணிய செயலைச் செய்வதற்காவது விபூதி பூசுங்கள்; குங்குமம் பூசுங்கள். திருமண் இட்டுக் கொள்ளுங்கள்.

 

திருநீறு / பஸ்மம் / விபூதி என்றால் இறைவனின் திருப்புகழ், அதாவது இறைவனின் மகிமை என்று அர்த்தம். பகவத்கீதை பத்தாவது அத்தியாயம், ஒவ்வொரு பொருளிலும் நபர்களிலும் எவ்வாறு இறைவன் வீற்றிருக்கிறார் என்பதை விரிவாக விளக்குகிறது.

 

மிகச் சிறந்த முறையில் வாழ்க்கை நடத்தியவர்கள் மற்றும் மிகச் சிறந்த பங்களிப்பை உலகிற்கு வழங்கும் யாவரும் இறைவனின் மகிமையை வெளிப்படுத்துகிறார்கள். தனது மகிமைகளை மனிதர்களிடத்தில் இறைவனே காணும்போது அவர் எல்லையற்ற திருப்தி கொள்கிறார். இந்தப் பண்பை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் பல இடங்களில் நீங்கள் காணலாம்.

 

'செய்க செயல், செய்க செயல் சிவத்திடை நின்று...' என்று மகாகவி பாரதி பாடுகிறார். அதுபோல் பக்தியுடன் விபூதியைப் பூசிச் சேவை செய்வதெல்லாம், பகவான் விரும்பும்வண்ணம் நாமே அவரது விபூதியாக மாறுவதற்குத்தான்.

 

விபூதியின் மகிமையை இன்னும் அதிகமாக அறிய வேண்டுமா? இரண்டாம் திருமுறையில், திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தைப் படியுங்கள். பல அற்புத தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

26 பிப்ரவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur