என்னால் இது முடியும்; என்னால் மட்டுமே இது முடியும். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? நான் செய்தேன், நான் மட்டுமே இதைச் சாதிக்க முடியும், வேறு ஒருவராலும் முடியாது.
இவ்வாறு எண்ணுவது சரியா? தவறா? - திரு. பாலமுருகன், சென்னை.
பதில்: இது தவறா என்று கேட்பது சரியா, பாலா?
என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை; என்னாலும் முடியும் என்பது நன்னம்பிக்கை; நான் மட்டுமே இதைச் சாதிக்க முடியும், வேறு ஒருவராலும் முடியாது என்பது பிதற்றல். இயற்கையின் முன்பு காற்றில் திரியும் இலவம்பஞ்சு விதை தன்னைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டால் இப்படித்தான் கூறும்.
அலுவலகத்தில் ஒரு பெரிய ப்ராஜக்ட் உங்களுக்குக் கிடைக்கிறது. அதை நீங்கள் திறம்படச் செய்து விட்டீர்கள். அது பற்றிப் பெருமிதம் கொள்வதில் தவறில்லை; ஆனால் தம்பட்டம் அடித்துக் கொண்டால்..... இயற்கை முன்பு இலவம் பஞ்சு நிலை.
இயற்கையும் இறைவனும் எவ்வாறு நம்மை இயங்க வைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பரம்பொருளின் பேரியக்கத்தின் ஒரு சிறு திவலை நாம் என்பதை உணர்ந்தால், அடடா, அதுவே ஓர் அனுபவ அறிவாகும்.
உங்கள் தட்டில் சோறு வருவதற்குப் பின்னே எவ்வளவு பேரின் உழைப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
விதைக்கும் விவசாயி, போரடிக்கும் உழைப்பாளி, அதைச் சந்தைக்குக் கொண்டு வரும் மூட்டைத்தூக்கி, விவசாயிடமிருந்து வாங்கிக் கொள்முதல் செய்பவர், அங்கு கமிஷன் பார்ப்பவர் என்று பலர் உங்களுக்காக உங்கள் முகம் பார்க்காமலேயே வேலை செய்கிறார்கள்.
அரிசி, பெரும் வியாபாரியிடமிருந்து சிறு வியாபாரிக்கு வரும். பிறகு மளிகைக் கடைக்கு வரும். அதை உங்கள் வீட்டுச் சமையற்காரரோ, உங்கள் மனைவியோ வாங்கி வருவார்.
இவ்வாறு, சேற்றில் ஊறிய மஞ்சள் நிற நெல் உடைந்து வெள்ளை அரிசியாகி உங்கள் தட்டிற்கு வருவதற்கு நீங்கள் பெரிதாக என்ன செய்து விட்டீர்கள்? நமக்காக விதைத்தவன் முதல் சமைத்தவன் வரைக்கும் உள்ளவர்களுக்காக நாம் என்ன செய்துவிட்டோம்? இயற்கை கொடுக்கும் உணவை உண்பதற்காக ஏதோ ஒரு சிறு தொகையை நாம் செலுத்துகிறோம், அவ்வளவு தான்.
இயற்கையும் இறைசக்தியும் இவ்வளவு பெரும் காரியத்தை அமைதியாக உங்களுக்காகச் செய்கின்றன.
சரி, நமது உடலுக்குள்ளே என்ன நடக்கிறது?
நீங்கள் சாப்பிடுகிறீர்கள். தட்டில் இருப்பது நாக்கிற்குப் போகிறது. அந்த ஓர் அடி தூர வேலையைத்தான் நாம் செய்கின்றோம். உணவின் சத்து நரம்புகளுக்கும் தசைகளுக்கும் மூளைக்கும் ரத்தத்திற்கும், ஏன், நல்ல உணவு நல்ல மனது அமைவதற்கும் பயன்படுகிறது.
வேண்டியவை சத்தாகிறது, வேண்டாதவை மலமாகிறது. இதில் நம் பங்கு என்ன இருக்கிறது?
இது புரிந்தால் இயற்கையின் முன்பு யாரும் வினயத்துடனும் நன்றி உணர்வுடனும் நிற்போம்.
கவனித்துப் பாருங்கள், இவ்வளவு பெரும் காரியங்கள் நமக்கு உள்ளேயும் வெளியேயும் அனுதினமும் தவறாமல் நடந்துகொண்டிருக்கிறது.
இதைக் கவனிக்கப் பொறுமையும் பொறுப்பும் இல்லாமல், ஏதோ நம் மூலமாக நடந்த ஒன்றை, நான்தான் செய்தேன் என்று கூறி மார்தட்டிக் கொள்வது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா? இந்தச் சிறுமையைக் கண்டு நல்லவர்கள் பரிகசிப்பதற்கு வாய்ப்பை நீங்கள் தரலாமா? வேண்டாமே பாலா ப்ளீஸ்.
சுவாமி விமூர்த்தானந்தர்
25 பிப்ரவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்