சில நாட்களுக்கு முன்பு நான் எனது கணவரை இழந்துவிட்டேன். யாரிடமும் என் கவலையைச் சொல்லி அழ முடியவில்லை. நான் ஒரு ஸ்ரீராமகிருஷ்ண பக்தை. குருதேவரிடம் சென்று அழுதால்தான் எனக்கு உண்மையான ஆறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற சமயங்களில் கோவிலுக்குச் செல்வது பாவம் என்கிறார்களே? நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று வழிபடலாமா? - திருமதி சுதா வெங்கடேஷ், ரெட்டியார் பாளையம்.
பதில்: உங்கள் கணவரின் ஆன்மா சாந்தி அடையவும் உங்களுக்கு நிம்மதியும் தைரியமும் வழங்கவும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
பூஜா விதிகளில் அதிக கவனம் செலுத்தும் பாரம்பரியக் கோவில்களுக்குத் தீட்டுக் காலங்களில் செல்வதில் தடை உள்ளது.
எல்லாவிதமான எதிர்மறை எண்ணங்களையும் சக்திகளையும்கூட ( Negative Thinking and Negative Forces ) நெறிப்படுத்தும் ஞானாக்னி பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். அவர் சடங்குகளை மதித்தவர், அதைவிட அதிகமாக மனித மனங்களை மேம்படுத்துவதில் தனி அக்கறை கொண்டவர். ஒருவருடைய மரணம் தரும் இழப்பு, சோகம், துக்கம் இவையெல்லாம் அவரது நெருங்கிய உறவினர்களை மிகவும் பாதிக்கச் செய்கிறது. பாதிப்புக்குள்ளான மனங்களுடன் அவர்கள் சோகமாக வாழ வேண்டியிருக்கிறது.
அந்தச் சோகமான நேரத்தில் தங்களது இஷ்டதெய்வத்திடம் பிரார்த்தனை செய்வது பெரிய ஆறுதலையும் நம்பிக்கையையும் நிச்சயமாக வழங்கும். ரத்த சம்பந்தப்பட்ட மனித உறவுகளின் ஆறுதலைவிட ஆண்டவனின் அருள் தரும் நம்பிக்கை ஒருவரைத் துக்கமான நேரத்தில் சரியான வகையில் நிலைநிறுத்தும்.
சாவு வீட்டில் உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாமல் சோகத்தை மட்டுமே பலரும் பேசுவார்கள். இறந்தவரின் நல்ல குணங்களைப் பற்றிப் பேசிப் பாராட்டுவது அரிது. சாதாரண மக்கள் தங்களது பாசத்தையும் அன்பையும் ஓவென்று அழுது காட்டி நிரூபிக்கிறார்கள்.
ஆனால் பக்தர்கள் குறிப்பாக, ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் தங்களது வாழ்க்கையில் வரும் லாப நஷ்டங்களில் ஸ்ரீராமகிருஷ்ணரைக் கெட்டியாகப் பற்றிக் கொள்வார்கள். ஆதலால் அவர்கள் சோகத்தினால் ஒரேடியாக ஆடிப் போய் விடுவதில்லை.
'குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்' என்ற நூலில் பகுதி 2, பக்கம் 32-இல் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.
வயதான தந்தை ஒருவர் திடீரென்று தனது வாலிப வயது முதல் மகனை இழந்துவிடுகிறார். மகனின் ஈமக்கிரியை முடிந்தவுடன் மிகவும் வேதனையுடன் மணிமோகன் என்ற அந்தப் பக்தர் நேராக ஸ்ரீராமகிருஷ்ணரைச் சென்று தரிசிக்கிறார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் முதலில் அவருக்குத் தைரியத்தையும் வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகிறார். பிறகு "மணி,.... தாங்க இயலாத உறவினர்களின் வேதனை இறைவனிடம் சரண் புகுந்தவர்களை ஒரேயடியாக மூழ்கடித்து விடுவதில்லை. சிறிதுநேரம் தத்தளித்த பின் அவர்கள் மனதின் சம நிலைக்கு வந்துவிடுகிறார்கள். சாதாரண மக்கள்தான் ஒரேயடியாக நிலைகுலைந்து விடுகிறார்கள்..." என்று அபயம் அளிக்கிறார்.
சோகமான சமயத்தில் நமது குருநாதர் மற்றும் இஷ்டதெய்வம் ஆகியோர்தான் நமக்குச் சரியான ஆறுதலையும் தெளிவான மன உறுதியையும் வழங்க முடியும்.
குருதேவரின் இந்த அருளைப் பெற்றதும் மகனை இழந்த மணிமோகன் ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதம் பணிந்து, "ஐயனே, இதற்காகத்தான் நான் தங்களை நாடி வந்தேன். தங்களைத் தவிர வேறு யாராலும் எனக்குள் எரிந்துகொண்டிருக்கும் புத்திர சோகம் என்ற இந்தத் துயரத்தை அணைக்க இயலாது என்பதை நான் அறிவேன்" என்றார்.
ஆதலால் சகோதரி, உங்களது சோகத்தை ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்து விடுங்கள். இல்லை என்றால் உங்கள் உறவினர்கள், அவர்கள் நல்லவர்கள் என்றாலும் உங்கள் சோகத்தைத் தீர்க்க முடியாதவர்கள்; வார்த்தைகளாலும் உணர்ச்சிகளாலும் அவர்கள் உங்களை மனதளவில் பலவீனப்படுத்த வாய்ப்புண்டு.
மரண சோகம் என்பது திரவ பாதரசம் போன்றது. உறவினர் இறந்துவிட்டதால் அந்தப் பாதரசம் கீழே கொட்டிவிட்டது. அதைக் கைகளினால் அள்ளினால் உங்கள் கைகள் பிசுபிசுத்துப் போகும். ஆனால் திரவ பாதரசத்தை உறிஞ்சி, ஆவியாக்கி விட்டாலோ, அந்த ஆவி நமக்கு ஒளியைத் தரும் விளக்காகிவிடும்.
உங்களது கணவர் மறைந்ததை எண்ணி நீங்கள் அழுது கொண்டே இருந்தால் உங்களது வாழ்க்கை சோகமயமாகிவிடும். அதை விடுத்து, சோகம் என்ற ஆசான் தந்துள்ள அனுபவத்தை உங்களது வாழ்க்கையின் ஒரு பாடமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் உண்மையான தலைவனான கடவுளிடம் மனதைத் திருப்புங்கள். அப்போது உங்களது சோகம் என்ற திரவ பாதரசம் ஆவியாகி நல்ல அனுபவமாக மாறி வாழ்க்கைக்கு மெருகூட்டும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அன்பினால் நமது சோகங்களையும் மோகங்களையும் ஆவியாக்கக் காத்திருக்கிறார். அந்த அனுபவத்தை நீங்களும் பெற்றிட அவரது ஆலயத்திற்கு இன்றே ஏகுங்கள்.
சுவாமி விமூர்த்தானந்தர்
23 பிப்ரவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்